
posted 17th December 2022
தாழமுக்கம் ஏற்படுவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி தெரிவிப்பு
வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஏற்படுவதால் எரிர்வரும் நான்கு தினங்கள் மழையும் பலமான காற்றும் வீசக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதால் மக்கள் மிக அவதானமாக இருக்க வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போது வங்காள விரிகுடாவில் உருவாகி வருகின்ற தாழமுக்கம் காரணமாக எதிர்வரும் திங்கள் செவ்வாய் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் அதிகளவான மழைவீழ்ச்சியும் பலத்த காற்றும் வீசக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மக்கள் இவ்விடயத்தில் மிக அவதானமாக இருப்பதுடன் தங்களுடைய கால்நடைகளை இக்காலப் பகுதிகளில் மிகவும் அவதானமாக பராமரிக்கும்படியும்.
அத்துடன் கடற்தொழிலில் ஈடுபடுபவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்க்கும்படியும் அல்லது அவதானமாக இருக்குமாறும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
கட்டாக்காலி கால்நடைகளால் விபத்துக்கள் ஏற்படாவண்ணம் பாதுகாக்கப்பட வேண்டும்
மன்னார் மாவட்டத்தில் மிகவும் முக்கியமான வீதிகளில் கட்டாக்காலி கால்நடைகளின் தொல்லைகள் ஆரம்பிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக தள்ளாடி பிரதான வீதியில் இரவு பகலாக நூற்றுக்கும் மேற்பட்ட கால்நடைகள் வீதிகளில் நின்று போக்குவரத்திற்கு இடையூறு செய்வதாக வாகன சாரதிகள் தெரிவிக்கின்றார்கள்.
இரவு பகல் சேவையில் ஈடுபடும் நோயாளர் காவு வண்டிகள் பொதுப் போக்குவரத்து பேருந்துகள் பாதிக்கப்படுவதுடன் இவற்றால் விபத்துக்கள் ஏற்படும் நிலை உள்ளதாகவும் தெரிவிக்கின்றார்கள்.
தற்பொழுது மன்னார் பெருந்நிலப்பரப்பு பகுதிகளில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதால் அப்பகுதிகளில் சரியான மேய்ச்சல் நிலம் இன்மையால் கால்நடை வளர்ப்போர் தங்கள் கால் நடைகளை சரியான இடத்திற்கு கொண்டு செல்ல முடியாத நிலையில் பல கால்நடைகள் மன்னார் தீவு பக்கம் திருப்பி விடப்பட்டுள்ளதாலேயே இந்த நிலை தோன்றியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே உரிய அதிகாரிகள் கவனம் எடுத்து வீதிகளில் நடமாடும் கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்தி பொதுமக்களுக்கு ஏற்படும் விபத்து அசௌகரியங்களிலிருந்து பாதுகாக்குமாறு பாதிப்புகளுக்கு உள்ளாக நேரிடுவோர் இவ்வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)