
posted 13th February 2022
கிறிஸ்தவ சொரூபம் அமைக்கப்பட்டமைக்கு கடுமையான கண்டனம்
திருக்கேதீச்சர ஆலயத்தின் வளைவு உடைக்கப்பட்ட வீதியின் முகப்பில் கிறிஸ்தவ சொரூபம் திடீரென அமைக்கப்பட்டமைக்கு அகில இலங்கை சைவ மகா சபை கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் அகில இலங்கை சைவ மகா சபை வெளியிட்ட அறிக்கையில்;
வரலாற்று பெருமைமிகு பாடல் பெற்ற ஈச்சரமான திருக்கேதீச்சரத்தில் அதன் தனித்துவத்தை சிதைக்கும் வகையில் சைவர்களின் மனதை மீள மீள புண்படுத்தும் வகையில் திருக்கேதீச்சர வளைவு உடைக்கப்பட்ட வீதியின் முகப்பில் மிகப் பெரிய கிறிஸ்தவ சொரூபம் அமைக்கப்பட்டு நேற்று முன்தினம் திறக்கப்பட்டுள்ளது.
வழக்கு நீதிமன்ற நிலுவையில் உள்ள சமயம் இதனை உயர் மத பீடங்களின் ஆளுகையின் கீழ் இயங்கும் அண்மைய ஆண்டுகளில் பெருமெடுப்பில் பண்டைய ஒப்பந்த நடைமுறைகளுக்கு மாறாக கட்டப்பட்ட தேவாலாய நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
மன்னார் உயர் அரச அதிகாரிகளுக்கு முன்கூட்டியே அறிவித்தும் சொரூபம் அமைக்கபப்பட்டுள்ளதாக கூறப்படுவது மிகுந்த அவதானத்துக்குரிய விடயமாகும்.
இது தொடர்பாக திருக்கேதீச்சர ஆலய நிர்வாகம் பொலிஸ் முறைப்பாடு ஒன்றை செய்துள்ள நிலையில் வரலாற்று கால தமிழ்ச் சைவர்களின் மரபுரிமையான திருக்கேதீச்சர திருக்கோவில் நிர்வாகத்திற்கு ஒட்டுமொத்த தமிழ் சைவர்களின் ஆதரவை வெளிப்படுத்தி நிற்கின்றோம்.
மத நல்லிணக்கத்தை பாதிக்கும் இச் செயலிற்கு உறுதுணை வழங்காது மன்னார் ஆயர் இல்லம் சொரூபத்தை திருக்கேதீச்சர நுழைவாயிலான அவ்விடத்திலிருந்து அகற்ற தேவாலாய நிர்வாகத்தை பணிக்க வேண்டும்.
அரச உயர் அதிகாரிகள் இனியும் அசமந்த போக்குடன் நடந்து கொள்ளாது மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும், தொல்லியல் மரபுரிமைகளில் மாற்றம் செய்யும் , தனித்துவத்தை சீர்குலைக்கும் செயற்பாடுகளை தடுத்து நிறுத்த வேண்டுவதுடன் சர்ச்சைக்குரிய சொரூபத்தை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சைவத்தமிழர்கள் சார்பாக அகில இலங்கை சைவ மகா சபையினராகிய நாம் கேட்டு நிற்கின்றோம் என்றுள்ளது.
மேலும், திருக்கேதீச்சர ஆலயத்தின் வளைவு, மிகவும் பழமைவாய்ந்த, புகழ்பெற்ற லூர்து மாதா கோவில் முன்பாக அமைக்கப்பட்டு உடைக்கப்பட்டமை இங்கு நினைவு கொள்ள வேண்டியதொன்றாகும்.
ரோசி சேனாநாயக்கா குழுவினர் யாழ்ப்பாண வருகை
கொழும்பு மாநகர முதல்வர் ரோசி சேனாநாயக்கா உள்ளிட்ட குழுவினர் எதிர்வரும் 18 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும் வலி.தென் மேற்கு பிரதேச சபைகளிற்கு பயணிக்கவுள்ளதோடு இரு சபைகளுடன் தமது அனுபவங்களை பகிரும் வகையிலேயே இந்த பயணம் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 18 ஆம் மற்றும் 19 ஆம் திகதிகளில் இடம்பெறும் இந்தப் பயணத்தின்போது மானிப்பாய் செல்லமுத்து மைதானத்தில் சிநேகபூர்வ துடுப்பாட்டமும் இடம்பெறவுள்ளது.
இருநாள் பயணமாக கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் என 70 பேர் இந்த பயணத்தில் பங்குகொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
குத்தி உடைக்கப்பட்ட 15 மில்லியன் ரூபாய் பெறுமதியான எக்ஸ்ரே கதிர் இயந்திரம்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பொருத்தப்பட்டுள்ள 15 மில்லியன் ரூபாய் பெறுமதியான எக்ஸ்ரே கதிர் இயந்திரம் வேண்டுமென்றே குத்தி உடைக்கப்பட்டதா என கண்டறிய பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அதி நவீன எக்ஸ்ரே கதிர் இயந்திரம் மிக அண்மையில் பொருத்திய நிலையில் அதில் ஒரு முக்கிய பகுதி வேண்டுமென்றே குத்தி உடைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் வைத்தியசாலை நிர்வாகத்தினால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் முன்பும் ஓர் தடவை இயந்திரத்தின் முக்கிய பகுதி ஒன்று களவாடப்பட்டபோதும் அது இறுதிவரை கண்டறியப்படவில்லை. இதேநேரம் தற்போது புதிய இயந்திரம் பொருத்தப்பட்டு 4 தினங்கள் மட்டுமே இயங்கிய நிலையில் ஒரு பகுதியில் உடைவு காணப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் வைத்தியசாலை நிர்வாகம் செய்த முறைப்பாட்டை அடுத்து பொலிஸார் தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று வெடித்த எரிவாயு அடுப்பு
வவுனியா சிங்கள பிரதேச செயலக வீதியில் உள்ள வீடு ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது;
வவுனியா சிங்கள பிரதேச செயலக வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள வீடு ஒன்றில் நேற்றுமுன்தினம் இரவு சமையல் செய்த பின்னர் சமையலறை கதவினை மூடிவிட்டு தூங்கச்சென்றுள்ளனர்.
இதன் பின்னர் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தேநீர் தயாரிப்பதற்காக சமையல் அறையை திறந்த போது எரிவாயு அடுப்பு வெடித்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மீட்கப்பட்ட திருட்டு மோட்டார் சைக்கிள்
வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இனந்தெரியாத நபர்களினால் திருடிச் செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று ஞாயிற்றுக்கிழமை(13) காலை தம்பசிட்டி கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு முன்பாக இருந்து மீட்கப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை 10 ஆம் திகதி மேலைப் புலோலி தம்பசிட்டி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேற்படி மோட்டார்சைக்கிள் இனந்தெரியாத நபர்களால் திருடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(13) தம்பசிட்டி கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு முன்பாக மேற்படி மோட்டார் சைக்கிள் அனாதரவாக காணப்படுவதாக பருத்தித்துறை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் பொலிசார் மோட்டார் சைக்கிளை மீட்டுச் சென்றுள்ளனர்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House