
posted 19th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
சிரேஷ்ட ஊடகவியலாளர் காதரின் இழப்பு கவலையளிக்கிறது
அம்பாறை மாவட்டத்தில், கல்முனை தேர்தல் தொகுதியில் மருதமுனை மண்ணிலிருந்து கொண்டு ஊடகப் பணிபுரிந்து வந்த சிரேஷ்ட ஊடகவியலாளர்,கலா பூஷணம் பி.எம்.எம்.ஏ. காதரின் இழப்பு கவலையளிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அவரது மறைவு குறித்து விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
பிரதேச செய்திகளுக்கு மட்டுமல்லாது, மாவட்டம் சார்ந்த செய்திகளையும் சேகரித்து உடனுக்குடன் ஊடகங்களுக்கு அனுப்பி வைப்பதில் அவர் கண்ணும் கருத்துமாக இருந்து வந்திருக்கிறார். ஆரவாரம் இன்றி மக்களோடு மக்களாக வாழ்ந்து சக ஊடகவியலாளர்களுடன் இயன்றவரை முரண்பட்டுக் கொள்ளாமல் தனது பணியை அவர் செவ்வனே செய்து வந்திருக்கிறார்.
ஊடகவியலாளர் பி எம். எம் .ஏ .காதரின் மறுபக்கம் பலருக்குத் தெரியாது. நாங்கள் அனுராதபுரம் மாவட்டத்தில், கலாவெவ, கெக்கிராவைப் பிரதேசங்களில் வசித்து வந்த காலத்தில் பாடசாலை அதிபராக பணியாற்றிய எனது தந்தையார் காதர் அவர்களின் தந்தையார் பீர்முகமதுக்கு அறிமுகமாகியிருந்ததாக நாங்கள் அறிகின்றோம்.
நாங்கள் அறிந்தவரையில் அவரது தந்தையார் பீர் முஹம்மது மருதமுனைக்கு வந்து திருமண வாழ்வில் இணைந்த போதிலும், காதர் அவரது வாழ்வின் கணிசமான காலம் கெக்கிராவை, கணேவல்பொல பிரதேசத்தில் வாழ்ந்திருக்கிறார். பின்னர் அவர் மருதமுனையில் திருமணமாகி அங்கிருந்து கொண்டு ஊடகப் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் காதர் செய்திகளை மட்டும் எழுதாமல், கட்டுரைகளையும் எழுதி வந்திருக்கிறார். அவற்றில் பலவற்றை நான் வாசித் திருக்கிறேன்.
அடுத்தது முகநூலிலும் கூட அடிக்கடி அவர் தனது குடும்பம் சார்ந்த விஷயங்களை கூட அவர் பதிவேற்றி வந்தார்.
மொத்தத்தில் மருதமுனை மண் அங்கிருந்த அனுபவம் வாய்ந்த ஊடகவியலாளர் ஒருவரை இழந்துவிட்டது.
அல்லாஹ் அன்னாருக்கு மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் சுவன வாழ்வை அருள்வானாக .அவரது இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆறுதலை அளிப்பானாக.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)