
posted 4th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
எழுத்தாளரும், தமிழ்த் தேசியப் பற்றாளருமான க. பரராஜசிங்கம் காலமானார்
மட்டக்களப்பு குருமண்வெளியைச் சேர்ந்த ஓய்வு நிலை ஆசிரியரும், மூத்த எழுத்தாளரும், இலக்கிய ஆய்வாளரும் தமிழ்த் தேசியப் பற்றாளருமான சோதிடர் கணபதிப்பிள்ளை பரராஜசிங்கம் தனது 90 ஆவது வயதில் மட்டக்களப்பில் காலமானார்.
மூத்த எழுத்தாளரான இவர் "சிந்துவெளி நாகரீகமும் தமிழரும்", "பக்திக் கனிகள்" போன்ற நூல்களை எழுதி வெளியிட்டவர். அத்துடன் இவரது நூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகள். கவிதைகள் என்பன தேசிய தினசரிகளில் பிரசுரமாகியுள்ளன.
தீவிர தமிழ்த் தேசியப் பற்றாளரான இவர் இந் நாட்டில் போர் உக்கிரமடைந்திருந்த 1994 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்.
"கல்விப் பணி அறப்பணி. அதற்கு உன்னை அர்ப்பணி" என்பதற்கமைய கல்முனை கார்மேல் பற்றிமா தேசியப் பாடசாலை, பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயம் (தேசிய பாடசாலை), களுதாவளை மகாவித்தியாலயம் (தேசிய பாடசாலை) உள்ளிட்ட புகழ் பூத்த பாடசாலைகளில் 35வருட காலம் கலைப் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி நூற்றுக்கு மேற்பட்ட கலைப் பட்டதாரிகளை உருவாக்க கனதியாக உழைத்தவர் என்பதுடன் இவர் சிறந்த சோதிடருமாவார்.
மட்டக்களப்பு ஜீ.வி. தனியார் வைத்தியசாலைக்கு அருகில் உள்ள அன்னாரின் இல்லத்தில் 2023.12.05 காலை ஒன்பது மணிக்கு இறுதிக் கிரியைகள் இடம்பெற்று பின்னர் அன்னாரின் சொந்த ஊரான குருமண்வெளிக்கு இவரது உடலம் எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)