
posted 20th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
அகற்றப்படும் உடுப்பிட்டி மதுபான சாலை
உடுப்பிட்டியில் புதிதாக அமைந்த மதுபான சாலையை அகற்றுவது தொடர்பில் நேரில் வந்து பார்வையிட்டு தீர்வு பெற்றுத் தருவதாக தன்னை சந்தித்த அந்தப் பகுதியின் சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் கடற்றொழில் அமைச்சர் கே. என். டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.
நேற்று (19) செவ்வாய்க்கிழமை மதியம் உடுப்பிட்டி சமூகமட்ட அமைப்புகள் ஒன்று சேர்ந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்திருந்தபோதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார். இந்த சந்திப்பில், யாழ். மாவட்ட அரச அதிபர் சிவபாலசுந்தரன், கரவெட்டி பிரதேச செயலாளர் தயாரூபன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
கரவெட்டி பிரதேச செயலாளர் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் டக்ளஸ் தேவானந்தா தான் மதுபானசாலைக்கு உரிய அனுமதியை வழங்கச் சொன்னதற்கு அமைவாகவே தான் வழங்கியதாக குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையிலேயே இந்த சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பில் பங்கேற்ற சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளிடம், இரண்டொரு நாட்களில் சம்பவ இடத்துக்கு நேரடியாக வந்து அதனை ஆராய்ந்து உரிய தரப்புகளுடன் பேசி மதுபானசாலையை அந்த இடத்தில் இருந்து அகற்றுவதற்குரிய உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
அத்தோடு மக்கள் எதிர்ப்புகள் இருந்தால் அந்த இடத்தில் மதுபானசாலை இயங்க அனுமதியை வழங்க முடியாதென யாழ். மாவட்ட செயலாளர் சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளிடம் உறுதிபட குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன், கூட்டத்தில் சமூகமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் பிரதேச செயலாளர் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்ததுடன் சமூகமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும், பிரதேச செயலாளருக்கும் இடையில் கடுமையான வாய்த்தர்க்கங்களும் ஏற்பட்டிருந்தது.
தினமும் ஆயிரக்கணக்கான மாணவர்கள், பொதுமக்கள் பயணிக்கும் ஒடுங்கிய உடுப்பிட்டி - வதிரி வீதியில் மதுபானசாலை அமைந்துள்ளதால் குறித்த இடத்தில் விபத்துகள் ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம் உள்ளது.
பாடசாலைகள், தனியார்கல்வி நிறுவனங்கள், பொதுமக்கள், சமூக மட்ட அமைப்புகளின் கடுமையான எதிர்ப்புகளையும் மீறி பிரதேசசெயலாளர் ஏன் செயல்படுகின்றார் என உடுப்பிட்டி வாழ் சமூக மட்ட அமைப்புகளின் குற்றஞ்சாட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)