
posted 12th December 2022
தப்பி ஒடிய கைதி கைது
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பியோடிய விளக்கமறியல் கைதி கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பரந்தனில் மோட்டார் சைக்கிளில் திருடியமை, திருடிய மோட்டார் சைக்கிளில் உரும்பிராய் பகுதியில் சங்கிலி அறுத்தமை, இளவாலை பகுதியில் இரண்டு வீடுகளின் கதவுகளை உடைத்து உள்நுழைந்து திருடியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்ட இளவாலை பகுதியை சேர்ந்த 25 வயதுடைய இளைஞன், நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
அந்நிலையில் திடீர் சுகவீனமுற்ற நிலையில் சிறைச்சாலை பாதுகாவலர்களின் பாதுகாப்பில் யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பியோடி இருந்தார்.
தப்பியோடிய நபரை, சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸார் தேடி வந்த நிலையில் , சனிக்கிழமை (10) கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
விபத்தில் உயிரிழந்த இளைஞர்
வடமராட்சி - வல்லைப் பகுதியில் நேற்று முன்தினம் ஞாயிறு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
நெல்லியடி திருமகள் சோதி வீதியைச் சேர்ந்த பூ. கவிதாசன் (வயது 24) எனும் இளைஞனே உயிரிழந்தார்.
வல்லை பகுதியில் வாகனம் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட வேளை குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த இளைஞனை அங்கிருந்தவர்கள் மீட்டு, பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா மருத்துவ மனைக்கு அவர்மாற்றப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி இளைஞன் உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிள் திருடன் கைது
கிளிநொச்சியில் பல்வேறு பகுதிகளிலும் மோட்டார் சைக்கிள்களை திருடி வந்த சந்தேக நபர் ஒருவரை கிளிநொச்சி மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் நேற்று (11) கைதுசெய்தனர்.
இதன்போது கடந்த மாதம் 16ஆம் திகதி திருடப்பட்டதாக கூறப்படும் மோட்டார் சைக்கிளொன்றையும் சந்தேக நபரிடமிருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் தெரியவருவதாவது,
அண்மைய நாட்களாக கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளிலும் மோட்டார் சைக்கிள்கள் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. இந்நிலையில் கடந்த மாதம் 16ஆம் திகதி அலுவலக விடுதியொன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பெண்களுக்கான மோட்டார் சைக்கிளொன்று திருடப்பட்டிருந்தது.
இது தொடர்பில் கிளிநொச்சி இரணைமடுவில் உள்ள கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போதே, நேற்றுமுன்தினம் வீடொன்றினுள் மறைத்து வைத்திருந்த குறித்த மோட்டார் சைக்கிளோடு சந்தேக நபரை கைதுசெய்துள்ளனர்.
இதேவேளை, சந்தேக நபரையும் சான்றுப் பொருளையும் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.
போராளிகள் நலன்புரிச் சங்கம் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
“இனத்துக்காக உழைத்தவர்களை இன்னலின்றி வாழ வைப்போம்” எனும் தொனிப் பொருளில் அங்குரார்ப்பண நிகழ்வு யாழ். இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது.
சர்வ மதத் தலைவர்களின் ஆசியுரையோடு இடம்பெற்ற குறித்த நிகழ்வில் போராளிகள், சர்வ மத தலைவர்கள், வர்த்தக பிரதிநிதிகள், முன்னாள் போராளிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இரத்த தான முகாம்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் இரத்த தான முகாம் ஞாயிறு (11) இடம் பெற்றுள்ளது.
யாழ் கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டு கழகம் மற்றும் புனித கப்பலேந்தி மாதா ஆலய இளையோர் ஒருங்கிணைந்து குறித்த இரத்ததான முகாமை நடத்தியுள்ளனர்.
அருட்தந்தை அமல்ராஜ் அடிகளார் தலைமையில் கட்டைக்காடு மரியாள் மண்டபத்தில் காலை 10:00 மணி தொடக்கம் 02.00 வரை இடம் பெற்ற நிகழ்வில் இளைஞர்கள் பலரும் ஆர்வத்துடன் குருதிக் கொடையளித்தனர்.
குருதியினை யாழ் போதனா வைத்திய சாலை குருதி வங்கி பிரிவினர் பெற்றுக் கொண்டனர்.

போராளிகள் நலன்புரிச் சங்கம் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
“இனத்துக்காக உழைத்தவர்களை இன்னலின்றி வாழ வைப்போம்” எனும் தொனிப் பொருளில் அங்குரார்ப்பண நிகழ்வு யாழ். இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது.
சர்வ மதத் தலைவர்களின் ஆசியுரையோடு இடம்பெற்ற குறித்த நிகழ்வில் போராளிகள், சர்வ மத தலைவர்கள், வர்த்தக பிரதிநிதிகள், முன்னாள் போராளிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

மண்டாஸ் புயலால் சேதமடைந்த படகுகள்
மண்டாஸ் புயலின் தாக்கம் காரணமாக குருநகரில் மீனவர்களின் 30 படகுகள் சேதமடைந்துள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.
சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவர்களின் படகுகளே அலைகளால் அடிக்கப்பட்டு சேதமடைந்தன என்று மீனவர்கள் தெரிவித்தனர்.
இதனால் கடற்றொழிலுக்கு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றும், பொருளாதார ரீதியாக நலிவடைந்துள்ளதாகவும், மேலும், சேதமடைந்த படகுகளை திருத்தும் வசதி தம்மிடம் இல்லை என்றும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்தனர்.
மேலும், தமக்கு அரசாங்கம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)