
posted 20th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
முஸ்லிம் சமூகம் சமய அறிவு சார்ந்த புத்திஜீவீகளை இழந்து வருவது கவலைக்குரியது
இலங்கையைப் பொறுத்தவரை கடந்த சில மாதங்களாக இஸ்லாமிய அறிவுசார் புத்திஜீவிகளை முஸ்லிம் சமூகம் அடுத்தடுத்து இழந்து வருவது ஆழ்ந்த கவலையளிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
அனுதாபச் செய்தியொன்றின் ஊடாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இந்த வாரத்தின் ஆரம்ப நாட்களிலேயே குர்ஆனிய சமூகத்தை உருவாக்குவதற்காக அயராது ஈடுபட்டுழைத்த இரு பெரும் ஆளுமைகள் இறைவனின் நாட்டப்படி எங்களை விட்டு மறைந்தது முஸ்லிம்கள் மத்தியில் அதிர்வலைகளைத் தோற்றுவித்திருப்பதாக உணர்கிறேன் .
செவ்வாய்க்கிழமை(19) அதிகாலையிலேயே புத்தளம் இஸ்லாஹியா பெண்கள் அரபுக் கல்லூரியின் அதிபர் உஸ்தாத் ஷெய்க் முஹம்மத் முனீர் இவ்வுலக வாழ்வை நீத்து விட்ட செய்தி வெளியாகியது. அதற்கு முன்னதாக, பதுளை மாவட்டத்தில் இஸ்லாமிய விழுமியங்களின் அடிப்படையில் சன்மார்க்கப் பணியில் கண்ணும் கருத்துமாக இருந்து செயலாற்றி வந்த அஷ் ஷெய்க் ரிஸான் ஸெய்ன்(நளீமி)யின் மறைவுச் செய்தி எங்களை எட்டியிருந்தது.
இவர்கள் இருவரிலும் ஒத்த தன்மைகள் சிலவற்றைக் காண்கின்றோம். அல் குர்ஆனின் போதனைகளின் அடிப்படையில் இறைதூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிகாட்டல்களைப் பின்பற்றி, இஸ்லாத்தின் தூதை உரிய முறையில் எத்தி வைப்பதற்காக இருவரும் அர்ப்பணிப்புடன் உன்னதமான பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள்.
நாடளாவிய ரீதியில் இயக்க ரீதியாக இஸ்லாமிய அழைப்புப் பணிக்கு தலைமைத்துவம் வழங்கி வருபவர்களில் ஒருவரான ஷெய்க் உஸைர் (இஸ்லாஹி) அவர்களின் மூத்த சகோதரரான உஸ்தாத் ஹதியதுல்லாஹ் முஹம்மத் முனீர் குறிப்பாக இஸ்லாமியத் தாய்குலத்திற்கு குர்ஆனிய வழிகாட்டுதலை வழங்குகின்ற அரும்பெரும் பணிக்குப் பங்களிப்பாற்றி வந்த நிலையில், எங்களை விட்டு மறைந்து விட்டார். அவரது குர்ஆனிய விளக்கங்கள் ஆழ்ந்த தெளிவை வழங்கி வந்ததாக அறிகின்றேன் .
ஜாமிஆ நளீமிய்யாவில் கற்றுத்தேறிய அஷ் ஷெய்க் ரிஸான் ஸெய்ன், பதுளையிலிருந்து கொண்டு அங்கு ஒரு சர்வதேசப் பாடசாலையை நீண்ட காலமாக நடத்தியவாறு, பின்னர் காதி நீதிபதியாகவும் கடமையாற்றி வந்ததோடு, இஸ்லாமிய தனியார் சட்டம் பற்றிக் கூடுதல் கவனம் செலுத்தி வந்தார். பதுளை மாவட்டத்தை மையப்படுத்தி சமூகத்தில் விவாகரத்துகள் அதிகரித்து வருவதற்கு வழிகோலும் காரணிகளைக் கண்டறிவதிலும் அவர் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்கள் ஆற்றியுள்ள அரும் பணிகளை அங்கீகரித்து, இருவருக்கும் மேலான ஜென்னத்துல் பிர்தௌஸுல் அஃலா என்றஉன்னதமான சுவனபதியை நிரந்தரமான தங்குமிடமாக ஆக்கியருள்வானாக. அவர்களது பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு மன ஆறுதலை அளிப்பானாக.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)