
posted 26th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்டோர் நினைவுதினம்
2004 டிசெம்பர் 26ஆம் திகதி சுமாத்திரா தீவின் அருகே கடலில் 9.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஆழிப்பேரலையை (சுனாமி) ஏற்படுத்தியது. இந்தப் பேரலை இலங்கை, இந்தியா, இந்தோனேசியா, தாய்லாந்து, மாலை தீவுகள் உள்ளிட்ட 6 நாடுகளைத் தாக்கியது. சுமார் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். இலங்கையில் வடக்கு, கிழக்கு மாவட்டங்கள் உட்பட 14 மாவட்டங்களைத் தாக்கியது. 35 ஆயிரத்து 233 பேர் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இக் கொடூர இழப்புகளின் 19ஆவது ஆண்டு நினைவேந்தல் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட நாடு முழுவதும் அனுஷ்டிக்கப்பட்டது.
தமது உறவுகளை நினைத்து கண்ணீர்விட்டு கதறியழுதும் அவர்களுக்கு பிடித்த உணவு வகைகளை படைத்தும், பூக்களால் அர்ச்சித்தும், மலர் மாலைகள் சூடியும், தீபங்கள் ஏற்றியும் அவர்களின் ஆத்ம சாந்திக்காக தங்கள் மதங்களின் நம்பிக்கையின் அடிப்படையிலும் தங்கள் அன்புக்குரியவர்களை மக்கள் உணர்வுபூர்வமாக நினைவேந்தினர்.
யாழ்ப்பாணத்தில்
யாழ்ப்பாணத்தில் அதிக அழிவைச் சந்தித்த வடமராட்சி கிழக்கிலும் யாழ். மாவட்டத்தின் ஏனைய பகுதிகளிலும் நினைவேந்தல்கள் நடைபெற்றன.
பிரதான நினைவேந்தல் அதிக அழிவைச் சந்தித்த வடமராட்சி கிழக்கு - உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் நடைபெற்றது. தவிர, வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, தாளையடி, மணல்காடு, தும்பளை பகுதிகளிலும் யாழ். பல்கலைக்கழகம், அரசியல் கட்சிகளின் பணிமனைகள், யாழ். மாவட்ட செயலகம் உள்ளிட்ட அரச பணிமனைகளிலும் நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்பட்டன.
இதேநேரம், வழமை போன்று தெல்லிப்பழை ஆனந்தன் சிற்பாலயத்தில் சுனாமி சிற்பம் உள்ளிட்ட கலைப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
கிளிநொச்சியில்
கிளிநொச்சியில் மாவட்ட செயலகத்தில் தேசிய பாதுகாப்பு தின நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. அத்துடன், அரச பணிமனைகளிலும் பொது இடங்களிலும் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
முல்லைத்தீவில்
சுனாமியால் அதிகளவான அழிவை சந்தித்த மாவட்டங்களில் ஒன்றான முல்லைத்தீவில் சுனாமி நினைவாலயம், புதுக்குடியிருப்பு நகரம், முள்ளியவளை, கள்ளப்பாடு ஆகிய பகுதிகளில் ஆழிப்பேரலை காவு கொண்டவர்களை உறவுகள் நினைவேந்தினர்.
தவிர, மன்னார், வவுனியா மாவட்டங்களில் அரச பணிமனைகள் , தனியார் நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் ஆழிப்பேரலை பலி கொண்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதேபோன்று, அதிகளவு அழிவை சந்தித்த கிழக்கு மாகாணத்திலும் சுனாமியில் பலியானோர் நினைவேந்தப்பட்டனர்.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 1,800 பேர் பலியான திருச்செந்தூர், நாவலடி, டச்பார் போன்ற கரையோரங்களில் அமைக்கப்பட்ட நினைவு தூபிகளில் இறந்தவர்களின் புகைப்படங்களை வைத்து கதறியழுது உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.
அம்பாறையில்
அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை, சாய்ந்தமருது, பாண்டிருப்பு, பெரியநீலாவணை, மாளிகைக்காடு, காரைதீவு, நிந்தவூர், உள்ளிட்ட பகுதிகளின் சுனாமி நினைவாலயங்கள் மற்றும் மதத் தலங்கள், கடற்கரையோரங்களில் தங்கள் அன்புக்கு உரியவர்களை மக்கள் நினைவுகூர்ந்தனர்.
திருமலையில்
திருகோணமலையின் கரையோர பிரதேசங்கள் மற்றும் திருணோமலை நகரப் பகுதிகளிலும் மக்கள் சுனாமியில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூர்ந்தனர்.
மேலும் ஆழிப்பேரலையில் மக்கள் கொல்லப்பட்ட அம்பாந்தோட்டை, மாத்தறை, காலி மாவட்டங்களிலும் மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்பட்டன.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)