
posted 1st December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
கலைகளின் சங்கமம்
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகளின் கலை மற்றும் இலக்கிய திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்தினத்தின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலிலும், கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் பன்னிருமாத வேலைத் திட்டங்களின் ஒரு அங்கமாகவும் இடம்பெற்ற "கலைகளின் சங்கமம்" நிகழ்வு பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வு இரு கட்டங்களாக இடம்பெற்றது.
முதலாவது கட்டமாக காலை 9.30 மணி - பி.ப. 12.30 வரை அலுவலக உத்தியோகத்தர்களுக்கான கலை நிகழ்வுகளும், இரண்டாவது கட்டமாக பி.ப 02.00 - 5.00 மணி வரை அலுவலக உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கான கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
கவிதை, பாடல்கள், வில்லுப்பாட்டு, பாரம்பரிய மற்றும் கிராமிய நடனங்கள் என்பன உத்தியோகத்தர்களினாலும், அவர்களது பிள்ளைகளினாலும் ஆற்றுகை செய்யப்பட்டதுடன், பிள்ளைகளின் கைவண்ணத்தில் உருவான ஓவியப் படைப்புகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை விசேட அம்சமாகும்.
இந்த நிகழ்வில் அலுவலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்களது பிள்ளைகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்ததுடன், தமது திறமைகளை வெளிக்காட்டிய பிள்ளைகள் அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வினை பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திரு ப. ராஜதிலகன் மற்றும் திருமதி பக்தகெளரி மயூரவதனன் ஆகியோருடன் இணைந்து ஏனைய அலுவலக உத்தியோகத்தர்கள் ஒழுங்கமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)