
posted 4th February 2023
70 வருடமாக கதைக்கின்ற போதிலும் இதுவரை எங்களுக்கென்று சுதந்திரம் கிடைக்காத நிலையில் அதைக் கொண்டாடுவதற்கு மனம் விடவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இடம்பெற்ற வேட்பாளர் அறிமுக நிகழ்வினை தொடர்ந்து, இன்று சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்ளாமை தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் இதன் போது தெரிவிக்கையில், நான் ஏழு வருடங்களிற்கு மேலாக தொடச்சியாக சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்து கொள்வதில்லை.
ஆனால் இவ்வருடம் 75 வது வருட கொண்டாட்டத்தை கொண்டாடிக் கொண்டிருக்கும் பொழுது, நாங்கள் 70 வருடமாக கதைக்கின்ற போதிலும் இதுவரை எங்களுக்கென்று சுதந்திரம் கிடைக்காத நிலையில் அதைக் கொண்டாடுவதற்கு மனம் விடவில்லை.
ஆனாலும் இதனை ஒரு கரிநாளாக கூறி, இன்னுமொரு தரப்பின் அரசியல் யுத்திக்கு ஆதரவாக நான் செயற்படவும் இல்லை. ஏனெனில், பொருளாதார நெருக்கடியான காலத்தில் கர்த்தால் மூலம் மேலும் எமது மக்களின் பொருளாதாரமே பாதிக்கப்படுகிறது.
இன்றைய ஒரு நாள் வருமானத்தை நம்பி இருக்கும் பலர் உள்ளனர். கர்த்தால் எனும் போர்வையில் அதனையும் தடுத்து நிறுத்துவது நியாயமற்ற செயற்பாடாக பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)