பலவகைச் செய்தித் துணுக்குகள் - 13.12.2022

விலங்குகள் இறந்ததற்கு குளிர் அதிர்ச்சியே

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாடுகள் மற்றும் ஆடுகள் உயிரிழந்தமைக்கான காரணம் குளிரால் ஏற்பட்ட அதிர்ச்சியே என விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக நிலவிய மோசமான வானிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 1,660 பசுக்கள், எருமைகள் மற்றும் ஆடுகள் உயிரிழந்துள்ளன. அதிக எண்ணிக்கையிலான பிற விலங்குகளும் முக்கியமானவை.

இந்த திடீர் மிருக மரணங்கள் தொடர்பில் முறையான விசாரணை நடத்தி அறிக்கையை வழங்குமாறு விவசாய, வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மகிந்த அமரவீர உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

இதன்படி, பேராதனை கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம், கால்நடை மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை விவசாய அமைச்சரிடம் கையளித்துள்ளது.

அதற்கமைய, குறித்த விலங்குகள் இறந்ததற்குக் காரணம் தொற்றுநோய் அல்ல, மாறாக கடுமையான குளிரால் ஏற்பட்ட அதிர்ச்சியே காரணம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேனாரம் துயர் பகிரும் இணையத்தளம்

குடும்ப அட்டை ஒரு சட்ட ரீதியான ஆவணமில்லை

வடக்கு மாகாணத்தில் மட்டும் நடைமுறையில் உள்ள குடும்ப அட்டை முறைமை குடும்ப விவரங்களையோ அல்லது வதிவிடத்தையோ உறுதிப்படுத்தும் சட்ட ரீதியான ஆவணம் அல்ல என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்தார்.
மனித உரிமைகள் தினத்தன்று சட்டத்துக்கு மனித உரிமைக்கான அமைப்பு ஏற்பாடு செய்த கலந்துரையாடல் நிகழ்வில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

வட மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் குடும்ப அட்டை விவகாரம் தொடர்பில் முரண்பாடான சம்பவங்கள் எமது கவனத்திற்கு வருகின்றன.

குடும்ப அட்டையில் உள்ள விபரங்களை வைத்து பாடசாலை அனுமதி, பொருட்கள் விநியோகம் மற்றும் ஏனைய உறுதிப்படுத்தல் சார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உதாரணமாக, ஒரு மாணவனின் பாடசாலை அனுமதிக்கு வதிவிடத்தை உறுதிப்படுத்த குடும்ப அட்டையை கேட்பது தவறாகும்.

அண்மையில் ஏற்பட்ட கொவிட் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நிலமையில் உணவுப் பொருட்கள் விநியோகம், எரிபொருள் என்பவற்றிற்கு குடும்ப அட்டை மூலம் விநியோகிக்கும் நடமுறை காணப்பட்டது.

ஆனால், வடக்கு மாகாணத்துக்கு வெளியில் குடும்ப அட்டை நடைமுறை காணப்படாத நிலையில் சில ஒழுங்குபடுத்தல்களை மேற்கொள்வதற்காக வடக்கில் அதனை பயன்படுத்துகின்றனர்.

குடும்ப அட்டை நடைமுறை தொடர்பில் விளக்கம் அளிக்குமாறு சில பிரதேச செயலகங்களுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு யாழ் பிராந்திய அலுவலகம் சார்பில் கடிதம் அனுப்பினோம். எமக்கு பிரதேச செயல்களால் கிடைக்கப்பெற்ற பதில்களின் அடிப்படையில் குடும்ப விவகாரம் தொடர்பில் பிரதேச செயல்களுக்கு இடையில் வேறுபாடுகள் காணப்படுகின்றன.

ஆகவே, வடக்கு மாகாணத்தில் குடும்ப அட்டை நடைமுறையில் இருந்தாலும் அதனை கட்டாயமாக வழங்க வேண்டும் அல்லது அதில் உள்ள விடயங்களை காரணமாக குறிப்பிட்டு சட்டரீதியாக அணுக முடியாது என்றார்.



நகர சபைகள் மாநகர சபைகளாகத் தரமுயர்வு

மன்னார் மற்றும் அம்பாறை நகர சபைகளை மாநகர சபையாகளாகத் தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
தற்போதுள்ள உள்கட்டமைப்பு மற்றும் மனித வளத்தைப் பயன்படுத்தி, கூடுதல் வளங்களைச் செலவிடாமல், நகர்ப்புற வளர்ச்சித் தேவைகளை நிறைவேற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தற்போதுள்ள அனைத்து பிரதேச சபைகளையும் நகர சபைகளாக மாற்ற முடியுமா என்பது தொடர்பில் ஆராயுமாறு பிரதமர் தினேஸ் குணவர்தனவிடம் அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்து ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.


தேனாரம் துயர் பகிரும் இணையத்தளம்

ஆறுமுகநாவலரின் 200ஆவது ஜனன ஆண்டு

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் திருவவதாரம் செய்து இருநூறாவது ஜனன ஆண்டிலே, இந்து சமய, கலாசார அலுவல்கள், திணைக்களத்தின் சிறப்புமிகு ஏற்பாட்டிலும் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை, யாழ்.மாநகர சபை, சமய விவகாரக் குழு ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை (14) முதல் எதிர்வரும் 18 ஆம் திகதிகளில் நாவலர் பெருமான் அவதரித்த - நாளைக் கந்தன் திரு வீதியுலா வரும் புனித பதியிலே ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாடு நடைபெறவுள்ளது.

நாவலர் பெருமானின் குரு பூஜை நன்னாளிலே ஆரம்பமாகி ஜனன தின நாளிலே நிறைவு காணவுள்ள இம்மாநாடு நிகழ்வுகள், நல்லூர்ப் பதியிலே நாவலர் மணிமண்டபம், நாவலர் கலாசார மண்டபம், ஸ்ரீ துர்க்கா மணிமண்டபம், நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனக் கலா மண்டபம் ஆகிய இடங்களிலே ஆன்மீக அரங்கு, பொது அரங்கு, ஆய்வரங்கு என நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

ஆன்மிக அரங்கு நிகழ்வுகள் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் மணிமண்டபத்திலே ஆன்மிக அரங்கின் தொடக்க நிகழ்வுகள் 14.12.2022 அன்று காலை 7.30 மணிக்கு குருபூஜை நிகழ்வுகளோடு ஆரம்பமாகின. அதனைத் தொடர்ந்து நாவலர் பெருமானின் வரலாற்றைச் சித்திரிக்கின்ற ஓவியங்களும் நாவலர் பெருமானால் நம் சமூகத்திற்குத் தரப்பட்ட படைப்புகளும் உள்ளடங்கிய கண்காட்சி நிகழ்வின் அங்குரார்ப்பண வைபவமும் இடம்பெற்றன.

காலை 8.00 மணிக்கு நாவலர் பெருமானின் உருவப் படம் தாங்கிய திருவூர்வல நிகழ்வு ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மணிமண்டபத்திலிருந்து நாவலர் வீதியில் அமைந்துள்ள நாவலர் கலாசார மண்டபம் நோக்கிப் பவனி வந்தது.

நாவலர் கலாசார மண்டபத்திலே, பெயர்ப் பலகைத் திரை நீக்கத்தினைத் தொடர்ந்து ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானுக்கான குருபூஜை நிகழ்வுகளோடு ஆன்மிக அரங்கின் அரங்க நிகழ்வுகள், நல்லை ஆதீன முதல்வர் வணக்கதிற்குரிய ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள் மற்றும் சர்வதேச இந்துக் குருமார் ஒன்றியத் தலைவர் வணக்கத்திற்குரிய து.கு. ஜெகதீஸ்வரக் குருக்கள் ஆகியோர் திருமுன்னிலை வகிக்க, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ய. அநிருத்தனன் தலைமையில், யாழ்.மாநகர முதல்வர் வி. மணிவண்ணன் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிக்க நிகழ்வுகள் அரங்கேறின.

சமயப் பெரியார்கள், கல்விமான்கள், அறநெறிப் பாடசாலைச் சமூகத்தினர் எனப் பலரும் பங்கெடுத்த இந்நிகழ்வில் ‘’நாவலர் சைவக்காவலர்” எனும் தலைப்பிலான செஞ்சொற் செல்வர், கலாநிதி ஆறு. திருமுருகனின் சிறப்புரை, நூல் வெளியீடு மற்றும் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள் ஆகியவை நாவலர் கலாசார மண்டபத்திலே ஆன்மிக அரங்கில் நிகழ்ந்தேறின.

நல்லூர், ஸ்ரீ துர்க்காதேவி மணி மண்டபத்தில், ஐந்து நாட்கள் மாலை நேர நிகழ்வுகளாகப் பொது அரங்கு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. மாலை 5.00 மணி தொடக்கம் 7.00 மணி வரை நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

பொது அரங்கின் முதலாம் நாள் நிகழ்வு அமெரிக்கா, ஹவாய் சைவ ஆதீன சிவாய சுப்பிரமுனிய சுவாமிகளின் சீடர் வணக்கத்திற்குரிய ஆன்மிகச் சுடர் ரிஷி தொண்டுநாதன் சுவாமிகளும் சிலாபம் முன்னேஸ்வரம் தேவஸ்தானத்தின் பிரதம குரு வணக்கத்திற்குரிய சிவஸ்ரீ ச. பத்மநாப சர்மாவும் திருமுன்னிலை வகிக்க, வடக்கு மாகாணப் பிரதிப் பிரதம செயலாளர் அ. உமாமகேஸ்வரன் தலைமையில் இந்தியத் துணைத் தூதுவர் ஸ்ரீ ராகேஷ் நட்ராஜ் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிக்க, கனடா – சைவசித்தாந்த பீட இயக்குநர் வைத்திய கலாநிதி இ. லம்போதரனின் சிறப்புரை, நூல் வெளியீடு, யாழ்.பல்கலைக்கழக, இராமநாதன் நுண்கலைப் பீட, இசைத்துறைச் சிரேஷ்ட விரிவுரையாளர் பரந்தாமன் நவரட்ணத்தின் பண்ணிசைக் கச்சேரி முதலான கலை நிகழ்வுகளும் அரங்கேறவுள்ளன.


தமிழ் பேசும் கட்சிகளின் வலியுறுத்தல்கள்

தமிழ் மக்கள் மத்தியில் இன்றும் நீடிக்கும் காணி ஆக்கிரமிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி, அரசியல் கைதிகள் விடுதலை ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வு காணல், 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல் புதிய அரசமைப்பு தொடர்பில் ஏற்கனவே எட்டப்பட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு ஓர் இணக்கப்பாட்டை அடைதல் ஆகிய விடயங்களை ஜனவரி 31ஆம் திகதிக்கு முன்னர் நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத் திட்டங்களை ஜனாதிபதி தரப்பு செய்ய வேண்டும் என்று தமிழ் பேசும் கட்சிகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

இனப் பிரச்னைக்கு தீர்வு எட்டும் நோக்குடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்த சர்வகட்சி கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை (13) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்பில் வடக்கு - கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், மலையகத் தமிழரை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தென்னிலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் கலந்து கொண்டன.

ஜனாதிபதியின் உரையை தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்,

  • “13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
  • தமிழர் பகுதிகளில் தற்போதும் நீடிக்கும் காணிகள் ஆக்கிரமிப்பு நிறுத்தப்பட வேண்டும். ஏற்கனவே அபகரிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்.
  • காணாமல் ஆக்கப்பட்டோருக்கு உடனடியாக நீதி கிடைக்க வேண்டும்.
  • அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்,

என்ற விடயங்களை முன்வைத்தார்.

இதைத் தொடர்ந்து, முன்னாள் நீதி அமைச்சரும் இப்போதைய வெளிவிவகார அமைச்சருமான அலி சப்ரி, தற்போதைய நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் மூலமாக செய்யப்பட்ட விடயங்களை முன்வைத்தனர். அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது. அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் சட்ட விவகாரங்களை கருத்தில் கொண்டே அவர்களை விடுதலை செய்ய முடியும். அவர்களை படிப்படியாக விடுதலை செய்ய முடியும் என்று கூறினர்.

வேண்டியது நீதியே

அவர்களின் கருத்துக்கு பதில் உரைத்த சம்பந்தன், “காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அவர்களின் உறவினர்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டும். அவர்கள் எதிர்பார்ப்பதும் அதனைத்தான்...” என்று கூறினார்.

தொடர்ந்து, மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும், பிளவுபடாத இலங்கைக்குள் - உள்ளக சுயநிர்ணயத்துடன் கூடிய சமஷ்டி வடக்கு - கிழக்கு மாகாணங்களுக்கு உச்ச அதிகாரம் பகிரப்பட வேண்டும் என்று சம்பந்தனும், விக்னேஸ்வரனும் வலியுறுத்தினர்.

தொடர்ந்து இந்த அனைத்து விடயங்களையும் எதிர்வரும் ஜனவரி 31ஆம் திகதிக்கு முன்னதாக நடைமுறைப்படுத்த ஆரம்பிக்க வேண்டும் என்று சம்பந்தன் வலியுறுத்தினார்.

இதன்பின்னர் கருத்து வெளியிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, “13ஆவது திருத்தச் சட்டத்தை நான் ஆரம்பம் முதலே வலியுறுத்தி வருகிறேன். சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் உட்பட எல்லோரும் இப்போதுதான் இதை வலியுறுத்துகின்றனர். இதை வரவேற்கிறேன்” என்றார்.

13ஐ ஆதரித்த ஹக்கீம்

இதைத் தொடர்ந்து சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், 13ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டும் என்றும் வலியுறத்தினார். இதன் பின்னர் படிப்படியாக முன்னேற்றங்களை ஏற்படுத்த முடியும் என்றும் கூறினார்.

13ஆம் திருத்தத்துக்கு ஆதரவாக கருத்தை வெளியிட்ட மனோ கணேசன் மலையக தமிழ் மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும் கூறினார்.

ஒற்றையாட்சிக்குள்ளேயே தீர்வு

எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாஸ, 13ஆம் திருத்தத்துக்கு ஆதரவளித்ததுடன், பிளவுபடுத்த முடியாத இலங்கைக்குள் ஒற்றையாட்சிக்குள்ளேயே அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்று கூறினார்.

சிறீ லங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தியவர்களில் ஒருவரான அங்கஜன் இராமநாதன், சமஷ்டி மூலம் இனப் பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும். அதேசமயம், அபிவிருத்தி பணிகளும் வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

நசீர் அஹமட் எதிர்ப்பு

சுற்றாடல் துறை அமைச்சரான நசீர் அஹமட் மாத்திரம் வடக்கு - கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படக் கூடாது என்று எதிர்ப்பைக் கிளப்பினார்.

சுமந்திரன் எம். பி., அரசமைப்பு விடயத்தை ஆரம்பத்தில் தொடங்க வேண்டியதில்லை. இது தொடர்பாக பல அறிக்கைகள், இணக்கப்பாடுகள், வரைவுகள் கூட இருக்கின்றன. அவற்றையெல்லாம் சேர்த்து ஓர் இணக்கப்பாட்டை எட்டி தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும். ஜனவரி மாதத்திலேயே இந்தத் தீர்மானத்தை எடுக்க வேண்டும். ஏனெனில் 75ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர் இனப் பிரச்னைக்கு தீர்வு என்ற காலக்கெடுவை வைத்திருக்கிறார். எனவே, ஜனவரியில் முடிவு - இணக்கம் ஒன்று எட்டப்பட வேண்டும். இது மிகக் குறுகிய காலம் என்றாலும் அனைவரும் முயற்சிப்போம் என்றார்.

இந்த சந்திப்பு தொடர்பில் ஜனவரியில் ஒரு திகதியில் கூடிப் பேசுவது என்று அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மகிந்த மௌனம்

இந்தச் சந்திப்பில் பொதுஜன பெரமுன தரப்பிலிருந்து மகிந்த ராஜபக்ஷ, சாகர காரியவசம் ஆகியோர் பங்கேற்றபோதிலும் அவர்கள் எந்த கருத்தையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது


தம்பதியினர் கைது

யாழ்ப்பாணம் , அச்சுவேலி வளலாய் பகுதியில் உள்ள மீன் பிடி உபகரணங்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையத்தை உடைத்து , அங்கிருந்த பொருட்களைத் திருடிய குற்றச்சாட்டில் தம்பதியினர் கைது செய்யப்பட்டனர்.

குறித்த வர்த்தக நிலையத்தை உடைத்து , அங்கிருந்த சுமார் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள் திருடப்பட்டு இருந்தன.
அது தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் வர்த்தக நிலைய உரிமையாளர் முறைப்பாடு செய்திருந்தார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அப்பகுதியைச் சேர்ந்த தம்பதியைக் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் அவர்களிடம் இருந்து திருடப்பட்ட பொருட்களில் சிலவற்றை மீட்டுள்ளனர்.
கணவன், மனைவி இருவரையும் தொடர்ந்தும் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



உள்ளூராட்சி மன்றங்களின் வட்டாரங்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு எதிராக காரைநகர் பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சபையின் மாதாந்திர பொதுக் கூட்டம் புதன் (14) அன்று சபையின் தவிசாளர் பாலச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது குறித்த பிரேரணையை தவிசாளர் சபையில் முன்வைத்தார்.

இந்த பிரேரணைக்கு ஐக்கிய தேசியக் கட்சி, , ஈ. பி. டி. பி, உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர். இதனையடுத்து பிரேரணை சபையில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மான அறிக்கையானது பிரதேச செயலர், உள்ளூராட்சி அமைச்சர், வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது என்று தவிசாளர் செய்தியாளர்களுக்கு தெரிவித்தார்.


ஆசிரியர் இடமாற்றத்தில் குளறுபடி

வடக்கு மாகாணத்தில் அதிபர், ஆசிரியர் இட மாற்றங்களில் அரசியல் ரீதியில் தடுக்கப்படுகின்றன என்று இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் யாழ். மாவட்ட செயலாளர் வொல்வின் குற்றச்சாட்டினார்.

இன்று (14) யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள ஜே. வி. பி. அலுவலகத்தில் இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் இடமாற்றம் இன்றி பல ஆசிரியர்கள் வெளி மாவட்டங்களில் கடமையாற்றி வருகின்றார்கள். தற்போதைய நாட்டின் பொருளாதார நெருக்கடியில் அவர்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்ற நிலையில் தொடர்ச்சியாக யாழ். மாவட்டத்தில் இடமாற்றம் பெறாமல் அதிகமான ஆசிரியர்கள் அரசியல் செல்வாக்கினால் தொடர்ந்தும் அதே பாடசாலைகளில் கடமையாற்றி வருகிறார்கள்.

எமது தொழிற்சங்கம் இன்று புதன்கிழமை வட மாகாண ஆளுநரின் செயலாளரை சந்தித்து பல்வேறு குறைபாடுகள் தொடர்பில் விளக்கிக் கூறியிருக்கிறோம். அவரிடம் வடக்கில் ஆசிரியர் இடமாற்றம் முறையாக மேற்கொள்ளப்படுவதில்லை. வெளி மாவட்ட ஆசிரியர்களுக்கான இலவச பேருந்து சேவை நிறுத்தப்பட்டமை தொடர்பில் விசேடமாக கலந்துரையாடியுள்ளோம்.

வடக்கு மாகாணத்தில் ஆசிரியர்களை இடமாற்றம் செய்யவிடாமல் சேவையின் தேவை கருதி என்ற வாசகத்தை எழுதி அதிபர்கள் தொடர்ச்சியாக தங்களுக்கு இசைந்த ஆசிரியர்களை பாடசாலையிலே தங்க வைத்துள்ளார்கள். இவ்வாறு அவர்கள் தொடர்ச்சியாக தங்குவதால் பாடசாலையில் ஆசிரியர்களுக்கு இடையே முரண்பாட்டுகள் ஏற்படுகின்றது.

இதன் உண்மை நிலையை ஆராய்ந்து பார்த்தால் அதிபர்கள் கூறுவது போன்று சேவையும் இல்லை. தேவையும் இல்லை. அரசியல் பின்னணியில் இவர்களுடைய இடமாற்றங்களைத் தடுப்பதற்கான சூழ்ச்சியாகவே உள்ளது. ஆகவே, வடக்கு மாகாணத்தில் ஆசிரியர் மாற்றங்கள் உரிய முறையில் இடம் பெற வேண்டும் இல்லையெனில் மாகாணம் தழுவிய போராட்டத்தை முன்னெடுப்போம் என்றார்.


கடலட்டை பண்ணைகளுக்கு எதிரான போராட்டம்

கிளிநொச்சி - கிராஞ்சி பகுதி மக்களின் கடலட்டை பண்ணைகளுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (16) யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக முற்பகல் 10 மணிக்கு ஆரம்பிக்கும் இந்தப் போராட்டம் வட மாகாண ஆளுநர் செயலகத்தில் நிறைவடையவுள்ளது.

போராட்ட நிறைவில் வட மாகாண ஆளுநர் செயலகம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, கடற்றொழில் அமைச்சர் ஆகியோருக்கு மகஜர் கையளிக்கப்படவுள்ளது.

போராட்டத்துக்கான அழைப்பை தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் பிரதிநிதிகள் புதன் (14) யாழ்ப்பாணத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் விடுத்தனர்.

கிராஞ்சி பகுதி மீனவர்களின் போராட்டத்தை உரிய தரப்பினர் கண்டுகொள்வதாக இல்லை. மக்களின் விருப்புக்கு மாறாக கடலட்டை பண்ணைகளை அமைக்க முடியாது. கடலட்டை பண்ணையை முன்னுரிமைப்படுத்தி அரசாங்கம் செயல்படுகிறது.

இதில் பல்தேசிய நிறுவனங்களே நன்மை பெறுகின்றன என தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் ஆ. சதீஸ்வரன் தெரிவித்தார்.

வட மாகாணத்திலுள்ள அனைத்து சிவில் சமூகத்தினரும் அரசியல் தரப்புகளும் பங்கேற்று போராட்டத்துக்கு ஆதரவளித்து பங்கேற்க வேண்டுமென இ. முரளிதரன் அழைப்பு விடுத்தார்.

சிறிய மீனவர்கள் பழிவாங்கப்படுகின்றனர். இந்நிலை தொடர்ந்தால் பெரும் நெருக்கடி நிலை ஏற்படுமென தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் பெனடிக் குரூஸ் தெரிவித்தார்.

அரசாங்கம் தனது இலாபங்களுக்காக கடலட்டை பண்ணையை உருவாக்குகிறது. இதற்காக கடலட்டை பண்ணைக்கு ஆதரவான கருத்தை நக்டா வெளியிடுகிறது.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் எமது பகுதி வளங்கள் சுரண்டப்படுகிறன. எங்கள் வளங்களை சுரண்டிவிட்டு அரசியல் தீர்வு தந்து பயனில்லை என தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் இன்பம் கருத்து தெரிவித்தார்.

கிராஞ்சி இலவன் குடாவில் சட்டவிரோத கடலட்டை பண்ணைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து 76 நாட்கள் போராட்டம் இடம்பெற்று வருவதாகவும் அரசியல் தரப்புக்கள் கண்டுகொள்வதில்லை ஊடகசந்திப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது.

பலவகைச் செய்தித் துணுக்குகள் - 13.12.2022

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)