பலவகைச் செய்தித் துணுக்குகள்

கடலட்டை பண்ணைக் கெதிரான அழைப்பாணை

கிராஞ்சியில் கடலட்டை பண்ணைக் கெதிராக போராடும் 10 பேருக்கு நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சி, பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிராஞ்சி பகுதியில் கடலட்டை பண்ணைக் கெதிராக 65ஆவது நாளாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றினால் 10 பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 10 பேருக்கே இவ்வாறு மன்றினால் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.

வழக்கு தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது எனவும் அவர்கள் கூறினர்.
அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இருவர் எவ்வித காரணமுமின்றி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



அம்புலன்ஸ் வசதி இல்லாத வைத்தியசாலை

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் அம்புலன்ஸ் வசதி இல்லாததால் தாங்கள் அவதியுறுவதாக வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில்,

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில், அராலி, துணவி, முதலிய கோவில் சங்கரத்தை, சித்தங்கேணி, மூளாய், சுழிபுரம் மற்றும் பொன்னாலை பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கான மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் குறித்த வைத்தியசாலையில் சீரான ஆம்புலன்ஸ் வசதிகள் இல்லை.

கடந்த 23 ஆம் திகதி இளம் குடும்பப்பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். அதனைப் பார்த்த சிறுமி ஒருவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமுற்றிருந்தார்.

இந்நிலையில் குறித்த சிறுமியை வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற வேளை அவருக்கு அங்கு முதலுதவிகள் வழங்கப்பட்டன. பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுமாறு வைத்தியர்கள் கூறினர்.

அதற்கு நாங்கள், வைத்தியசாலை அம்புலன்ஸில் அழைத்துச் செல்லுமாறு கூறினோம். அதற்கு அவர்கள், வைத்தியசாலை அம்புலன்ஸ் இல்லை எனக் கூறினார்கள். ஆனால் வைத்தியசாலையில் அம்புலன்ஸ் ஒன்று நிற்பதை அவதானித்த நாங்கள் அம்புலன்ஸ் நிற்கிறது தானே, அந்த அம்புலன்ஸில் அழைத்துச் செல்லுங்கள் எனக் கூறினோம்.

அதற்கு அவர்கள், இந்த அம்புலன்ஸ் காரைநகர் வைத்தியசாலையின் அம்புலன்ஸ். கல்லூண்டாய் பகுதியில் வந்து கொண்டிருந்த வேளை இந்த அம்புலன்ஸ் பழுதடைந்துள்ளமையால் இங்கு கொண்டு வந்து பல நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளது.

எமது வைத்தியசாலையின் அம்புலன்ஸ் காரைநகர் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. காரைநகரில் இருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கான தூரம் அதிகம் என்பதால் அங்கு உள்ள நோயாளிகளை யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்கு எமது அம்புலன்ஸ் பயன்படுத்தப்படுகிறது. மாலை தான் எங்களது வைத்தியசாலையின் அம்புலன்ஸ் வரும் என கூறினர்.

இந்நிலையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்க நிலையில் இருந்த சிறுமி சிகிச்சை வசதிகள் அல்லது முதலுதவிகள் எதுவும் இல்லாத ஓட்டோ மூலமே யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

எமது வைத்தியசாலை ஒரு பிரதேச தரத்திலான வைத்தியசாலை. ஆனால் இங்கு 24 மணிநேர வைத்திய சேவைகள் இல்லை. அவசரம் என்று வருபவர்கள் மேலதிக சிகிச்சைக்காக, எந்த விதமான மருத்துவ வசதிகளும் இல்லாத தனியார் வாடகை வாகனங்களில், உயிரை கைகளில் பிடித்துக் கொண்டு தான் யாழ். போதனா வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய நிலை.

இந்த பிரச்னை இன்று நேற்று அல்ல, பன்னெடுங்காலமாக இடம்பெற்று வருகிறது. அம்புலன்ஸ் இருந்தாலும், சாரதி இல்லை அல்லது வேறு ஏதாவது காரணங்கள் கூறி அம்புலன்ஸ் சேவையில் ஈடுபடுத்தப்படுவதில்லை. வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் அம்புலன்ஸ் சேவை என்பது எமக்கு எட்டாக் கனியாகவே காணப்படுகிறது.

பழுதடைந்த அம்புலன்ஸ் நிறுத்திவைப்பதற்கு இது வாகனங்கள் திருத்தும் நிலையமா அல்லது வைத்தியசாலையா? எங்களது வைத்தியசாலை அம்புலன்ஸ் எங்களுக்கு தேவை. 24 மணிநேர வைத்திய சேவைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இந்நிலைகள் சீருக்கு வராத பட்சத்தில் நாங்கள் பாரிய போராட்டத்தை முன்னெடுக்கவேண்டி ஏற்படும். எனவே வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எமக்கு விரைவில் உரிய தீர்வினை வழங்க வேண்டும் என்றனர்.



அடையாளம் காணப்பட்ட 14 இலங்கையர்கள்

மலேசியாவிற்கு பயணம் மேற்கொண்டிருந்த 14 இலங்கையர்கள் அடங்கிய குழுவொன்றை நேற்று முன் தினம் மேற்கொண்ட சோதனையின்போது, சுற்றுலா விஸாவில் தொழில் நோக்கத்திற்காக பயணித்த 9 பேர் அடையாளம் காணப்பட்டதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் இருந்தபோதே குறித்த குழு அடையாளம் காணப்பட்டுள்ளது.

எயார் ஏசியா விமானத்தில் நான்கு பெண்களும், ஐந்து ஆண்களும் மலேசியாவுக்கு இந்த மோசடியை மேற்கொண்ட நபர்களால் அனுப்பப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகள் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட விரிவான விசாரணைகளை அடுத்து இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவினர் பணியகத்தின் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.


மின் ஒளி பாய்ச்சி மீன் பிடிக்கும் செயற்பாடுகள்

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி, கட்டைக்காடு கடற்பரப்பில் சிறிய கண் வலைகளைப் பயன்படுத்தி மின் ஒளி பாய்ச்சி மீன் பிடிக்கும் செயற்பாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக தமது பகுதி கடற்பரப்பில் குறித்த கடற்றொழில் நடவடிக்கையை சில தொழிலாளர்கள் முன்னெடுத்து வருவதால் தமது தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டி வரும் கடற்றொழில் சங்கங்கள், அதனை தடை செய்யுமாறு வலியுறுத்தி வந்திருந்ததுடன் இவ்விடயம் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்துக்கும் கொண்டுசென்றிருந்தன.

இந்த நிலையில் துறைசார் அதிகாரிகள் மற்றும் கடற்படை அதிகாரிகள் கடற்றொழிலாளர்கள் ஒன்றிணைந்து நேற்று கலந்துரையாடலொன்றை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த கலந்துரையாடலில் ஒளி பாய்ச்சி சிறிய கண் வலைகளை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் தொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த துறைசார் அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் இணக்கம் தெவித்தனர்.

இதனையடுத்து நேற்று முன் தினம் முதல் குறித்த தொழில் நடவடிக்கைகள் தடை செய்யப்படுவதுடன் அதனை மீறி தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் தொழிலாலர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் மட்ட கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


பலவகைச் செய்தித் துணுக்குகள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)