
posted 4th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
கிழக்கிலங்கையின் இலக்கிய செல்நெறி குறித்து ஆய்வரங்கு
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மொழித்துறையுடன் இனணந்து நடாத்திய "இரண்டாயிரம் ஆண்டுக்கு பின்னரான கிழக்கிலங்கையின் இலக்கிய செல்நெறி" என்ற ஆய்வரங்கு சனிக்கிழமை (02) கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் ஏற்பாட்டில் தென்கிழக்குப் பல்கலைகழக "மொழித்துறை" அரங்கில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாணத்திலுள்ள மூத்த கவிஞர்கள், எழுத்தாளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைகழக கலை கலாசார பீடாதிபதி பேராசிரியர் எம். எம். பாஸீல் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
வாழ்நாள் பேராசிரியர் அ. சண்முகதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வரங்கில் மொழி பெயர்ப்புத் துறையின் செல்நெறி தொடர்பில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் ஏ. எவ். எம். அஸ்ரப் ஆய்வுரை நிகழ்த்தியதுடன் சிறுகதைத் துறையின் செல்நெறி தொடர்பில் அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலக உதவிக் கல்விப்பணிப்பாளர் கலாநிதி ஹனிபா இஸ்மாயிலும், பெண் எழுத்துக்களின் செல்நெறி தொடர்பில் கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் கற்கைகள்துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி ம. நதிராவும், இலக்கியத்தில் நவீன தொழில்நுட்பத்தின் செல்வாக்கு தொடர்பில் கணிமையாளர் மு. மயூரனும், ஆய்வு பகிர்வின் நோக்கு சம்பந்தமாக யப்பான் கக்சுயின் பல்கலைக்கழக ஓய்வுநிலை ஆய்வுப் பேராசிரியர் கலாநிதி. மனோன்மணி சண்முகதாஸ் அவர்களும் கருத்துப் பகிர்ந்தனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)