
posted 5th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
இனப் பிரச்சினைக்கு நாமே தீர்வு காண வேண்டும்
இனப் பிரச்சினை உட்பட ஒவ்வொரு விடயத்திலும் எங்கள் பிரச்னைக்கான தீர்வை நாங்களே காண வேண்டுமே தவிர, வெளிநாடுகள் அழுத்தம் தரும் தீர்வை செய்யக்கூடாது. இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லா தெரிவித்தார். பாராளுமன்றில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
இந்த நாட்டில் நீண்ட காலமாக இனப்பிரச்சினை இருக்கிறது. உலகத்தில் பல நாடுகளில் பல மொழிகளை பேசுகிறவர்கள் இருக்கிறார்கள். ஆனால், பெரிய பிரச்சினைகளை நாங்கள் காணவில்லை. இந்தியாவில் பல மொழிகள் இருக்கின்றன. பல இனங்கள் இருக்கின்றன. பிள்ளை சமூகங்கள் இருக்கின்றன. ஆனால், பிரச்சினைகள் இல்லை. இலங்கையில் 2 மொழிகளே இருக்கின்றன. 2 இனங்களே இருக்கின்றன. இனப்பிரச்னை மட்டும் இந்நாட்டில் தீரவில்லை. பல அழிவுகளை இந்நாடு எதிர்கொண்டு இருக்கிறது.
வெளிநாட்டவரின் தலையீடு காரணமாக இனப்பிரச்சினை அதிகரித்துக்கொண்டு போகிறது. ஆனால், பிரச்சினையை இலகுவாக தீர்க்க முடியும் என்பது எமக்கு எல்லோருக்கும் தெரியும். இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பின் இலங்கையை 9 மாகாணமாக பிரித்து ஒரு பகிடியாக அதை பார்த்து கொண்டு இருக்கிறோம். இந்த தீர்வுகளால் மக்கள் எந்த விதமான பயனும் அடையவில்லை.
இந்த நாட்டில் வாழும் மக்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு மதச் சுதந்திரம் உண்டு. வாழுவதற்கான உரிமையும் உண்டு. இடப்பிரச்சினையை தீர்த்தால் இனப்பிரச்னையை 90 வீதம் தீர்க்க முடியும். ஒவ்வொரு விடயத்திலும் எங்களது பிரச்சினைக்கான தீர்வை காண வேண்டுமே தவிர வெளிநாடுகள் அழுத்தம் கொடுக்கின்ற தீர்வை செய்ய கூடாது என்றார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)