
posted 2nd February 2022
நிந்தவூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட அட்டப்பள்ளம் பிரதேச மக்களின் நீண்டகால கோரிக்கையான பொது நூலக கோரிக்கை இன்று புதன்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது.
நிந்தவூர் பிரதேச சபையிடம் அட்டப்பள்ளம் பிரதேச மக்கள் விடுத்துவந்த கோரிக்கையின் பயனாக பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் எடுத்துக்கொண்ட பெருமுயற்சியின் பயனாக இந்த நூலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அட்டப்பள்ளம் சிங்காரபுர மாரியம்மன் ஆலயத்திற்கு முன்பாக நீண்டகாலமாக தூர்ந்த நிலையில் இருந்து வந்த கட்டிடம் புணரமைப்புச் செய்யப்பட்டு அதில் பொது நூலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இப் பொது நூலகத்தின் திறப்பு விழா இன்று தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த திறப்பு விழாவில் அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எஸ்.எல்.ஏ. கமல் நெத்மினி பிரத அதிதியாக கலந்து கொண்டு நூலகத்தை வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
நிகழ்வில் நிந்தவூர் பிரதேச செயலாளர் ஏ.எம். அப்துல் லதீப், பிரதேச சபை உப தவிசாளர் வை.எல். சுலைமா லெப்பை, அட்டப்பள்ளம் பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சபை உறுப்பினர் திருமதி. கே. சுதாமதி, சபைச் செயலாளர் திருமதி. திலகா பரமேஸ்வரன் நிந்தவூர் ஜும்ஆப்பள்ளிவாசல் நம்பிக்கையாளர்சபை தலைவர் எஸ்.எம்.பீ. பாறூக் உட்பட சபை உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கௌரவ அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கமல் நெத்மினி பொது நூலகத்தை திறந்து வைத்தார்.
உரையாற்றிய பலரும் அட்டப்பள்ளம் பிரதேச மக்களின் நிவர்த்திக்கப்பட்ட நீண்டகால கோரிக்கையான பொது நூலகத்தை திறந்து வைப்பதற்கு பிரதேச சபைத் தவிசாளரும் அதற்கு உறுதுணையாகச் செயற்பட்ட சபை உறுப்பினர்களும் உத்தியோகத்தர்களையும் பெரிதும் பாராட்டினர்.
இதேவேளை இப்பொது நூலகத்திற்கு எதிராகவுள்ள அட்டப்பள்ளம் சிங்காரபுர மாரியம்மன் ஆலய வளாகத்தில் பிரதேச மக்கள் பலர் திரண்டு அமைதி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றிலும் கலந்து கொண்டனர்.
இந்த நூலகத்திற்கு பொது நூலகம் என்று இல்லாது சித்தி விநாயகர் பொது நூலகம் என பெயரிடவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து அவர்கள் இந்த அமைதி ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இவர்கள் பல்வேறு வாசகங்களைக் கொண்ட சுலோக அட்டைகளை ஏந்தி இருந்ததுடன் ஆலய தலைவர் கே. கோபாலன் இது தொடர்பான மகஜர் ஒன்றை உள்ளுராட்சி உதவி ஆணையாளரிடம் விழாப்பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது வருகை தந்து கையளித்தார்.
இன நல்லுறவுக்கு களங்கம் ஏற்படுத்தாதீர், தொன்மை வாய்ந்த சித்தி விநாயகர் சன சமூக நிலைய ஞாபகார்த்தமாக நூலகத்திற்கு பெயரிடவேண்டும், எமது இருப்பை அழிக்காதீர் என்பன போன்ற வாசகங்களைக் கொண்ட சுலோக அட்டைகளை இந்த அமைதி ஆட்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ஏந்தியிருந்தனர்.
திறப்பு விழா பொதுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய தவிசாளர் தாஹிர் நிலமைகளை புரிந்து கொள்ளாத உண்மை நிலையை விளங்கிக் கொள்ளாத சில தலைவர்கள் எனப்படுவோர் மக்களை பிழையாக வழிநடாத்துவதாகவும், அட்டப்பள்ளம் பிரதேச மக்களுடன் எமது சுமூக உறவில் எவரும் கலங்கத்தை ஏற்படுத்திவிட முடியாது எனவும் கூறினார்.

ஏ.எல்.எம்.சலீம்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House