
posted 22nd December 2022

இலங்கை மற்றும் மாலைதீவில் கைத்தொழிற் துறையில் பிளாஸ்டிக்கின் பயன்பாட்டைக் குறைத்தல் மற்றும் ஒருங்கிணைந்த திண்மக்கழிவு முகாமைத்துவ நடைமுறைகளை மேம்படுத்துதல் ஆகியவற்றின் ஊடாக சுற்றுச் சூழலில் பிளாஸ்டிக்கின் அளவைக் குறைப்பதற்கான ஒரு திட்டமிடப்பட்ட 5 ஆண்டு கால செயற்திட்டத்தை இலங்கை மற்றும் மாலைதீவில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிப்பதை சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பு (USAID) அறிவிக்கிறது.
Research Triangle International (RTI) தலைமையிலான இச்செயற்திட்டத்தின் கூட்டமைப்பானது, கட்டமைப்பு முறைகளில் காணப்படும் வினைத்திறனின்மை மற்றும் தூய்மையான பிளாஸ்டிக் மீது தங்கியிருக்கும் பகுதிகளை இலக்கு வைத்துச் செயற்படுவதற்கு உள்ளூர் பங்காளர்களுடன் இணைந்து பணியாற்றுகிறது. திண்மக்கழிவு முகாமைத்துவம் மற்றும் அவற்றைக் குறைக்கும்.
நிகழ்ச்சித் திட்டங்களில் பங்கேற்பதை அதிகரித்தல் மூலம் ஆயிரக்கணக்கான தொன் பிளாஸ்டிக் சுற்றுச் சூழலுக்குள் கசிவதைத் தடுப்பதே திட்டத்தின் ஒட்டுமொத்த இலக்காகும்.
“இலங்கை மற்றும் மாலைதீவு மக்களின் சுகாதாரம் மற்றும் சுற்றுச் சூழலுக்கு அச்சுறுத்தலாக அமையும் பிளாஸ்டிக் பொருட்களை குறைப்பதற்கும், மீள்பயன்பாட்டினை மேற்கொள்வதற்கும், மற்றும் அவற்றை மீள்சுழற்சி செய்வதற்கும், இலங்கை மற்றும் மாலைதீவு அரசுகள், தனியார் துறை, சிவில் சமூகம் மற்றும் சமூகங்களுடன் இணைந்து செயற்படுவதில் USAID பெருமிதம் கொள்கிறது” என USAIDஇன் இலங்கை மற்றும் மாலைதீவு செயற்பணிப் பணிப்பாளர் Gabe Grau தெரிவித்தார். “பிளாஸ்டிக் மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதானது கடல் சுற்றுச்சூழற் தொகுதிகள் மற்றும் வாழ்வாதாரங்கள், உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றிற்கான அச்சுறுத்தல்களைக் குறைத்து அதன் மூலம் இறுதியில் மனித ஆரோக்கியத்திற்கான அச்சுறுத்தல்களைக் குறைக்கும்” என அவர் மேலும் தெரிவித்தார்.
பிளாஸ்டிக்கினால் சமுத்திரம் மாசடைவதானது உலகின் மென்மையான கடல் சுற்றுச்சூழற் தொகுதிகள், மீன்பிடி மற்றும் சுற்றுலாத் துறைகள், உணவுப் பாதுகாப்பு மற்றும் மனித ஆரோக்கியம் ஆகிவற்றிற்கு ஒரு அச்சுறுத்தலாக அமைகிறது. ஒவ்வொரு நிமிடமும் ஒரு முழு குப்பை வண்டிக்குச் சமமான அளவு பிளாஸ்டிக் கழிவுகள் உலகின் சமுத்திரங்களைச் சென்றடைகின்றன. வருடாந்தம் கிட்டத்தட்ட பதினொரு மில்லியன் தொன்கள் பிளாஸ்டிக் மாசுபாட்டினை அது ஆரம்பிக்கும் மூலத்தில் இருந்து நிறுத்துவதே இந்தச் சவாலை எதிர்கொள்வதற்கான மிகச் சிறந்த வழியாகும். சமுத்திர பிளாஸ்டிக் துகள்களில் பெரும்பான்மையானவை, பெருகிவரும் சனத்தொகை மற்றும் அதிகரித்து வரும் கழிவுகளின் அளவு ஆகியவற்றுடன் அரசாங்கங்கள் போராடும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் கடலோரப் பகுதிகளில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் இருந்து வருகின்றன.
கழிவு முகாமைத்துவத்தில் இலங்கையும், மாலைதீவும் தனித்துவமான சவால்களை எதிர்கொள்கின்றன. இலங்கையில், நகர்ப்புற சனத்தொகையின் வளர்ச்சி வேகத்திற்கு ஈடு கொடுப்பதற்கு நாட்டின் திண்மக் கழிவு முகாமைத்துவ அமைப்புகள் போராடுகின்றன. 1,200 பவளத் தீவுகளைக் கொண்ட தீவுக்கூட்டமான மாலைதீவானது, கழிவுகளை சேமித்து வைப்பதற்கு மிகக் குறைந்த அளவிலான நிலப்பரப்பினையே கொண்டுள்ளதுடன், உள்நாட்டு கழிவுகள் மற்றும் ஏனைய நாடுகளிலிருந்து கடல் நீரோட்டங்களால் சுமந்து வரப்படும் கடல் குப்பைகள் ஆகிய இரண்டையும் முகாமை செய்வதற்குத் திணறிக் கொண்டிருக்கிறது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)