பலவகைச் செய்தித் துணுக்குகள் - 11.12.2022

அச்சுவேலி பத்தைமேனி பகுதியில் நேற்றுக் சனிக்கிழமனம காலை ஊனமுற்றவர்களுக்கு நிதி சேகரிப்பதாக சென்ற ஒருவர் பத்தைமேனி பகுதியிலுள்ள வீடுகளுக்கு சென்று நிதி சேகரித்துள்ளார்.

அதேபோல முதியவர் வசிக்கும் வீடொன்றுக்கும் குறித்த நபர் சென்றபோது அனுசரித்த முதியவர்100 ரூபா நிதிப்பங்களிப்பை வழங்கியபோது, இது காணாது சற்று அதிகமாக தாருங்கள் என 500 ரூபாய் பணத்தினை வாங்கியிருந்தார்.
பின்னர் குடிப்பதற்கு கொஞ்சம் தண்ணீர் தாருங்கள் என கேட்டார். முதியவர் வீட்டுக்குள்ளே சென்றபோது முதியவரின் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான கைத்தொலைபேசியை அபகரித்துச் சென்றுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.



காலநிலையினால் உயிரிழந்த கால் நடைகள்

நாட்டில் அசாதரணமாக நிலவும் கடும் குளிர், விடாத மழை, அதனால் ஏற்பட்ட பெரு வெள்ளம், சுழன்றடித்த புயல் காற்று ஆகிய சீரற்ற காலநிலை காரணமாக கடந்த இரு நாள்களில் மட்டும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லை தீவு மாவட்டங்களில் சுமார் 600 கால்நடைகள் ஒரேடியாக உயிரிழந்துள்ளன.

மேலும் 400 கால்நடைகள் வரை படுக்கையில் கிடக்கின்றன எனத் தெரிவிக்கப்படுகிறது..
உத்தியோகபூர்வமாக செய்யப்பட்ட தரவுகளின் அடிப்படையில் 367 கால் நடைகள் உயிரிழந்துள்ளன என வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார பணிப்பாளர் சி. வசீகரன் தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்ட அதிக குளிருடன் கூடிய காலநிலையின் காரணமாக ஒரே நாளில் அதிக கால்நடைகள் உயிரிழந்துள்ளன. இவற்றில் கிளிநொச்சி மாவட்டத்தில் 168 கால்நடைகள் உயிரிழந்துள்ள அதேநேரம், மேலும், 162 கால் நடைகள் முழுமையாக இயங்காத நிலையில் வீழ்ந்து கிடக்கின்றன. இருப்பினும் சிகிச்சைகள் இடம்பெறுகின்றன. இதேபோன்று, முல்லைத்தீவு மாவட்டத்தில் 120 கால்நட்டைகள் உயிரிழந்துள்ளன. 159 கால்நடைகள் படுக்கையில் விழுந்து கிடக்கின்றன. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 49 மாடுகளின் உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டுள்ள அதேநேரம் 17 மாடுகள் அதிக நோய் வாய்ப்பட்டுள்ளன. யாழ்ப்பாணப் பிரிவில் வரும் மருதங்கேணியில் ஒரு பட்டியில் மட்டும் 58 உயர் இன ஆடுகள் கூண்டோடு மரணித்துள்ளன.

இதேநேரம் அதிக நோய்வாய்ப்பட்ட எஞ்சிய 338 கால் நடைகளுக்கும் சிகிச்சை அளிப்பதற்கான மருந்துப் பொருள்களைப் பெற்றுக்கொள்வதிலும் பெரும் நெருக்கடி நிலை அல்லது தட்டுப்பாடு நிலவுவதாக கால் நடை வளர்ப்பு உரிமையாளர்கள் எமக்கு தெரிவிக்கும்போது எம்மாலும் உடனடியாக மாற்று ஏற்பாடுகளை செய்ய முடியவில்லை என்றார் பணிப்பாளர் சி. வசீகரன்.



கஞ்சாவுடன் கைது

கிளிநொச்சியில் 2 கிலோ கஞ்சாவுடன் இரு சந்தேகநபர்கள் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி 57ஆவது படைப்பிரிவின் தலைமை கட்டளை அதிகாரி மற்றும் 573வது படைகளின் கட்டளை அதிகாரி ஆகியோரின் வழிநடத்தலில், இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக விசேட அதிரடிப்படையினர் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது குறித்த 2 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விவேகானந்தா நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்று சோதனைக்குட்படுத்தப்பட்டபோது, குறித்த வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த கஞ்சா பொதி மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட கஞ்சா பொதி 2 கிலோ மதிக்கத்தக்கது என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதன் போது, குறித்த வீட்டிலிருந்த ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் வழக்கு தொடரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


விமான சேவைகள் இரத்து

மண்டாஸ் புயல் கரையைக் கடப்பதன் காரணமாக சில விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.

அதன்படி கொழும்பில் இருந்து சென்னைக்கான விமானம் உட்பட மூன்று சர்வதேச விமானங்களும், 25இற்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானங்களும் இரத்துச் செய்யப்பட்டதாக தெரியவருகிறது.

பிரான்ஸின் ரீயூனியனில் கொழும்பு, அபுதாபி ஆகியவற்றுக்கான சர்வதேச விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தூத்துக்குடி, கடப்பா, மைசூர், பெங்களூரு, மதுரை, விஜயவாடா, மங்களூரு, காலிகட், ஹூப்ளி, கண்ணூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் இருந்து இயக்கப்படும் விமானங்களும் நிறுத்தப்பட்டன.

சில விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

சென்னை விமான நிலையக் குழுவினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சென்னை விமான நிலையத்திற்கு அருகாமையில் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.


தேனாரம் துயர் பகிரும் இணையத்தளம்

பலவகைச் செய்தித் துணுக்குகள் - 11.12.2022

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)