
posted 5th December 2022
வன்னி மாவட்டத்தில் யுத்தத்திற்கு பிற்பாடு மீளக் குடியேறியுள்ள மக்களின் வீட்டுத்திட்டங்கள் இன்னும் பூரணத்துவம் அடையவில்லை. மூன்று தாசாப்தங்கள் கடந்தும் இன்னும் ஏராளமான மக்கள் வீடுகளில்லாமல் ஓலைக் குடிசைகளில் வாழ்வது ஏற்றுக்கொள்ள முடியாது என கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.
மன்னார் முசலி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள தளபாடங்கள் உள்ளடங்கலாக 25 வீடுகளில் முதற்கட்டமாக பூரணத்துவமடைந்துள்ள 8 வீடுகளை பயனாளிகளுக்கு கையளித்து வைக்கும் நிகழ்வு ஞாயிறிறுக்கிழமை (04) இப் பகுதியில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் உரையாற்றும்போது மேலும் தெரிவிக்கையில்;
போர் கண்ட வன்னி மாவட்டத்தில் இழக்கப்பட்ட சொத்துக்களும், உயிர்ச் சேதங்களும் இம்மக்களின் மனதை விட்டு அகலாத வடுவாகவே காணப்படுகின்றது.
மீளக் குடியேறியுள்ள மக்களிற்கு அரசு உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களினாலும், அமைப்புக்களினாலும், தனவந்தர்களினாலும் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் பூரணமாக நிர்மாணிக்கப்பட்டு இன்னும் வழங்கப்படவில்லை. வழங்கப்பட்ட சில வீட்டுத் திட்டங்களும் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக நான் ஜனாதிபதியிடம் கோரிக்கையொன்றை விடுத்துள்ளேன். இது விரைவில் வெற்றியளிக்கும் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
இத்துடன் தொழிலற்று இருக்கும் சுயதொழில் முனைவோருக்கான பல்வேறு திட்டங்களைக் கொண்டு வரவும் உத்தேசித்துள்ளோம். கிராமிய ரீதியிலான ஒரு பொருளாதார கொள்கையொன்றும் இதன்போது முன்னெடுக்கப்படும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)