
posted 25th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
மறைந்த நஜீப் ஏ மஜீத் அரசியலில் வெவ்வேறு மட்டங்களில் பங்களிப்பு
அதிகாரம் வழங்கப்பட்டிருந்த காலகட்டங்களில், அசையாத இறை நம்பிக்கையோடு, திருகோணமலை மாவட்டத்திற்கும், கிழக்கு மாகாணத்திற்கும், பொதுவாக நாட்டிற்கும் இயன்றவரை பணியாற்றியவராக நஜீப் ஏ மஜீத் விளங்கினார் என அவரது மறைவையிட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானுக்குப் பயணிக்கும் வழியில் துபாய் விமான நிலையத்திலிருந்து இந்த அனுதாப செய்தியை வெளியிட்டுள்ளார்.
அதில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளதாவது,
அவர் நோயுற்று சிகிச்சைபெற்று வந்த நிலையில் மறைந்த செய்தி என்னை எட்டியபோது கவலையடைந்தேன். முன்னாள் மூதூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும், பிரதியமைச்சருமான மர்ஹூம் ஏ. எல். அப்துல் மஜீதின் வாரிசாக அரசியலில் பிரவேசித்த நண்பர் நஜீப் பாராளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராகவும், பிரதியமைச்சராகவும் பின்னர் கிழக்கு மாகாண முதலமைச்சராகவும் அரசியலில் வெவ்வேறு மட்டங்களில் சிறப்பான பங்களிப்பைச் செய்துள்ளார். அவரது அரசியல் வாழ்வோடு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் சம்பந்தப்பட்டிருக்கின்றது.
அவரது இளமைக் காலத்திலிருந்தே அமைதியான சுபாவத்தை இயல்பாகவே கொண்டிருந்த நண்பர் மர்ஹூம் நஜீப் ஏ மஜீத் மக்களுடன் பழகுவதற்கு மிகவும் இனியவராக இருந்தார்.
இறை இல்லங்களான பள்ளிவாசல்களுக்குச் சென்று சன்மார்க்கக் கடமைகளை நிறைவேற்றுவதில் அவர் வாழ்நாள் நெடுகிலும் கண்ணும் கருத்துமாக இருந்து வந்தார்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாருக்கு மேலான ஜன்னத்துல் பிர்தௌஸுல் அஃலா என்ற உன்னதமான சுவன பாக்கியத்தை அருள்வானாக. அத்துடன், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், கிண்ணியா மக்களுக்கும் அவரை நேசித்த அனைத்து ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)