
posted 30th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
மட்டக்களப்பில் தாழ்நிலங்கள் வெள்ளத்தில் - மக்கள் அவலத்தில்
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக தாழ்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கன மழை பெய்துவருவதன் காரணமாக, மட்டக்களப்பு நகரின் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இருதயபுரம், ஜெயந்திபுரம், கூழாவடி, மாமாங்கம், உப்போடை, ஊறணி உட்பட பல பகுதிகளில் வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதேநேரம் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான குளங்களில் ஒன்றான நவகிரிகுளத்தின் நீர்மட்டம் வான்பாயும் நிலைமை காரணமாக இரண்டு வான்கதவுகள் ஐந்து அடி திறக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வாவியினை அண்டியுள்ள மற்றும் நவகிரி ஆற்றுப்படுக்கையினை அண்டியுள்ள பகுதி மக்களை அவதானமாக இருக்குமாறு போரதீவுப்பற்று பிரதேச செயலாளரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்று முன்தினம் (28) மினிசூறாவளி காரணமாக சேதமடைந்த வீடுகளை போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ரங்கநாதன் நேரில் சென்று பார்வையிட்டதுடன் சேத நிலைமைகள் தொடர்பிலும் மதிப்பீடுகளை மேற்கொண்டார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)