
posted 25th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
சுனாமி நினைவேந்தல்கள்
கடற்கோள் அனர்த்தம் எனப்படும் சுனாமி ஏற்பட்ட 19ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வுகள் நாளை 26ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உணர்வெழுச்சி பூர்வமாக இடம்பெறவிருக்கின்றது.
குறிப்பாக, சுனாமி அனர்த்தம் காரணமாக மிக மோசமான கூடிய உயிரிழப்புக்களையும், சொத்து இழப்புக்களையும் சந்தித்த கிழக்கு மாகாணத்தில், இந்த நினைவேந்தல் நிகழ்வுகளுக்காக பொது மக்கள் தயாராகியுள்ளனர்.
குறித்த 19ஆவது வருட நினைவேந்தலையொட்டி கிழக்கின் பல்வேறு பிரதேசங்களிலும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தமிழ்ப் பிரதேசங்களில் சுனாமி நினைவுத் தூபிகள் அமைந்துள்ள இடங்களில் நினைவஞ்சலி நிகழ்வுகள், நினைவுப் பேருரைகள், சிரமதானம் என்பன இடம்பெறவுள்ளதுடன், இந்து ஆலயங்களில் உயிர் நீத்த உறவுகளுக்காக விசேட பூசை வழிபாடுகளும் இடம்பெறவுள்ளன.
அதேபோல் முஸ்லிம் பிரதேசங்களில் பள்ளிவாசல்களிலும், ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்ட மையவாடி வளாகங்களில் கத்தமுல் குர்ஆன் ஓதி தமாம் செய்யப்படுவதுடன், உயிர் நீத்தவர்களின் ஆன்மா ஈடேற்றத்திற்காக விசேட துஆ பிரார்த்தனைகளும் இடம்பெறவுள்ளன.
தேசிய பாதுகாப்பு தினமாக இலங்கையில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இத்தினத்தில் சுனாமி அனர்த்த நினைவுப் பேருரைகளும், சன்மார்க்க சொற்பெழிவுகளும் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நிந்தவூரில்
சுனாமியால் பெரிதும் பாதிக்கப்பட்ட நிந்தவூரில் 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை (26), ஷூஹதாக்கள் (மரணித்தவர்கள்) ஞாபகர்த்த நினைவுப் பேரவை அங்குரார்ப்பண நிகழ்வும், விசேட துஆ பிரார்த்தனையும் இடம்பெறவுள்ளது.
இதன்போது, நிந்தவூரில் ஷஹீதாக்கப்பட்ட உறவுகளுக்காகவும், நிந்தவூர் மண்ணிலிருந்து நாட்டின் பாதுகாப்புத்துறையில் பணியாற்றி வீர மரணமடைந்தவர்களின் சேவையினை நினைவுகூர்ந்தும் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
நிந்தவூர் கடற்கரை பிர்தௌஸ் ஜும்ஆப்பள்ளிவாசலின் பேஷ் இமாம் அல்-ஹாபிழ் மௌலவி ஏ.பீ.எம். ஷிம்லி (நஹ்ழி) தலைமையில், மேற்படி பள்ளிவாசலில் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
இதேவேளை மருதமுனை பிரன்சிப் போரம், மற்றும் ஷம்ஸ் டொப் 97 ஆகிய சமூக அமைப்புக்கள், பெரிய நீலாவணைப் பொலிஸாருடன் இணைந்து சுனாமி ஞாபகார்த்த தின சிரமதான நிகழ்வு ஒன்றை நடத்தவுள்ளன.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)