
posted 20th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
திடீர் மரணமான நான்கு நாள் சிசு
பிறந்து நான்கு நாட்களேயான சிசு திடீரென உயிரிழந்தது. சிசுவின் மரணத்துக்கு காரணம் கண்டறியப்படாத நிலையில் அதன் உடல்கூறு மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆவரங்காலை சேர்ந்த தம்பதியரின் குழந்தையே இவ்வாறு திடீரென மரணமானது.
சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது,
குறித்த சிசு, 14ஆம் திகதி திருநெல்வேலியிலுள்ள தனியார் மருத்துவமனையில் பிறந்தது. இந்த நிலையில், கடந்த 16ஆம் திகதி தாயும் சேயும் வீடு திரும்பியிருந்தனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் (17) மதியம் குழந்தையின் உடல் குளிர்ந்து காணப்பட்டது. அத்துடன், அதன் கை, கால்களில் சிவப்பாக இருந்ததும் அவதானிக்கப்பட்டது.
இதையடுத்து, சிசுவை மீண்டும் பிரசவித்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. அங்கு சிசு உயிரிழந்தது.
சிசுவின் மரணம் தொடர்பான விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். சிசுவின் மரணத்துக்கான காரணம் அறியப்படாத நிலையில் உடல்கூறு மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)