பல்வகைச் செய்தித்துணுக்குகள்

வைத்தியர்கள், தாதியர்கள் பணிப்புறக்கணிப்பு

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் தாதியர்கள் மற்றும் வைத்தியர்கள் சம்பளப் பிரச்னை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

தற்போது 3000 ரூபாவாக உள்ள விசேட கடமைக் கொடுப்பனவை 10000 ரூபாவாக உயர்த்துதல், ஆசிரியர் சேவை சம்பள உயர்வின் மூலம் தாதிய சேவைக்கு ஏற்பட்டுள்ள சம்பள முரண்பாட்டைத் தீர்த்தல், தொழில்வல்லுநர் பட்டதாரிகளுக்கு திருத்தியமைத்த சம்பள அளவுத்திட்டத்தை நிர்ணயத்துடன் தகுந்த பதவி வாய்ப்புக்களைக் கிடைக்கச் செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த பணிப்புறக்கணிப்புப் போராட்டம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு, கிளினிக் சேவை, என்பனவற்றின் சேவைகளை பெற்றுக்கொள்வதில் நோயாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்தனர்.

இந்த பணிப்புறக்கணிப்புப் போராட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பூசகர் கடத்தப்பட்டு நகைகள் கொள்ளை

பூசகர் ஒருவரை கடத்திச் சென்று அவரிடம் இருந்த நகைகளை கொள்ளையிட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பளை பகுதியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (06) வீதியோரமாக நின்ற பூசகரை கடத்திச் சென்று அவரிடம் இருந்த ஒன்றரை பவுண் தங்க சங்கிலி மற்றும் மோதிரம் என்பன கொள்ளையிடப்பட்டதாக பருத்தித்துறை பொலிசில் முறையிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசார் நேற்று திங்கட்கிழமை (07) சந்தேக நபர் ஒருவரை கைது செய்தனர்.

மேலும் சிலர் தலைமறைவாகி உள்ள நிலையில் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டு வருகின்றனர்.

பல்கலைக்கழக இரு மாணவிகள் கைகலப்பு

யாழ். பல்கலைக்கழகத்தின் இரு மாணவிகள் மோதிக்கொண்டதில் ஒருவர் காயமடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பிரிவைச் சேர்ந்த மாணவி ஒருவரும், மருத்துவபீடத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரும் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வாடகை அறையில் தங்கியிருந்துள்ளனர்.
இந்நிலையில், கலைப்பீட மாணவி ஒருவர் அடிக்கடி தொலைபேசியில் பேசி வருவதால் தனது கற்றலுக்கு இடையூறாக இருக்கின்றது என மருத்துவபீட மாணவி பல தடவைகள் சொல்லியுள்ளார்.

நேற்று முன் தினம் இரவு கலைப்பீட மாணவி அதிக நேரம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது மருத்துவபீட மாணவி இரண்டு, மூன்று தடவைகள் தனது கற்றலுக்கு இடையூறாக இருப்பதாகச் சுட்டிக்காட்டியபோதும், கலைப்பீட மாணவி அதனைப் பொருட்படுத்தவில்லை.

கோபமடைந்த மருத்துவபீட மாணவி தன்னுடைய தொலைபேசியைக் கலைப்பீட மாணவியின் முகத்தில் எறிந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்ட நிலையில் நண்பர்களின் தலையீட்டால் சமரசம் செய்யப்பட்டது.

எனினும், இந்தத் தாக்குதலில் காயமடைந்த கலைப்பீட மாணவி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

35 லீற்றர் கசிப்புடன் ஒருவர் கைது

சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியில் கசிப்பு காய்ச்சிக் கொண்டிருந்த 32 வயது நபர் ஒருவர் 35 லீற்றர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வட்டுக்கோட்டை பொலிஸாரும் இராணுவ புலனாய்வு பிரிவினரும் இணைந்து இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

வீட்டுக்குள் பின்னால் உள்ள கோழிக்கூட்டுக்குள் இவ்வாறு கசிப்பு காய்ச்சும் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது கசிப்பு காய்ச்சுவதற்கு பயன்படுத்திய உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தும் நடவடிக்கைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



அத்துமீறிய மீன்பிடித்தவர் சிறைப்பிடிக்கப்பட்டார்கள்

வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது வடமராட்சி மீனவர்களால் சிறைப்பிடிக்கப்பட்டு கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட இந்திய மீனவர்கள் 21 பேரின் விளக்கமறியல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை நீதிமன்றில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது நீதிபதியால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
குறித்த மீனவர்களில் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில் அவர் இயக்கச்சி கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

குறித்த மீனவர்கள் 21 பேரிடமும் வாக்குமூலம் பெறுவதற்கான அனுமதியை யாழ்.சிறைச்சாலைகள் அத்தியட்சகருக்கு நீதிபதி வழங்கினார்.
அதேவேளை, இந்திய மீனவர்களிடம் இருந்து 100 கிலோ மீன்கள் கைப்பற்றப்பட்டிருந்த நிலையில் அவற்றை விற்பனை செய்து அதில் வரும் பணத்தை நீதிமன்றில் ஒப்படைக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

எதிர்வரும் 21ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு வரும்போது மீனவர்கள் 21 பேரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் உத்தரவிடப்பட்டது.

2019ல் கைது செய்யப்பட்ட 8 பேருக்கு பிணை வழங்கப்பட்டது

குண்டுகளை தம் வசம் வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தில் 2019 ஆண்டு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 பேருக்கு வவுனியா நீதிமன்றம் நேற்று பிணை வழங்கியுள்ளது.

2019 ஜனவரி மாதம் 5ஆம் திகதி புளியங்குளம் பொலிஸாரால் கிளைமோர் குண்டை வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 3 பெண்கள் மற்றும் 5 ஆண்கள் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இதில் 9 ஆவது சந்தேக நபரான ஆனந்தராஜா என்பவர் கைது செய்யப்படாத நிலையில் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
குறித்த 8 பேருக்கும் ஆதரவாக சி. எச். ஆர். டி நிறுவனம் சட்ட உதவியை வழங்கியிருந்தது. இந்த நிறுவனத்தின் ஊடாக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கலும் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஆலோசனை சபைக்கு குறித்த விடயம் விசாரணைக்காக பாரப்படுத்தப்பட்டு விசாரணை நடத்தப்பட்ட நிலையில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இதன் பலனாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் 7:1 பிரிவின் பிரகாரம் சட்டமா அதிபரினால் பிணையில் விடுவிப்பதற்கான சம்மத கடிதம் நீதிமன்றத்திற்கு அனுப்பட்டிருந்தது.

இதனையடுத்து தடுத்து வைக்கப்பட்டவர்கள் சார்பில் வவுனியா நீதிமன்றத்தில் சட்டத்தரணி செ.கேதீஸ்வரன் ஆஜராகி குறித்த கடிதம் தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதன் பிரகாரம் 8 பேரும் பதில் நீதிபதி க.தயாபரனால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

கொரொணாத் தொற்று அப்டேற்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 16 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் ஒருவருமாக வடக்கில் நேற்று திங்கட்கிழமை 17 பேர் புதிய தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

யாழ். போதனா மருத்துவமனை, யாழ். பல்கலைக்கழக ஆய்வுகூடங்களில் நடத்தப்பட்ட பி. சி. ஆர். சோதனையிலேயே இந்த விடயம் வெளியானது.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் 83 பேரின் மாதிரிகள் பி. சி. ஆர். சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்படி, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் 6 பேருக்கும், பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் இருவருக்குமாக யாழ்ப்பாணத்தில் 8 பேருக்கும், கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையில் ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 48 பேருக்கு நடத்தப்பட்ட பி. சி. ஆர். சோதனையில் 8 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையை சேர்ந்தவர்களாவர்.

பல்வகைச் செய்தித்துணுக்குகள்

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House