அர்த்தமுள்ளதாக அமையும்

ஒவ்வொரு குடிமகனும் அனைத்து உரிமைகளுடனும் சமத்துவமாக வாழும்போதே சுதந்திர விழா அர்த்தமுள்ளதாக அமையும் என கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார்.

கல்முனை மாநகர சபை ஒழுங்கு செய்திருந்த 74ஆவது தேசிய சுதந்திர தின விழாவில் அதிதியாக கலந்து கொண்டு, உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதல்வர் மேலும் தெரிவிக்கையில்;

இந்த நாட்டில் சிறுபான்மையினர் மீதான பாரபட்சங்களும் நெருக்குவாரங்களும் அதிகரித்திருக்கின்ற சூழ்நிலையில் சுதந்திர தினத்தை தமிழ், முஸ்லிம் சமூகத்தினர் கொண்டாடத்தான் வேண்டுமா என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். உண்மையில் நாம் கொண்டாடுவது ஒரு தரப்பினருக்கு மட்டுமான சுதந்திர விழாவல்ல. இது நாம் பிறந்து, வளர்ந்து, பூர்வீகமாக குடியிருக்கின்ற எமது தாய் நாட்டுக்கான சுதந்திர விழாவாகும். இலங்கைத் திருநாடானது சிறுபான்மையினராகிய எமக்கும் சொந்தமான தேசமாகும்.

காலணித்துவ ஆட்சியாளர்களிடம் இருந்து எமது நாடு சுதந்திரம் பெறுவதற்கு சிங்கள, தமிழ், முஸ்லிம் தலைவர்கள் அனைவரும் இன, மத, மொழி வேறுபாடுகளுக்கப்பால் ஒன்றிணைந்தே போராடினார்கள். அதுவே நாட்டுக்கு சுதந்திரத்தை பெற்றுத்தந்தது.

எனினும் இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள், சிறுபான்மை தமிழ், முஸ்லிம் சமூகத்தினரை இரண்டாம் தரப் பிரஜைகளாக நடத்துவதிலும் எங்களது உரிமைகளையும் அபிலாஷைகளையும் மழுங்கடிப்பதிலும் சிறுபான்மையின மக்களை அடக்கி, ஒடுக்கி ஆள்வதிலும் முனைப்புக்காட்டியே வந்திருக்கின்றன.

இந்த நீண்ட நெடிய பின்னணியிலேயே இன்றும் சிறுபான்மைச் சமூகங்கள் மீதான பாரபட்சங்கள் தொடர்கின்றன. சிறுபான்மையினர் மீதான அடக்குமுறைகள் இன்று வெவ்வேறு வடிவங்களில் விஸ்வரூபம் பெற்றிருக்கின்றன. அதற்காக தேசத்தின் சுதந்திரத்தை எம்மால் ஒருபோதும் புறந்தள்ளி விட முடியாது.

நாட்டின் சுதந்திரம் என்பது நாட்டில் வாழ்கின்ற ஒவ்வொரு குடிமகனினதும் சுதந்திரம் என்பதை நாங்கள் உணர வேண்டும். தேசத்திற்கு மதிப்பளிப்பதும் கௌரவிப்பதும் தேச நலன்களில் கரிசனை செலுத்துவதும் நாட்டுப் பிரஜைகள் அனைவர் மீதும் கடமையாகும். இவற்றை அடிப்படையாகக் கொண்டதே தேசப்பற்றாகும். தேசியக் கொடியின் கீழ் ஒன்றிணைவதன் மூலமே இதனை நாங்கள் வெளிப்படுத்த முடியும்.

எவ்வாறாயினும், நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் எப்போது அவரவர் சமய, கலாசாரங்களுடன் அனைத்து உரிமைகளையும் பெற்று சமத்துவமாக வாழக்கிடைக்கிறதோ அன்றுதான் எமது நாட்டின் சுதந்திரம் என்பது அர்த்தமுள்ளதாக மாறும் என்பதை நான் இந்த சந்தர்ப்பத்தில் ஆணித்தரமாக கூறி வைக்க விரும்புகின்றேன்.

சிறுபான்மைச் சமூகத்தினர் செறிந்து வாழ்கின்ற கல்முனை மண்ணில் இடம்பெறுகின்ற இந்த விழா இதற்குக் கட்டியம் கூற வேண்டும். இது அரசாங்கத்திற்கும் பெரும்பான்மையின மக்களுக்கும் நல்ல செய்தியைக் கொண்டு செல்ல வேண்டும்.

இன ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டான ஒரு பூமியாக நமது கல்முனை மண் திகழ வேண்டும். ஏனைய பிரதேசங்களுக்கும் முழு நாட்டுக்கும் முன்னுதாரணமிக்கதாக நமது கல்முனை மாநகரம் மாற வேண்டும். அந்த வகையில் கல்முனை மாநகர சபையின் ஆட்சி நிர்வாகமானது ஒற்றுமைக்கு முன்மாதிரியான ஒரு தளமாக எம்மால் முன்கொண்டு செல்லப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன் என்றார்.

அர்த்தமுள்ளதாக அமையும்

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House