
posted 6th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
“கடமைப்பொறுப்புணர்வு உயர்நிலைக்கு இட்டுச் செல்லும்” - பிரதம அஞ்சல் அதிபர் பைஸர்
“அரச திணைக்கள அதிகாரிகளான நாம், நாம்சார்ந்த திணைக்களத்துக்கான விசுவாசத்துடனும், கடமைப் பொறுப்புணர்வுடனும் செயற்பாட்டால் உயர்நிலைகள் நம்மை வந்தடையும். இதற்கு உதாரணபுருசராக ஓய்வுபெறும் பிரதி அஞ்சல்மா அதிபதி காமினி விமல சூரிய திகழ்கின்றார்.”
இவ்வாறு, கல்முனை பிரதம தபாலக பிரதம அஞ்சல் அதிபர் யூ.எல்.எம். பைஸர் கூறினார்.
கிழக்குப் பிராந்திய பிரதி அஞ்சல் மா அதிபதியாக கடமையாற்றி ஓய்வு பெறும் காமினி விமலசூரியவுக்கு, அக்கரைப்பற்று அஞ்சல் அத்தியட்சகர் பிரிவின் அஞ்சல் குடும்பத்தினரால் பிரியாவிடையுடன் கூடிய சேவை நலன் பாராட்டு விழா ஒன்று விமரிசையாக நடத்தப்பட்டது.
இந்த பாராட்டு விழா நிகழ்வுக்கு தலைமை வகித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த சேவை நலன் பாராட்டு விழா நிகழ்வில், பிரதேச அஞ்சல் அதிபர்கள், உப அஞ்சல் அதிபர்கள், தபாலக பணியாளர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
அக்கரைப்பற்று பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் அலுவலக பிரதம இலிகிதர் ஏ.சீ. நளீரின் வரவேற்புரையுடன் ஆரம்பமான நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் கே.பி.எஸ். பிரியந்த விசேட அதிதியாகக் கலந்து கொண்டதுடன், ஓய்வுபெற்றுச் செல்லும் பிரதி அஞ்சல்மா அதிபதி காமினி விமல சூரிய நிகழ்வில், பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் மற்றும் பொற்கிழிவழங்கியும் கௌரவிக்கப்பட்டார்.
தலைமை வகித்த பிரதம அஞ்சல் அதிபர் பைஸர் தொடர்ந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.
“அஞ்சல் திணைக்களத்தில் 40 வருடங்களாக சேவையாற்றி ஓய்வு பெறும் கிழக்குப் பிராந்திய பிரதி அஞ்சல்மா அதிபதி காமினி விமல சூரிய கடந்த ஒன்றரை வருடங்களாக எமது பிராந்தியத்தின் அஞ்சல் சேவை உயர்வுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றினார். கடமை உணர்வுமிக்கவராகத்திகழ்ந்த அவர் எமக்கெல்லாம் சிறந்த வழிகாட்டியாகவும், கடமைப் பொறுப்புணர்வுக்கும் மக்கள் சேவைக்கும்” உதாரண புருஷராகவும் திகழ்ந்தார். இவர்போன்ற நீதி, நேர்மை மிக்க உயரதிகாரிகள் ஓய்வு பெற்றுச் சென்றாலும், அவர்கள் காட்டிய பொறுப்புணர்வு மிக்க சேவைகளை முன்னுதாரணமாகக் கொண்டு நாம் சேவைகளைத் தொடர வேண்டும்” என்றார்.
ஓய்வு பெறும் பிரதி அஞ்சல்மா அதிபதி காமினி விமலசூரிய உரையாற்றுகையில்,
1985இல் இரண்டாம் தர தபாலதிபராக அஞ்சல் திணைக்களத்தில் இணைந்து கொண்ட நான், விடாமுயற்சியுடன் திணைக்களப் பரீட்சைகளில் சித்தி பெற்று பிரதி அஞ்சல் மா அதிபதியாகவும் உயர்வுபெற்றேன்.
நமது கடமைப் பொறுப்புணர்ந்து, மக்கள் சேவையுடன் திணைக்களத்திற்கும் விசுவாசமாக செயற்பட்டால் உயர்நிலைப்பதவி உயர்வுகளைப் பெறமுடியும் என்றார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)