பேசாலையில் பத்திமா கழகத்தின்  நூல் வெளியீட்டு விழா.

ஓய்வுநிலை பாடசாலை அதிபர் கலாபூஷணம் எஸ்.ஏ. மிராண்டா அவர்களால் ஆக்கம் செய்யப்பட்ட ஐந்தாவது நூல் வெளியீட்டு விழாவை மன்னார் பேசாலை பத்திமா கழகம் நடாத்தியது.

கலாபூஷணம் எஸ்.ஏ. மிராண்டா அவர்களால் எழுதிய 'நினைவழியாப் பதிவுகள் சில' தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவே சனிக்கிழமை (17.12.2022) இடம்பெற்றது.

பேசாலை புனித வெற்றிநாயகி ஆலய மண்டபத்தில் பத்திமா கழகத்தின் தலைவர் திரு. சூசை புறுனோ டயஸ் தலைமையில் இடம்பெற்றது.

தேனாரம் துயர் பகிரும் இணையத்தளம்

இவ்விழாவில் முதன்மை விருந்தினராக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவரும் பேசாலை பங்குத் தந்தையுமான அருட்பணி ஏ. ஞானப்பிரகாசம் அடிகளார் கலந்து கொண்டு இப் புத்தகத்தை சம்பிரதாய முறைப்படி வெளியீடு செய்தார்.

இந் நிகழ்வில் மன்னார் அரசாங்க அதிபர் திருவாட்டி ஏ. ஸ்ரான்லி டிமெல் , முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. ம. ஆபேல் றெவ்வல், முன்னாள் மன்னார் மறைமாவட்ட முதியோர் சமாச இயக்குனர் அருட்பணி அல்பன் ராஜசிங்கம் அடிகளார் (அ.ம.தி), வவுனியா பங்கு தந்தை அருட்பணி எஸ்.கே. தேவராஜா அடிகளார், மன்னார் ஞானோதயம் அதிபர் அருட்பணி செ. ஜெயந்தன் பச்சேக் அடிகளார் (அ.ம.தி.), மன்னார் பேராலயம் பங்குத் தந்தை அருட்பணி. இரா. அகஸ்ரின் புஸ்பராஜா அடிகளார், பெரியகட்டு புனித அந்தோனியார் திருத்தல பரிபாலகர் அருட்பணி. க. அ. அருள்ராஜ் குரூஸ் அடிகளார் . பேசாலை உதவிப் பங்குத் தந்தை அருட்பணி. செ. டிசாந்தன் அடிகளார் உட்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.

இப் புத்தகம் ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் 12 ஆங்கில கவிதைகள் இவைகள் பெரியோரை வாழ்த்தி எழுதப்பட்ட கவிதைகளாகும்.

அடுத்து 06 ஆங்கில கட்டுரைகள் இவைகளில் 03 தனிநபர்பற்றிய கட்டுரைகளாகும். ஏனைய 03 வரலாற்று கட்டுரைகளாகும்.

மூன்றாவது பிரிவில் 23 ஆக்கங்கள் இவைகளில் கவிதைகள், வாழ்த்து கட்டுரைகள், இரங்கல் பாக்களாக அமைந்துள்ளன.

நான்காவது பிரிவில் 12 ஆக்கங்கள் புனையப்பட்டுள்ளன. இவைகள் நீங்காத நினைவுகள் சம்பந்தமாக எழுதப்பட்டுள்ளது.

ஐந்தாம் பிரிவில் ஆய்வு கட்டுரைகளாக அமைந்துள்ளன. ஆறாம் பிரிவில் 06 ஆக்கங்கள் அமையப்பெற்றுள்ளன. இவைகள் ஆலயங்களில் பாடப்படும் கவிப்பாக்களாக அமைந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

பேசாலையில் பத்திமா கழகத்தின்  நூல் வெளியீட்டு விழா.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)