
posted 6th December 2022

பேராசிரியர் செ. அரசரெத்தினம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் தென் எல்லையில் செந்தமிழும் சிவநெறியும் சிறந்தோங்கும் மண் துறைநீலாவணை ஆகும். இக் கிராமத்தைச் சேர்ந்த கலாநிதி செல்லத்துரை . அரசரெத்தினம் கிழக்கு பல்கலைக் கழகத்தின் இரசாயனத் துறையில் பேராசிரியராக உயர்வு பெற்றுள்ளார்.
இவரை பேராசிரியராக பதவி உயர்த்துவதற்கு பல்கலைக்கழக பேரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பல்கலைக் கழக பேரவையின் மாதாந்த கூட்டம் 26.11.2022 அன்று கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வி. கனகசிங்கம் தலைமையில் இடம்பெற்றது. இப்பேரவைக் கூட்டத்தில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கமைய திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவி உயர்வுக்காக விண்ணப்பித்த கலாநிதி செ. அரசரெத்தினத்தின் விண்ணப்பங்களை மதிப்பீடு செய்த மூதவையினால் விதந்துரைக்கப்பட்ட துறைசார் நிபுணர்களின் மதிப்பீட்டு அறிக்கைகள் நேர்முகத் தேர்வு முடிவுகள் ஆகியன சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.
அவற்றின் அடிப்படையிலேயே இவர் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் இரசயனாவியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி வரலாற்றில் முதலாவது இரசாயனவியல் துறை சிறப்புப் பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.
மட்/பட்/துறைநீலாவணை மகாவித்தியாலயம்.(தேசிய பாடசாலை) கமு/கமு /கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரி (தேசியபாடசாலை) என்பவற்றின் முன்னை மாணாக்கர்.
தனது எட்டாவது வயதில் தந்தையை இழந்த இவர் தாயின் வழிகாட்டல் அரவணைப்பில் கல்வியைத் தொடர்ந்தார். கல்விக்கு வறுமை தடையில்லை. மன உறுதி கொண்டால் எதனையும் சாதிக்க முடியும் என்பதை சாதித்துக் காட்டியுள்ளார்.
இவர் காலஞ் சென்ற செல்லத்துரை மற்றும் பகவதி தம்பதியினரின் இளைய புதல்வர்.
மேலும் தனக்கு கிடைக்காத கல்வி வாய்ப்புக்கள், கல்வித் தேவையுள்ள யாவருக்கும் கிட்ட வேண்டும். இதுவே ஆத்மாத்த திருப்தி என்று குறிப்பிட்டார் பேராசிரியர் செ. அரசரெத்தினம்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)