
posted 20th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு

முல்லைத்தீவு மாவட்டத்தில் மழையால் 4806 பேர் பாதிப்பு
சீரற்ற காலநிலையினால் முல்லைத்தீவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக 1586 குடும்பங்களைச் சேர்ந்த 4806 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு பிரதேச செயலக அதிகாரிகள், இராணுவத்தினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுகளை வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, இரணைமடு, முத்தையன்கட்டு மற்றும் தண்ணிமுறிப்பு குளத்தின் வான் கதவுகளும் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்படுவதால் அப்பகுதியில் வாழும் மக்களை மிகவும் அவதானமாக இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் 745 பேர் பாதிப்பு
யாழ்ப்பாண மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக 219 குடும்பங்களைச் சேர்ந்த 745 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 22 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
நேற்று (19) செவ்வாய்க்கிழமை காலை 10 மணி வரையான நிலவரப்படி யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என். சூரியராஜ் குறித்த விடயத்தை தெரிவித்தார்.
பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவில் 146 குடும்பங்களைச் சேர்ந்த 485 பேரும், சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் 60 குடும்பங்களைச் சேர்ந்த 205 பேரும், கோப்பாய் பிரதேச செயலக பிரிவில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேரும்,சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 8 பேரும் உடுவில் பிரதேச செயலகப் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 46 பேர் அன்னை முன்பள்ளி நிலையத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வாள் வெட்டு - குடும்பஸ்தர் படுகாயம்
வடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகைத்திடல் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (19) மாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலை சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவத்தில் அதே இடத்தை சேர்ந்த கிட்டினன் நேசராசா (வயது- 52) என்பவரே மாலை 6:30 மணியளவில் கால் மற்றம் தலைப் பகுதிகளில் பாரிய வெட்டுக்காயம் ஏற்பட்ட நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உடனடியாக மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
முல்லைத்தீவில் கேரளக் கஞ்சாவுடன் 3 பேரை கைது
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முல்லைத்தீவு மகா வித்தியாலயத்திற்கு அருகிலே கஞ்சா விற்பனை இடம்பெறுவதாக முல்லைத்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு இரகசிய தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
இந்நிலையில், நேற்று (19) செவ்வாய்க்கிழமை சம்பவ இடத்துக்கு விரைந்த முல்லைத்தீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட விசேட பொலிஸ் அணி மற்றும் விசேட அதிரடிப் படையினர் குறித்த பகுதியில் உள்ள வீட்டில் 914 கிராம் கேரளக் கஞ்சாவை வைத்திருந்த 34 வயதுடைய நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவரிடம் விசாரணைகளை மேற்கொண்ட முல்லைத்தீவு பொலிஸார் அவர் வேறு ஒரு இடத்தில் இருந்து கஞ்சாவை பெற்றுக் கொள்வதை அறிந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து குறித்த முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் அணியினரும் விசேட அதிரடி படையினரும் குறித்த நபரை கைது செய்வதற்காக சென்றபோது முள்ளியவளை புதரிகுடா பகுதியைச் சேர்ந்த 25 மற்றும் 26 வயதுடைய கணவன் மனைவி இருவரையும் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வைத்து 214 கிராம் கஞ்சாவுடன் கைது செய்துள்ளனர்.
8 தமிழக மீனவர்கள் விடுதலை
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்கள் எட்டு பேரை நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்ய மன்னார் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த மாதம் 6 ஆம் திகதி இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இராமேஸ்வரம் மீனவர்கள் எட்டு பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.கைதான எட்டு மீனவர்களும் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், குறித்த மீனவர்கள் நேற்று புதன் கிழமை மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
'எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்டால் சிறை தண்டனை விதிக்கப்படும்' என்ற நிபந்தனையின் கீழ் விடுதலை செய்வதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.
இதனை தொடர்ந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் இந்திய துணை த்தூதரக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)