
posted 1st December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
யாழ். வேம்படி மகளிர் பாடசாலை அகில இலங்கை ரீதியில் சாதனை
(எஸ் தில்லைநாதன்)
2022ஆம் ஆண்டுக்கான ஜி.சீ ஈ. சாதாரணப் பரீட்சைப் பெறுபேறுகளில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைக் கண்டி மகமாயா பெண்கள் கல்லூரியும், இரண்டாவது இடத்தை யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையும், மூன்றாவது இடத்தைக் கொழும்பு றோயல் கல்லூரியும் பெற்றுள்ளன.
அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலம் முதலாவது இடத்தை யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை பெற்றுள்ளது. இந்தப் பாடசாலையில் இருந்து பரீட்சைக்குத் தோற்றிய 270 மாணவிகளில் 110 பேர் 9 பாடங்களிலும் ‘ஏ’ தரச் சித்தியைப் பெற்றுள்ளனர்.
இதேவேளை, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 74 மாணவர்கள் 9 பாடங்களிலும் ‘ஏ’ தரச் சித்தியைப் பெற்றுள்ளனர்.
பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலையில் 16 மாணவிகள் 9 பாடங்களிலும் ‘ஏ’ தரச் சித்தியைப் பெற்றுள்ளனர்.
கொக்குவில் இந்துக் கல்லூரியில் 17 மாணவர்களும், யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரியில் 6 மாணவர்களும் 9 பாடங்களிலும் ‘ஏ’ தரச் சித்தியைப் பெற்றுள்ளனர்.
5 பவுணுக்காகக் கொலை செய்யப்பட்ட வயோதிபத் தம்பதியர்
(எஸ் தில்லைநாதன்)
தனியாக வசித்த வயோதிப கணவனும் மனைவியும் வவுனியாவில் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
வவுனியா - செட்டிக்குளத்தில் நேற்று (30) அதிகாலை வேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில், அதே இடத்தை சேர்ந்த பசுபதி வர்ணகுலசிங்கம் (வயது -72), அவரின் மனைவி வர்ணகுலசிங்கம் கனகலட்சுமி (வயது 68) ஆகியோர் உயிரிழந்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது,
உயிரிழந்த தம்பதியரின் மகன் செட்டிக்குளம் பிரதான வீதியில் வியாபார நிலையம் ஒன்றை நடத்திவருகிறார். அந்த நிலையத்தின் பின்புறமாக தனியான கட்டடத்தில் இந்தத் தம்பதியர் வசித்து வந்தனர்.
நேற்று முன்தினம் (29) இரவு வழமைபோல தம்பதியரின் மகன் வியாபார நிலையத்தை மூடிவிட்டு அண்மையில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுள்ளார். இதன் பின்னர், தம்பதியர் தாங்கள் வசிக்கும் இடத்துக்கு உறங்கச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், நேற்று (30) காலை வியாபார நிலையத்தை திறப்பதற்காக மகன் சென்றுள்ளார். அப்போது, தந்தையும் தாயும் வெட்டிக் கொல்லப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இதையடுத்து அவர் செட்டிக்குளம் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் சடலங்களின் அருகே மூன்று கத்திகளை மீட்டனர். இந்தக் கத்திகள் அவர்களை கொலை செய்யப் பயன்பட்டிருக்கலாம் என்று கருதுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், தம்பதியர் வசமிருந்த 5 பவுண் நகைகள் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த நகையை கொள்ளையிடும் நோக்கில் இந்தக் கொலைகள் இடம்பெற்றனவா என்ற கோணத்திலும் விசாரணைகள் இடம்பெறுகின்றன என்று தெரிவிக்கப்பட்டது.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வெள்ளத்தில் - புணரமைப்புத் திணைக்களத்தின் அசட்டையில்
(எஸ் தில்லைநாதன்)
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை பிரதான வாயில் பகுதியில் வெள்ள நீர் தேங்கி நிற்பதனால் வைத்தியசாலைக்கு வந்து செல்லும் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள வீதி புணரமைப்பு பணி இடம்பெற்றிருந்த நிலையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. வீதி புணரமைப்பின் போது முன்பு இருந்ததை விட சில அங்குல அளவில் வீதி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வீதி ஓரமாக உள்ள பகுதி தாழ்வானதாக மாறியுள்ளது. குறித்த வீதி புணரமைப்பு பணி முழுமைபெறாத நிலையில் வீதியின் தெற்கு பக்கமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசலையின் பிரதான வாயில்கள் உள்ளிட்ட பகுதியும் தாழ்வுமாக மாறியுள்ளன.
தற்போது பெய்து வரும் மழை காரணமாக குறித்த தாழ்வான பகுதியில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதற்கு காலநிலைகளை எதிர் நோக்கி வீதி புணரமைப்புப் பணியானது செய்யப்படாததுதான் காரணம் என்பதனை சம்பந்தப்பட்ட திணைக்களம் உணருமா என்பது காலம்தான் பதில் கூறவேண்டும்.
இவ்வாறு தேங்கியுள்ள வெள்ள நீரானது வடிந்தோடுவதற்கு ஏற்றவாறான நிலை காணப்படாததால் தானாக வறண்டு போகும் வரை தேங்கிநிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
இதனால் வைத்தியசாலைக்கு வந்து செல்லும் பொதுமக்கள், வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலைக்கு முன்பாக சேவையில் ஈடுபட்டு வரும் முச்சக்கர வண்டி ஓட்டுநரகள் உள்ளிட்டோர் தினமும் பெரும் அசௌகரியத்திற்குள்ளாகி வருவது மட்டுமல்லாமல், எப்போ வெள்ளம் வத்தும் சேவைகள் எப்போதுதான் சாதாரண நிலைக்குவரும் என்பது அனைவரின் அங்கலாய்ப்பு.
குறித்த விடயம் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகம் சார்பிலும், முச்சக்கர வண்டி சங்கத்தினராலும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பலமுறை கடிதம் மூலம் தெரியப்படுத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என வேதனை தெரிவித்துள்ளனர்.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு தினமும் பல நூற்றுக்கணக்கானோர் வந்து செல்லும் நிலையில் பிரதான வாயில்களில் இவ்வாறு வெள்ள நீர் தேங்கி நிற்பதானது பல்வேறு அசௌகரியங்களை ஏற்படுத்தி வருவதுடன் சுகாதார பாதிப்புகளும் ஏற்படும் என்பதானால் சம்பந்தப்பட்ட தரப்பினர் உடனடியாக தலையிட்டு சீர்செய்யுமாறும் கோரிக்கை விடுத்துளனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)