ஸ்தாபக பதிவாளருக்கு கௌரவம்
ஸ்தாபக பதிவாளருக்கு கௌரவம்

ஸ்தாபக பதிவாளர் ஜௌபர் சாதிக்

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 14 ஆவது பொது பட்டமளிப்பு விழாவின் இறுதி நாளான 10 ஆம் திகதி அமர்வில் இப்பல்கலைக்கழகத்தின் ஸ்தாபக பதிவாளர் ஜௌபர் சாதிக் கௌரவ கலாநிதி பட்டம் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார்.

ஸ்தாபக பதிவாளர் ஜௌபர் சாதிக் பற்றி பல்கலைக்கழக ஊடகப் பிரிவு தலைவரும், பேராசிரியருமான ரமீஸ் அப்துல்லா எழுதியுள்ள கட்டுரை.

(பேராசிரியர் றமீஸ் அப்துல்லா)

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உருவாக்கம் இலங்கைப் பல்கலைக்கழகங்களின் வரலாற்றில் மிக வித்தியாசமானதாகும். இன ரீதியான முரண்பாட்டுக்குள் அகப்பட்டுக் கொண்ட முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் தமது உயர் கல்வியைத் தொடர்வதற்காக ஒரு புகலிடத்தை நாடிய போது அதற்கான தீர்வாக அப்போதைய அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டதுவே தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஆகும்.
தென்கிழக்குப் பல்கலைக்கழகம் என்ற ஒன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும், என்ற கருதுகோளைத் தவிர அதற்கென்று காகிதாதிகளோ, அலுவலகமோ, சொந்தமான ஒரு காணித் துண்டோ இருக்கவில்லை. அப்போதைய ஜனாதிபதியின் தீர்மானமும் அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரஃபின் கனவுகளுமே எஞ்சி இருந்தது. இத்தகைய சூழ்நிலையில் இப்பல்கலைக்கழகத்தினை அர்த்தப்படுத்தியவர்களின் வலது கரம் அப்போதைய பணிப்பாளர் எம்.எல்.ஏ. காதர் அவர்கள் என்றால் அதன் இடது கரம் ஏ.எல். ஜௌபர் ஸாதிக் அவர்கள்.

அலியார் லெப்பை ஜௌபர் ஸாதிக் சம்மாந்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டு கொழும்பில் வாழ்ந்து வருகின்றார். அந்தக் காலத்தில் மிகப் பிரசித்தம் பெற்ற அலியார் லெப்பை ஆசிரியரின் மகன் இவர். இப் பிரதேசத்துப் பல புகழ் பெற்ற பொறியியலாளர்களின் நல்லாசிரியராக பெயர் பெற்றவர் ஜௌபர் ஸாதிக். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானபீட உயர்தர இரண்டாம் வகுப்பில் சித்தியடைந்த கையோடு பல்கலைக்கழக புகுமுக மாணவர்களுக்கு நல்லாசிரியராக இருந்து பலரை பல்கலைக்கழகத்திற்கு கற்க அனுப்பியவர். 1979இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் போதனாசிரியராக கடமையாற்றிய இவர் பின்னர் 1981 – 1984 வரை பட்டதாரி ஆசிரியராக அட்டாளைச்சேனை மத்திய மகா வித்தியாலத்தில் கடமையாற்றினார். இக்காலக்கட்டத்தில் சம்மாந்துறைத் தொழிநுட்பக் கல்லூரியில் வருகைதரு போதனாசிரியராகவும் கடமையாற்றினார். மேலும், கிழக்குப் பல்கலைக்கழகம் இலங்கை திறந்த பல்கலைக்கழகம் முதலானவற்றில் பகுதி நேர, முழு நேர வருகைதரு விரிவுரையாளராகப் பணியாற்றியமையும் குறிப்பிடத்தக்கது.

பின்னர், முகாமைத்துவத்திலும் பட்டப்பின் படிப்பு டிப்ளோமாவை பூர்த்தி செய்த இவர் ஆசிரியத் தொழிலை விட்டும் பல்கலைக்கழக நிருவாக சேவையாளராக தன் பணியினைத் தொடங்கினார். இலங்கையில் இனச்சங்காரம் மேலோங்கிய காலத்தில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உதவிப் பதிவாளராக தனது கடமையினைத் தொடங்கினார். அப்போது கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கடமையாற்றுவது உயிரைப் பணயம் வைக்கும் காரியமாகும். பின்னர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் உதவிப் பதிவாளராக கடமையாற்றியதோடு மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட உதவிப் பதிவாளராக பதவி உயர்வு பெற்று செயற்பட்டார். அப்போது 1995இல் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் உருவாகிய போது அதன் ஸ்தாபக பதிவாளராக பதவியேற்றுக் கொண்டார்.

இப்பல்கலைக்கழகத்தின் கல்வி, நிருவாக நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்து அதன் ஒவ்வொரு செயற்பாட்டிலும் உபவேந்தரோடு இணைந்து செயற்பட்டார். பூச்சியத்திலிருந்து நிருவாக நடவடிக்கைகளை அவர் ஒழுங்குபடுத்தினார். கல்வி, கல்விசாரா நடவடிக்கைகளின் நிருவாக ஒழுங்குகள் இவராலே ஸ்தாபிக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தின் சொத்துக்களையும் பதிவுகளையும் அவர் ஒழுங்குபடுத்தினார். சட்ட ரீதியான பல்கலைக்கழக அந்தஸ்தினை இதற்கு பெற்றுக் கொடுத்தார். மாணவர், ஆசிரியர் தலையிடிகளை மனிதாபிமான ரீதியாக கையாண்டார். சில பொழுதுகளில் உயிர் அச்சுறுத்தலையும் அவர் எதிர் கொண்டார். இத்தகைய சூழலில்தான் அவர் ஸ்தாபக பதிவாளராக தன் கடமைகளை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நிறைவேற்றினார்.

2003ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திலும் பின்னர் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்திலும் பதிவாளராகக் கடமையாற்றி 2018இல் ஓய்வு பெற்றார். அவரது ஒய்வுக்குப் பின்னரும் பல்கலைக்கழகப் பணிகளிலே தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம் முதலானவற்றில் பேரவை உறுப்பினராகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப குழுக்களில் செயற்பாட்டாளராகவும் பணியாற்றுகின்றார்.

இலங்கை முஸ்லிம்களில் பல்கலைக்கழக சேவையில் உயர்ந்த அந்தஸ்தினைப் பெற்றுக்கொண்ட ஜௌபர் ஸாதிக் இன பேதங்களற்ற ஒரு சேவையாளர்; விசுவாசமிக்க பணியாளர்; மிக நேர்மையான பதிவாளர். தான் கடமையாற்றிய இடங்களில் ஊழலுக்குத் துணை போகாது உயர்ந்த நாமத்துடன் பல கல்விமான்களின் பாராட்டினையும் அன்பையும் பெற்றுக்கொண்டவர். அவரை ஸ்தாபக பதிவாளராகப் பெற்றக் கொண்டதில் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் பெருமை அடைகிறது.

இவ்வாறு பல்கலைக்கழக நிருவாக சேவையில் அர்ப்பணமிக்க பணியினை ஆற்றி தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினை நிருவாக ரீதியாக ஒழுங்குபடுத்தி, அளப்பரிய சேவையாற்றி, இளைப்பாறிய பதிவாளர் ஏ.எல். ஜௌபர் ஸாதிக் அவர்களுக்கு அப் பல்கலைக்கழகம் கௌரவ இலக்கிய கலாநிதி பட்டத்தினை வழங்குகிறது. தென்கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றில் முதன் முதலாக கௌரவ கலாநிதிப் பட்டத்தினைப் பெற்றுக் கொண்டவர் அதன் ஸ்தாபகர் மர்ஹ_ம் எம்.எச்.எம். அஷ்ரஃப். அதன்பின்னர் அதன் ஸ்தாபக உப வேந்தர் எம்.எல்.ஏ. காதர் அவர்கள் அப்பட்டத்தினைப் பெற்றுக்கொண்டார். அதேபோல எதிர்வரும் 10.02.2022 அன்று தென்கிழக்குப் பல்கலைக்கழகம் தனது 14வது பட்டமளிப்பு விழாவில் ஸ்தாபக பதிவாளருக்கும் கௌரவ கலாநிதிப் பட்டத்தினை வழங்குவதன் மூலம்; தனது பிறவிக்; கடனை தீர்த்துக் கொள்கிறது.

ஸ்தாபக பதிவாளருக்கு கௌரவம்

ஏ.எல்.எம்.சலீம்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House