பலவகைச் செய்தித் துணுக்குகள் - 07.12.2022

இராணுவ சிப்பாய் மரணம்

மாங்குளம் கொக்காவிலில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் பயிற்சிக்கு பயன்படுத்தப்பட்ட இராணுவத் தாங்கி மோதி உயிரிழந்ததையடுத்து மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கொக்காவிலில் உள்ள முகாமில் கடமையாற்றிய இராணுவ சிப்பாய் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார் என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் தம்புத்தேகம சிறிமாபுர பகுதியைச் சேர்ந்த 19 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


பலவகைச் செய்தித் துணுக்குகள் - 07.12.2022

மருந்துகள் பற்றாக்குறை - கவனயீர்ப்புப் போராட்டம் - முல்லைத்தீவு

முல்லைத்தீவு மாவட்டத்தில் வைத்தியசாலையில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டை நீக்கக் கோரி மாவட்ட செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் மக்கள் உணவுக்காக பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றார்கள்.
இந்த வகையில் மக்களின் வாழ்க்கைச் செலவு மேலும் மேலும் அதிகரித்து செல்வதுடன் நாட்டில் மருத்துவத் துறையிலும் இது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறுபட்ட முக்கிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதுடன் வைத்தியசாலைகளில் இலவசமாக மருத்துவத்தை பெற்றுக்கொள்ளமுடியாத நிலையில் மக்கள் உள்ளனர்.

இலங்கையில் வறுமைக்குட்பட்ட மாவட்டங்களில் ஒன்றாக முல்லைத்தீவு மாவட்டமும் காணப்படுகின்றது. கிராம புறங்களில் வறுமைக்குட்பட்ட குடும்பங்கள் அதிகளவில் காணப்படும் மாவட்டமாகவும் முல்லைத்தீவு மாவட்டம் காணப்படுகின்றது.

இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவட்ட வைத்தியசாலையில் மருந்துக்கான தட்டுப்பாடு மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான தட்டுப்பாடு என்பனவற்றை நிவர்த்தி செய்யக் கோரி வடக்கு-கிழக்கு பெண்கள் ஒன்றியத்தினரால் நேற்று (06.12.2022) போராட்டம் நடத்தப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இடம்பெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தின் இறுதியில் ஜனாதிபதிக்கான மனு வாசிக்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட செயகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டது.


பலவகைச் செய்தித் துணுக்குகள் - 07.12.2022

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)