
posted 15th December 2022
'நினைவழியாப் பதிவுகள் சில'
மன்னார் பேசாலை பத்திமா கழகத்தின் வெளியீடாக ஓய்வுநிலை பாடசாலை அதிபர் கலாபூஷணம் எஸ்.ஏ. மிராண்டா அவர்கள் எழுதிய 'நினைவழியாப் பதிவுகள் சில' தொகுப்பு நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை (17.12.2022) இடம்பெறுகின்றது.
பேசாலை பத்திமா மத்திய மகா வித்தியாலய மண்டபத்தில் குறிப்பிட்டத்தினம் (17) காலை 9.30 மணிக்கு பத்திமா கழகத்தின் தலைவர் திரு.சூசை புறுனோ டயஸ் தலைமையில் இடம்பெறுகின்ற இவ்விழாவில் முதன்மை விருந்தினராக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவரும் பேசாலை பங்குத் தந்தையுமான அருட்பணி ஏ. ஞானப்பிரகாசம் அடிகளார் கலந்து கொள்ளுகின்றார்.
அத்துடன் சிறப்பு மற்றும் கௌரவ விருந்தினர்களாக மன்னார் அரசாங்க அதிபர் திருவாட்டி ஏ. ஸ்ரான்லி டிமெல், மன்னார் வலய கல்விப் பணிப்பாளர் செல்வி ஜி.டி. தேவராஜா, முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. ம. ஆபேல் றெவ்வல், முன்னாள் மன்னார் மறைமாவட்ட முதியோர் சமாச இயக்குனர் அருட்பணி அல்பன் ராஜசிங்கம் அடிகளார் (அ.ம.தி), தாழ்வுபாடு பங்கு தந்தை அருட்பணி. ஏஸ். ஜெயபாலன் குரூஸ் அடிகளார், வவுனியா பங்கு தந்தை அருட்பணி எஸ்.கே. தேவராஜா அடிகளார், மன்னார் மடுமாதா சிறிய குருமடம் அதிபர் அருட்பணி தமிழ்நேசன் அடிகளார், மன்னார் ஞானோதயம் அதிபர் அருட்பணி செ. ஜெயந்தன் பச்சேக் அடிகளார் (அ.ம.தி.), மன்னார் பேராலயம் பங்குத் தந்தை அருட்பணி. இரா. அகஸ்ரின் புஸ்பராஜா அடிகளார், பெரியகட்டு புனித அந்தோனியார் திருத்தல பரிபாலகர் அருட்பணி. க. அ. அருள்ராஜ் குரூஸ் அடிகளார், பேசாலை உதவிப் பங்குத் தந்தை அருட்பணி. செ. டிசாந்தன் அடிகளார் உட்பட பலர் இதில் கலந்துகொள்ள உள்ளனர்.
'கணபதி ஹோமம்' பயிற்சி நெறி
வடக்கு மாகாண கௌரவ ஆளுனரின் பணிப்புரைக்கு அமைவாக இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம் மற்றும் இந்து பண்பாட்டு நிதியம் என்பவற்றின் அணுசரனையுடன் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், மன்னார் மாவட்ட செயலகம் மற்றும் மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் ஒத்துழைப்புடன் மன்னார் மாவட்ட இளம் இந்து குருமார்களுக்கான 'கணபதி ஹோமம்' பயிற்சி நெறி இடம்பெறுகின்றது.
மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவை தலைவரும் திருக்கேதீஸ்வரத் திருத்தலத்தின் பிரதம குருவுமாகிய சிவஸ்ரீ தியாக கருணானந்த குருக்கள் தலைமையில் இந் நிகழ்வு நடைபெறுகின்றது.
சனிக்கிழமை (17.12.2022) காலை 8.30 மணிக்கு மன்னார் உப்புக்குளம் ஸ்ரீ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நடைபெறும் இந் நிகழ்வுக்கு சிறப்பு அதிதியாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருவாட்டி அ. ஸ்ரான்லி டிமெல் அவர்கள் கலந்துகொண்டு இப் பயிற்சி நெறியை ஆரம்பித்து வைக்க இருக்கின்றார்.
இப் பயிற்சி நெறிக்கு வளவாளராக யாழ் பல்கலைக்கழகம் (இந்துக்கற்கைகள் பீடம்) பீடாதிபதியும், முன்னேஸ்வரம் தேவஸ்தான தர்ம கர்த்தாவுமான பிரம்மஸ்ரீ சர்வேஸ்வர பத்மநாப சர்மா அவர்கள் கலந்துகொள்ளுகின்றனர்.
அத்துடன் இப் பயிற்சிநெறி நிகழ்வில் செந்தமிழருவி சிவஸ்ரீ மகா தர்மகுமார குருக்கள், மன்னார் மாவட்ட செயலக சிரேஷ்ட கலாச்சார உத்தியோகத்தர் இ. நித்தியானந்தன் ஆகியோரும் கலந்துகொள்ளுகின்றனர்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)