
posted 7th December 2022
மட்டக்களப்பு மகுடம் கலை, இலக்கிய வட்டத்தின் பௌர்ணமி கலை, இலக்கிய நிகழ்வின் 47 ஆவது தொடராக மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட ஊடகவியலாளரும், தற்போது புலம் பெயர்ந்து சுவிட்சர்லாந்து நாட்டில் தமிழ் இலக்கியத் தளத்தில் இயங்கி வருபவருமான சண். தவராஜாவின் 'மனுஷி' சிறுகதை நூல் வெளியீடும், அறிமுக நிகழ்வும் மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
பிரபல இலக்கிய கர்த்தா பேராசிரியர் செ. யோகராசா தலைமையில், மகுடம் வி. மைக்கல் கொலினின் வரவேற்புரையுடன் இடம்பெற்ற இந்த வெளியீட்டு விழா நிகழ்வில், கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் மா. செல்வராஜா மற்றும் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் ஆகியோர் பிரதம விருந்தினர்களாகவும், பேராசிரியர் சி. மௌனகுரு சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி. ரூபி வலண்டினா பிரான்சிஸ் நூல் நயவுரையாற்றியதுடன், ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலய அதிபர் கவிதாயினி திருமதி. சுதாகரி மணிவண்ணன் வவுனியா தேசிய கல்விக் கல்லூரி வரிவுரையாளர் திருமதி பத்மா ஜெயசந்திரன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
மூத்த எழுத்தாளரான கவிஞர் செ. குணரத்தினம் மற்றும் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்க முன்னாள் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூஷணம் ஏ.எல்.எம். சலீம் ஆகியோர் 'மனுஷி' சிறுகதை நூலின் முதன்மைப் பிரதிகளை இணைந்து பெற்றுக் கொண்டதுடன், நூலாசிரியர் சண். தவராஜா சுவிட்சர்லாந்திலிருந்து ஸூம் தொழில்நுட்பம் மூலம் ஏற்புரையும் ஆற்றினார்.
கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் இ. தேவஅதிரன் நிகழ்வின் இறுதியில் நன்றியுரையாற்றினார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த ஊடகவியாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)