ஓய்வுநிலைப் பேராசிரியர் காலமானார்

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

ஓய்வுநிலைப் பேராசிரியர் காலமானார்

கிழக்கு பல்கலைக்கழக ஓய்வு நிலைப் பேராசிரியரும், பன்முக ஆளுமையுமான செ. யோகராசா நேற்று (07.12.2023) கொழுப்பில் காலமானார்.

தமிழ் இலக்கியம், ஆய்வுத்துறைசார்ந்து அரை நூற்றாண்டுக்கு மேல் பங்காற்றிய இவர் யாழ்ப்பாணம் வடமராட்சியைப் பிறப்பிடமாகக் கொண்டவராவார்.

இலங்கையின் பிரபல பேராசிரியர்களான சிவத்தம்பி, கைலாசபதி, வித்தியானந்தன் போன்றோரின் மானசீகசீடரான சிரேஷ்ட ஓய்வுநிலை பேராசிரியர் யோகராசா, புற்று நோயால் பாதிக்கப்பட்டு கொழும்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே நேற்று (07) இறைபதம் அடைந்தார்.

இவர் கிழக்கு மாகாண, குறிப்பாக மட்டக்களப்பின் விழுமியங்கள் தழுவிய இலக்கியங்கள் மற்றும் பல்வேறு இலக்கிய ஆய்வுப்படைப்புக்களை வெளியிட்டதுடன் பல எழுத்தாளர்களைத் தமிழ் உலகிற்குத் தயார்படுத்தித் தந்தவராவார்.

ஈழத்தில் வெளிவந்த அதிக நூல்களுக்கு அணிந்துரைகள் எழுதிய இவரது முச்சந்தி இலக்கியம் எனும் ஆய்வு நூலும், ஈழத்து இலக்கிய வரலாற்றில் ஒரு பேராசிரியரை இன்னொரு பேராசிரியர் நேர்கண்ட “சங்ககாலம் முதல் சமகாலம் வரை” எனும் மகுடம் இதழில் வெளியான பேராசிரியர் சி. மௌன குருவுடனான நேர்காணல் நூலும் மகுடகம் வெளியீடாக வெளிவந்தது.

மட்டக்களப்பின் கலை, இலக்கிய வளர்ச்சிக்குப் புது இரத்தம் பாய்ச்சிய மறைந்த பேராசிரியர் யோகராசாவின் மணிவிழா ஆண்டில் (2016) அவரது பணிகளைப் பாராட்டி, பணி நயப்பு விழாவினை நடத்தி பாரிய மலர் ஒன்றினையும் வெளியிட்டு மட்டக்களப்பு மண் தனது நன்றிக் கடனைத் தீர்த்துக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

பேராசிரியர் சி. மெளனகுரு பேராசிரியர் செ.யோகராசாவின் மறைவையொட்டி விடுத்துள்ள உருக்கமானபதிவு.

கருணை யோகன் என அழைக்கப்படும் பேராசிரியர் யோகராஜா இன்று மதியம் காலமானார். கேன்சர் நோய் என அறியப்பட்டு அவர் மகரம ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சென்ற மாதம் நான் மட்டக் களப்பு சென்றபோது வீடு தேடி வந்து பல மணி நேரம் உரையாடிச் சென்றார். நோயாளியைப் போல தோற்றமளித்த. அவரைப் பார்த்து 'உடனடியாக வைத்தியரிடம் செல்லுங்கள்" என்று கூறினேன். வழக்கம் போல சிரித்துக் கொண்டார்.

மூன்று நாட்களுக்கு முன்னர் தான் நானும் சித்ரலேகாவும் அவரை மகாறகம வைத்தியசாலையில் சென்று பார்த்து வந்தோம். மக்களோடு மக்களாக ஒரு கட்டிலிலேயே படுத்துக் கிடந்தார். அருகில் சென்று அமர்ந்து கொண்டு அவர் தலையைத் தடவிக் கையைப் பிடித்து ஆறுதல் கூறினேன். அவர் உடம்பில் சேர்லைன் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். என்னைக் கண்டதும் படபட வென்று பேசத் தொடங்கினார்.

நான் அவரை கையமர்த்தி "நீங்கள் பேசாமல் இருங்கள் நான் பேசுகிறேன்" என்றேன். "வருத்தம் பற்றிப் பேசாமல் வேறு ஏதும் பேசுங்கள்" என்றார். நோயின் தீவிரத்தை அவர் அறிந்திருந்தார் போலத் தெரிகிறது.

நான் 1999இல் இருதய சத்திர சிகிச்சை இருந்து வெளிவந்த போது எழுதிய கவிதையிலிருந்து ஒரு வரியை சொல்லிக் காட்டி னார். "நடந்தே கழிய வேண்டும் பயணம்" என்பதுவே அவ்வரி. சாகும்வரை வாழ்வோம் என்ற உறுதி அக் கவிதையில் இறுதியாக வரும். அதனையும் சொல்லிக் காட்டினார். கவிதைகளில். உயிர்ப்புகளை கண்டு ரசித்த மனம் அல்லவா அது. மேடையில் மீண்டும் சந்திப்போம் என்று கூறி ஒரு சிரிப்பு சிரித்தார். அவரது வழமையான சிரிப்பு அல்ல அது.

மலையகத்தை எனக்கு முறையாக அறிமுகம் செய்தவரும் அவரே. 1992ஆம் ஆண்டு ஒரு நாள் நடு இரவிலே அவர் திருமணம் முடித்த இடமான மலையக மண் ராசியை அடைந்தோம். கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த குடும்பத்தை கண்டதும் அவர்களோடு சில நாட்கள் கழித்ததும் மலைகளில் ஏறித் திரிந்ததும் என அது ஒரு தனிக் கதை. அவரது பெரும் குடும்பத்தில் நானும் ஒருவன் ஆனேன்.

அந்த உறவுகள் என் உறவுகள் ஆகின. அவரைப் பற்றி எழுத அதிகம் உண்டு எழுதுவேன். நான் பேசப்பேச அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது. அவர் தோற்றம் எனக்கு மகாதுயரம் தந்தது. கால், கை, வயிறு வீங்கி இருந்தது. முகம் அதைத்திருந்தது. என்னோடு ஏதோ கதைக்க முயன்றார். அவர் உணர்வுகளை புரிந்து கொண்டேன்.

அவரைச் சூழ நிறைய வயது முதிர்ந்தோர் நின்று கொண்டிருந்தார்கள். அனைவரும் மலையகத்தவர். அவரது பழைய மாணவர்கள். யோகராசா மலையக மண் ராசியில் கற்பிக்க வந்த பிறகு அந்தப் பாடசாலை மாணவர்கள் பெற்ற புத்துணர்ச்சியையும், அதனால் தாங்கள் பெற்ற பயனையும், வளர்ச்சியையும் அவர்கள் வாயாரக் கூறினர். அவை உதட்டில் இருந்து வந்த வார்த்தைகள் அல்ல; அவர்கள் உள்ளம் பேசிய வார்த்தைகள்.

சில மலையக மாணவர்களை அவர் அழைத்துச் சென்று நெல்லியடி மகா வித்தியாலயத்தில் அனுமதி வாங்கி தந்து தன் வீட்டில் வைத்து படிபித்ததாக அவர்கள் மூலம் அறிந்து கொண்டேன். அவர்கள் நெஞ்செல்லாம் நன்றி நிறைந்து போய்க் கிடந்தது. புல்லுக்கும் நோகாமல் நடந்து போகும் இதயம் கொண்டவர் யோகராசா. புத்தகங்களே அவரது வாழ்க்கை ஆயிற்று. மிகப்பின் தங்கிய மலை நாட்டு மக்கள் மீது பெரும் அனுதாபம் கொண்டிருந்தார். அவரால் முன்னிலைக்கு வந்த பல மலையகப் பெரியவர்களை நான் அறிவேன். நம்மோடு மிக நெருங்கியவர்கள். இறக்கும்போதுதான் வாழ்க்கையின் நிலையாமை ஆழமாக மனதுள் இறங்குகிறது. போய் வாருங்கள் யோகராஜா. நன்றி மறவாத நற்பண்பு கொண்ட எனது அருமை நண்பரே. நான் ஒரு ஆத்மார்த்தமான நண்பனை இழந்தேன். இன்று முகநூலில் இந்த படம் கண்டேன். அகத்தைக் காட்டும் அந்த சிரிப்பு தான் யோகராசா. என்னோடு மனம் திறந்து உரையாடுபவர்கள் ஒவ்வொருவராகப் போய்க்கொண்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஓய்வுநிலைப் பேராசிரியர் காலமானார்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)