
posted 31st December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
கல்முனை மாநகர சபையின் வருடாந்த விருது விழா
கல்முனை மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான விருது விழா சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தலைமையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
இதன்போது மாநகர சபையின் 16 துறைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட அதிசிறந்த உத்தியோகத்தர்கள் 16 பேர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் வேலைத் தொழிலாளியான ஆர். இன்பராஜா என்பவர், கல்முனை மாநகர சபையின் இந்த ஆண்டுக்கான அதிசிறந்த ஊழியராக தெரிவு செய்யப்பட்டு, விஷேட விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். மேலும், ஒவ்வொரு துறையிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட மூவர் நற்சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
அத்துடன் கல்முனை மாநகர சபையின் முதலாவது ஆணையாளராக கடமையாற்றி, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராகவும் இறுதியாக கிழக்கு மாகாண சபையின் பேரவைச் செயலாளராகவும் பணியாற்றி, நிர்வாக சேவையில் இருந்து ஓய்வுபெற்ற எம்.வை. சலீம் இந்நிகழ்வுக்கு விசேட விருந்தினராக அழைக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.
மேலும், கல்முனை மாநகர சபையில் கடமையாற்றி ஓய்வுபெற்ற பொறியியலாளர் என். சர்வானந்தன் உட்பட 31 பேர் இந்நிகழ்வில் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.
மாநகர சபையின் முதுகெலும்பாகத் திகழ்கின்ற திண்மக்கழிவகற்றல் சேவையில் அர்ப்பணிப்புடன் கடமையாற்றி வருகின்ற சுகாதாரத் தொழிலாளர்கள் மற்றும் வேலைத் தொழிலாளர்களுக்கு இதன்போது பரிசுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
அத்துடன் கல்முனை மாநகர சபையை பொறுபேற்று குறுகிய காலத்தினுள் நிர்வாக சீர்திருத்தங்களை மேற்கொண்டு, மாநகர சபையை வினைத்திறன் மிக்க நிறுவனமாக மாற்றியமைத்து, உன்னத சேவையாற்றி வருகின்ற மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி அவர்கள், மாநகர சமூகத்தின் சார்பில் முன்னாள் மாநகர ஆணையாளரும் முன்னாள் மாகாண உள்ளூராட்சி ஆணையாளருமான எம்.வை. சலீம் அவர்களின் பொற்கரங்களினால் பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
இவ்விழாவில் மாநகர சபையின் பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம் வரவேற்புரையையும், பொறியியலாளர் ஏ.ஜே.எச். ஜௌஸி வாழ்த்துரையையும், ஓய்வுநிலை நிர்வாக சேவை அதிகாரி எம்.வை. சலீம் சிறப்புரையையும், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தரான என். பரமேஸ்வர வர்மன் நன்றியுரையையும் நிகழ்த்தியதுடன், மாநகர சபை உத்தியோகத்தர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் கலை, கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)