
posted 6th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
மாணவன் ஒருவன் சடலமாக மீட்பு
சாய்ந்தமருது மார்கட் வீதியில் அமைந்துள்ள அல்மத்ரஸதுல் சபீலிஹ் றஷாத் எனும் அல் - குர்ஆன் பாடசாலையில் மாணவன் ஒருவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த 13 வயதுடைய எம்.எஸ். முஷாப் எனும் மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன் தெரிவித்தார்.
இத்தகவல் பரவியதையடுத்து மத்ரசாவை முற்றுகையிட்ட நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மத்ரசா அதிபரான மெளலவி சபானிஸ் என்பவரை தாக்க முற்பட்ட நிலையில், பொலிஸார் அவரைக் கைது செய்து, பெரும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.
நள்ளிரவு வரை அங்கு திரண்டிருந்த இளைஞர்கள், பொலிஸாரினால் கலைக்கப்பட்டனர். இதன்போது கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் இருந்து மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்டிருந்தனர்.
குறித்த மாணவனின் சடலம் முன்னதாக சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் பிரேத பரிசோதனைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
சம்பவம் தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் விசேடமாக களமிறக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதுடன் தடயவியல் நிபுணத்துவ பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு வருவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)