
posted 17th December 2022
நாடறிந்த எழுத்தாளர் கலாபூஷணம், இலக்கிய வேந்தர் எஸ். முத்துமீரானின் “வெட்டுக்குத்துக்காலம்” கவிதைத் தொகுப்பு நூல் வெளியீடு நிந்தவூரில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் வெளியீடான இந்த கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டை நிந்தவூர் கலை இலக்கியப் பேரவை நடத்தியது.
நிந்தவூர் கலை, இலக்கியப் பேரவையின் தலைவர் டாக்டர். ஏ.எம். ஜாபீர் தலைமையில், நிந்தவூர் பொது நூலக கேட்போர் கூடத்தில் வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வில் நூலாசிரியர் கலாபூஷணம், இலக்கிய வேந்தர் சட்டத்தரணி எஸ். முத்துமீரான் (நிந்தவூரன்) பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இதன்போது நூலின் முதற் பிரதியை ஹபீப் வங்கியின் முகாமையாளரும், நிந்தவூர் ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைப் பொருளாளருமான ஏ.எல். அன்வர்டீன் நூலாசிரியரிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
அத்துடன் நிகழ்வில் கலந்து கொண்ட இலக்கிய கர்த்தாக்களான பாலமுனை பாறூக், எழுகவி ஜெலீல், இலக்கியன் முர்ஷித், மனித உரிமைகள் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி. ஏ.பி. முஹம்மது அஸீம், மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் ரி.எம். றிம்சான், சட்டத்தரணி மர்சூம் மௌலானா, தூரிகை முற்றம் தலைவர் முஜாமிலா முபாரக், ஊடகர் ஐ.எல்.எம். பாறூக், கவிஞர் சட்டத்தரணி அலரி உட்பட பலர் நூலின் சிறப்புப் பிரதிகளையும் பெற்றுக்கொண்டனர்.
கிழக்கு மாகாண எழுத்தாளர்களின் கையெழுத்துப் பிரதிகளை நூலுருவாக்கம் செய்யும், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் முன்மாதிரி செயற்திட்டத்தின் கீழ் இந்த நூல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)