
posted 12th December 2022
பிரதேசசபையின் செயற்பாட்டிற்கான புள்ளியிடலில் நானாட்டான் பிரதேச சபையானது மன்னார் மாவட்டத்தில் முதலிடத்தையும், வடக்கு மாகாண மட்டத்தில் மூன்றாம் இடத்தையும் பெற்று மன்னாருக்கு பெருமையை ஈட்டிக் கொடுத்துமல்லாது, இதனால் கிடைக்கப்பெறும் நிதியினைக் கொண்டு நானாட்டான் பிரதேச மக்களுக்கு மேலும் சேவையினை விரிவுபடுத்தக் கூடியதாக உள்ளது என நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் தி. பரஞ்சோதி தெரிவித்தார்.
உள்ளுர் அபிவிருத்தி உதவி திட்டத்தின் (எல்டிஎஸ்பி) கீழ் செயற்பாட்டு நிதி முன்னளிப்பிற்காக இரண்டாம் கட்டத்திற்கான 2022 ஆம் ஆண்டிற்காக ஒக்டோபர் மாதம் நடைபெற்ற பிரதேச சபையின் செயற்பாட்டிற்கான புள்ளியிடலில் நானாட்டான் பிரதேச சபையானது 766 புள்ளிகளை பெற்று அடைவு மட்டக்குழு 01இல் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றுள்ளது.
அத்துடன் மாகாண மட்டத்தில் மூன்றாம் இடத்தையும் பெற்று மன்னார் மாவட்டத்துக்கு பெருமையை ஈட்டிக் கொடுத்துள்ளது.
இதன்காரணமாக 35 மில்லியன் நிதியினை நானாட்டான் பிரதேச சபை பெற்றுக் கொள்வதற்கு தகுதியாகியுள்ளது.
பிரதேச சபைக்கு நிதியினை ஈட்டித்தரும் திட்டங்களாக முதல் திட்டமாக நானாட்டானில் திண்மக் கழிவு தரம் பிரித்தல் நிலையத்துடன் சேதன பசளை உற்பத்தி நிலையத்தினை அமைப்பதற்கு முன்மொழியப்பட்டு நிர்மாணப் பணிகள் 2023 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு அடைவு மட்டக்குழு 03இல் இடம்பெற்று மாவட்ட மட்டத்தில் ஐந்தாம் இடத்தையும், மாகாண மட்டத்தில் 24 ஆம் இடத்தையும் இப் பிரதேச சபை பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் கிடைக்கப் பெற்ற 9.12 மில்லியன் நிதியில் இச் சபை வாகன திருத்தங்களும், பிரதான அலுவலக மிகுதி வேலைகளும் முடிவுறுத்தப்பட்டு அலுவலகம் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது என்றும், இவ் வளர்ச்சிக்கு உழைத்த செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு பாராட்டுகளையும் நன்றிகளையும் நானாட்டான் பிரதேச தவிசாளர் தி. பரஞ்சோதி தெரிவித்துள்ளார்.
இச் சபையின் உத்தியோகத்தர்களின் செயற்பாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்கிய கௌரவ உறுப்பினர்களுக்கும் நன்றிகள் தெரிவித்துள்ள தவிசாளர், இவ்வாறான திட்டங்களினூடாக அதிக நிதி தேவைப்பாடு உடைய திட்டங்களை மேற்கொள்வதனூடாக சபை நிதியினை மிதப்படுத்தக்கூடியதாக உள்ளதுடன், அந் நிதியினை வேறு சபை நடவடிக்கைளுக்கு பயன்படுத்தக் கூடியதாக உள்ளது எனவும் அவர் மேலும் தெரிவிக்கின்றார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)