
posted 25th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
விவசாய நவீனமயமாக்கல் வேலைத் திட்டம்
இதுவரை இருந்த விவசாய வேலைத்திட்டங்களைப் போன்று இடைநடுவில் நிறுத்தாது, விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி, பிரதிப் பலன்களைக் காண்பிக்கத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது ஏற்படும் பிரச்சினைகளை துறைசார் நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு உடனடியாகத் தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயத்தை நவீனமாக்கல் தொடர்பாக அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் கூட்டத்தில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இந்த பணிப்புரைகளை வழங்கினார்.
மாகாணத் தலைவர்கள், மாவட்டத் தலைவர்கள் மற்றும் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தெரிவு செய்யப்பட்ட 26 பிரதேச செயலாளர் பிரிவுகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டம் தொடர்பில் தேசிய ரீதியில் தீர்மானங்களை எடுப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் பிரதமர், உரிய அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் 9 மாகாணங்களின் பிரதம செயலாளர்கள் உள்ளடக்கிய வகையில் நிறுவப்பட்டுள்ள குழுவிற்கு மேலதிகமாக விவசாய நவீனமயமாக்கல் செயலகம் ஒன்றை அமைக்கத் தீர்மானிக்கப்பட்டது. விவசாய நவீனமயமாக்கல் அறிவு மற்றும் சேவைகளுக்கான மையமாக இந்த செயலகம் செயற்படவுள்ளது.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய இந்த வேலைத்திட்டத்திற்கு தனியார் துறையினரின் பங்களிப்பைப் பெறுவதற்குத் தேவையான சட்ட வரைவுகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் வலியுறுத்தப்பட்டது. அதேபோன்று, விவசாய நவீனமயமாக்கலுக்கு 08 பிரதான அமைச்சுகள் பயன்படுத்தப்படவுள்ளதாகவும், 08 திணைக்களங்களின் ஆதரவுடன் தெரிவு செய்யப்பட்ட 26 பிரதேச செயலகங்களில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலில் இணைந்துகொண்ட சிரேஷ்ட பேராசிரியர் காமினி சேனாநாயக்க இலங்கை தற்போது எதிர்நோக்கும் விவசாயப் சிக்கல்கள் தொடர்பிலும் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார்.
2024ஆம் ஆண்டு விவசாய உற்பத்தித் திறனை அதிகரிக்க ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக தேவையான ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளதுடன், அந்த செயற்பாட்டுடன் மாத்திரம் நின்றுவிடாது விவசாயத் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் கவனம் செலுத்துமாறு பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர். எச். சமரதுங்க தனது உரையில் தெரிவித்தார்.
உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி சுரேன் படகொட, மாகாண பிரதம செயலாளர்கள், துறைசார் நிறுவனங்களின் தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதேச செயலாளர் பிரிவுகளின் செயலாளர்கள் உள்ளிட்டோர் இக்கலந்துரையாடலில் பங்கெடுத்திருந்தனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)