
posted 20th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
புதிய தலைவர் தெரிவு உங்களதே
புதிய தலைவர் தெரிவால் கட்சி ஒருபோதும் பிளவடையாது. அது கட்சிக்கு மேலும் வலு சேர்க்கும். எனக்கு இன்னும் இரண்டு மாதங்களில் 60 வயது. 65ஆவது வயதில் நான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன். இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் ஊடக பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் காரைதீவில் தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு பொதுச் சபை உறுப்பினர்களின் சந்திப்பு காரைதீவு தமிழரசுக் கட்சி கிளைத்தலைவரும் முன்னாள் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் கட்சி கிளைப் பணிமனையில் நடைபெற்றது. அச்சமயம் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் இரா. சாணக்கியன் மற்றும் இளைஞர் அணி துணைத் தலைவர் அருள். நிதாஞ்சன் ஆகியோர் கலந்து கொண்டார்கள் .
அங்கு சுமந்திரன் மேலும் தெரிவிக்கையில்;
இலங்கை தமிழரசுக்கட்சி ஜனநாயக சிறப்பம்சம் கொண்ட கட்சியாகும். இப்படியான தேர்தல் இரண்டு வருடத்திற்கு ஒரு தலைவர் என்றால் கட்சி மேலும் வலுப்பெறும். எமது கட்சி போன்று எந்த கட்சியிலும் ஜனநாயக விழுமியங்கள் இல்லை.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸில் பொன்னம்பலம் என்பவர் மாத்திரம் தான் தலைவராக வரலாம்.
எனக்கு இரண்டு மாதங்களில் 60 வயது ஆகிறது. 65ஆவது வயதில் இளைப்பாறி விடுவேன். முன்னர் இருந்த தலைவர்கள் விட்ட தவறை நாங்கள் ஒருபோதும் விடப்போவதில்லை. 2010இல் இருந்து நான் சம்மந்தன் அவர்களோடு கட்சி செயற்பாடுகள் அனைத்திலும் பக்கபலமாக இருந்து வந்திருக்கின்றேன். கட்சிமட்ட பேச்சு வார்த்தைகள் அனைத்திலும் பங்கு பற்றியுள்ளேன்.
தலைவர் தெரிவுக்கு நான் சம்மதம் தெரிவித்துள்ளேன். அடுத்த கட்ட தேசிய முயற்சிக்கு புதிய தலைவரை நீங்கள் தேர்வு செய்து கொள்ளுங்கள் என்றார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)