
posted 11th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
சந்நிதியான் ஆச்சிமரத்தின் வாராந்த நிகழ்வில் நன்கொடைகள்
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் இவ்வார வாராந்த நிகழ்வில் பல்வேறு உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
காலை 10:30 மணியளவில் இறைவணக்கத்துடன் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன்தாஸ் சுவாமிகள் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் 11:30 மணிவரை புல்லாங்குழல் இசையினை சிவஞான சுந்தரம் யூட் வழங்கினார். அவருக்கான அணிசேர் கலைஞர்களாக வயலினை திரு ஜெயராமன் மிருதங்க இசையினை கேதாரராமன் ஆகியோர் வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து யாழ் வடமராட்சி மெதடிஸ்த பெண்கள் கல்லூரி மாணவிக்கும், கிளிநொச்சி கிராஞ்சி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவருக்கும், யாழ் கந்தரோடை தமிழ் கந்தையா வித்தியாசாலை மாணவர்கள் இருவருக்கும் யாழ்ப்பாண கல்லூரியை சேர்ந்த மாணவர் ஒருவருக்கும், வட்டுக்கோட்டையை சேர்ந்த சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர் ஒருவருக்கும், வட்டுக்கோட்டை மத்திய கல்லூரியை சேர்ந்த தரம் ஐந்திக் கல்வி கற்கும் மாணவர் ஒருவருக்குமாக ஏழு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
இன்றைய இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம கலை பண்பாட்டு பேரவை நிர்வாகிகள், உறுப்பினர், சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதே வேளை மலையகத்தில் பதுளை மாவட்டத்தில் கடந்த காலத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 83. குடும்பங்களுக்கும், ஹப்புத்தளை இலக்கம் 10 தங்கலை தோட்டத்தை சேர்ந்த பதுளை கிளானோர் (அருணோதயம்) தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்கியுள்ள 34 குடும்பங்களுக்கும், பதுளை கெல்பன் தோட்டத்தை சேர்ந்த பதுளை கெல்பன் தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்கியுள்ள 16 குடும்பங்களுக்கும், கல்பொக்க LLG பிரிவிலுள்ள பூனாகலை தோட்டத்தில் தங்கியுள்ள 29 குடும்பங்களுக்கும், ஹாலிஎல, ரொக்கத்தன்னை பிரதேசத்தில் 4 குடும்பங்களுக்கும், ரூபா 4,75,000 பெறுமதியான உலருணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
மேலும் பண்டாரவளை தமிழ் மத்திய கல்லூரியின் கோரிக்கைக்கு அமைவாக பாடசாலை தேவைக்காக 24,000 பெறுமதியான கோவைகள் வழங்கப்பட்டதுடன் ஹப்புத்தளை பிரதேசத்தில் தேசிய மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட அறநெறி மாணவர்கள் தேசிய போட்டிகளில் பங்குகொள்வதற்க்காக ரூபா 20,000 நிதியும், வழங்கப்பட்டன.
இவ் உதவிகளை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள் நேரடியாக சென்று வழங்கிவைத்தார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)