
posted 5th December 2022

கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்
மாங்குளம் கல்கூவாறி பகுதியில் வீடொன்றில் மறைத்துவைக்கப்பட்ட நிலையில் உள்ளூர் நான்கு மான் கொம்புகள், இரண்டு துப்பாக்கிகள், 100 கிராம் ஈயம், தீக்குச்சி மருந்து, துப்பாக்கிரவைகள் மற்றும் வாள் மீட்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி மாவட்ட வனஜீவராசிகன் திணைக்களத்தினர் 30.11.2022அன்று மாங்குளம் பகுதியில் உள்ள கல்குவாறிப் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்தவேளை கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இவைகள் மீட்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.
சட்ட மருத்துவ அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர்கள் கைது
நடுவீதியில் கேக் வெட்டியதுடன், தெல்லிப்பழை சட்ட மருத்துவ அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த 10 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மானிப்பாய் பொலிஸார் தமது பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கைது செய்தவரை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று தெல்லிப்பழை சட்ட மருத்துவ அதிகாரியை அழைத்துள்ளனர்.
வீட்டிலிருந்த சட்ட மருத்துவ அதிகாரி கைதானவரை கோப்பாய் மருத்துவமனைக்குக் கொண்டு வருமாறு கூறியுள்ளார்.
நள்ளிரவு 12 மணியவில், வீட்டிலிருந்து சட்ட மருத்துவ அதிகாரி தனது காரில் கோப்பாய் மருத்துவமனை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கோப்பாய் நாவலர் பாடசாலை முன் உள்ள வீதியில் 10இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் வீதியை மறித்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிக் கொண்டிருந்தனர்.
சட்ட மருத்துவ அதிகாரியின் வாகனம் பயணிப்பதற்கு இடமளிக்காது கடமைக்கு இடையூறு விளைவித்ததுடன் அவரை தாக்கவும் முயற்சித்தனர். காரின் கண்ணாடியையும் அடித்து சேதப்படுத்தினர்.
மருத்துவ அதிகாரி உடனடியாக கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து கோப்பாய் பொலிஸார் விரைந்து சட்ட மருத்துவ அதிகாரியை பாதுகாப்பாக மீட்டதோடு கடமைக்கு இடையூறு விளைவித்த 10 இளைஞர்களையும் கைது செய்தனர். அத்துடன், இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்டவர்கள் அரசடி, கோப்பாய், திருநெல்வேலி பகுதி சேர்ந்த இளைஞர்கள் என்று தெரிய வருகிறது.
கரப்பான்பூச்சி வடை
யாழ்ப்பாணம் நகரில் பிரபல சைவ உணவகம் ஒன்றில் விற்கப்பட்ட வடையில் கரப்பான்பூச்சி காணப்பட்டமையால் அந்த உணவகத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நேற்று ஞாயிறு (04) அன்று குறித்த உணவகத்தில் ஒருவர் உழுந்து வடையை வாங்கிக் கொண்டு வீடு சென்றுள்ளார்.
வீட்டில் வைத்து அவர் வடையை சாப்பிட்டபோது கரப்பான் பூச்சி இருப்பது அவதானிக்கப்பட்டு உடனடியாக குறித்த நபர் யாழ்ப்பாண மாநகர சபையின் சுகாதார பரிசோதர்களுக்கு அறிவித்தார்.
இதன் அடிப்படையில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் சுகாதார பரிசோதர்கள் உடனடியாக அந்த உணவகத்துக்கு சென்று விசாரணை நடத்தியதுடன், அதன்மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பயிர்ச்சிகளற்ற, பாரபட்சமான தவிசாளர்கள்
நல்லூர் பிரதேச சபையில் கடந்த 4 வருடங்களாக திண்ம கழிவகற்றலை செயல்படுத்த முடியாமல் மிக மோசமான நிலையில் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் இந்த பாதீட்டுக்கு தவிசாளராக வருபவர் இதற்கான பொறிமுறையை கட்டாயமாகக் கொண்டு வர வேண்டும். ஆனால், இதற்கான தொகை ஒதுக்கப்படவில்லை. எழுப்பிய கேள்விக்கும் மறுமொழி தரப்படவில்லை. இந்த பாதீட்டை எவ்வாறு ஏற்பது? இது அநீதியான விடயம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித் தலைவியும், நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினருமான திருமதி வாசுகி சுதாகர் தெரிவித்தார்.
மேலும், பிரதேச சபைகளில் அதிகமான வருமானத்தைப் பெறுவது நல்லூர் பிரதே சபை. இந்த பிரதேச சபைக்கு உட்பட்ட கிராமங்களின் பல பகுதிகளில் பார்த்தீனியம் மிகப் பெருமளவில் இருக்கிறது. இதனை ஒழிப்பதற்கான முறையான ஒதுக்கீட்டை ஒதுக்கி இருக்க வேண்டும். இதற்கு நல்லூர் பிரதேசபை 20 ரூபாய் ஒதுக்கியுள்ளார்கள். இது முசுப்பாத்தியாக ஒதுக்கியிருக்கிறார்கள் இன்றை நிலையில் ஒரு வட்டாரத்தில் இதனை ஒழிப்பதற்கு இந்த தொகை போதுமா என மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
மக்களை ஏமாளியர்களாக அல்லது உறுப்பினர்களை ஏமாளியர்களாக பார்த்து இந்த பாதீட்டை தயாரித்து இருக்கிறார்கள். இந்த பெரிய சபையில்,இவ்வளவு பேர் இருக்கும் இடத்தில் இந்த பாதீட்டை ஆமோதிக்கிறோம். சிறந்த பாதீடு என எழுந்தமானமாக கதைப்பதற்கு நாங்கள் மக்களால் தெரிவு செய்யப்படவில்லை.
நல்ல ஒரு பாதீட்டை உருவாக்குவதற்கு நாங்கள் பல முன்மொழிவுகளை கொடுத்தாலும் தவிசாளர் தனது நலனும், தனது கட்சி நலனும் சார்ந்து, தனது கருத்துக்களை ஆமோதிப்பவர்களை கொண்டு செல்வதற்கும்தான் சில விடயங்களை எடுத்துக்கொள்கிறார்.
இந்த தவிசாளரின் செயல்பாடானது கடந்து 2 வருடங்களாக பெண்களுக்கு எதிரான ஒரு நடவடிக்கையை செய்துகொண்டிருக்கிறார் என்பதனை அப்பட்டமாக சொல்லிக்கொள்கிறேன். மிக மோசமான நபர் தவிசாளர் என்ற கதிரையில் இருக்கிறார் என மிகவும் ஆணித்தரமாக சொல்லிக்கொள்கிறேன். இவரின் நடவடிக்கை மிகவும் கேவலமான முறையில் இருந்தது என்பதனையும் கூறிக்கொள்கிறேன்.
இந்த பாதீடு பற்றி விவாதிக்கும்போது நான் எழுந்து இதனை ஆமோதிக்க மாட்டேன் என்று கருத்து தெரிவிக்கும் போது ஐக்கியதேசியக் கட்சியில் இருக்கிற புகானந்தன் எழுத்து ஆபாசமாக எதுகைமோனையுடன் கூறியிருந்தார். இதனை தடுத்து நிறுத்துவதுக்கு முடியாத முள்ளந்தண்டு இல்லாது தடுக்க முடியாத தவிசாளர் - என்றும் அவர் சாடினார்.
அத்திவாரம் பலமற்ற அரசியல் கட்சி இனத்திற்கு வழிகாட்டுமா?
தமிழர் விடுதலைக் கூட்டணியின் புதிய தலைவருக்கும் எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக தமிழர் விடுதலைக் கூட்டணியில் தொடர் சர்ச்சைகள் நிகழ்ந்து வருகிறது. தமிழர் விடுதலை கூட்டணியின் கிளர்ச்சி அணியொன்று கட்சியின் கட்டுப்பாட்டை கைப்பற்ற முயற்சித்தது. எனினும், அது வெற்றியளிக்கவில்லை.
இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. தற்போதைய நிலவரப்படி, ஆனந்தசங்கரி தரப்பினரின் கையே ஓங்கியுள்ளது. போட்டிக் குழுவினர் தனியான நிர்வாகம் தெரிவு செய்திருந்த போதும், அவர்களால் சவால் அளிக்க முடியாமல் போனது.
இதை தொடர்ந்து கட்சியின் மத்தியகுழு, பொதுக்குழுக்களை கூட்டிய ஆனந்தசங்கரி தரப்பினர் புதிதாக நிர்வாகத்தை தெரிவு செய்திருந்தனர். இதில் கட்சியின் தலைவராக ப. சிறீதரன் செய்யப்பட்டிருந்தார். கட்சியின் அதிகாரமிக்க பொறுப்பான பொதுச் செயலாளராக வீ. ஆனந்தசங்கரி தெரிவாகியிருந்தார்.
இதைத் தொடர்ந்து கட்சி சுமுக நிலையை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கட்சிக்குள் மீண்டும் குழப்பம் உருவாகியுள்ளது. கட்சியின் புதிய தலைவர் ப. சிறீதரனிற்கு எதிராக கட்சியால் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக முக்கிய பிரமுகர்கள் சிலர் தெரிவித்தனர்.
கடந்தவாரம் இடம்பெற்ற மத்திய செயல்குழு கூட்டத்தில் எழுந்த சர்ச்சைகளை தொடர்ந்து இந்த முடிவு எட்டப்பட்டதாக தெரிய வருகிறது.
மட்டக்களப்பை சேர்ந்த அருண் தம்பிமுத்து, கடந்த தேர்தலில் யாழில் சிறீ லங்கா சுதந்திரக்கட்சி சார்பில் போட்டியிட்ட பவதாரணி ஆகியோர் தற்போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர்கள். அவர்களை கட்சியின் மத்திய செயல்குழுவில் நியமிக்க, கட்சியின் செயலாளர் வீ. ஆனந்தசங்கரி உள்ளிட்ட ஒரு பகுதியினர் விரும்புகின்றனர்.
இதேவேளை, இந்த நியமனங்களுக்கு கட்சியின் தலைவர் உள்ளிட்ட ஒரு தொகுதியினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
புதிய நியமனங்களில் அவசரப்படத் தேவையில்லை, கட்சியின் பொதுச் சபை கூடும் போது புதியவர்களை இணைக்கலாம் என்பது அவர்களின் நிலைப்பாடு. எனினும், குறிப்பிட்ட தனிநபர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை தாம் கொண்டிருக்கவில்லையென அவர்கள் குறிப்பிட்டனர்.
கடந்த வாரம் மீண்டும் மத்திய செயல்குழு கூடி, அருண் தம்பிமுத்து, பவதாரணி ஆகியோர் மத்திய செயல்குழுவில் இணைக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனங்களுக்கு எதிராக செயல்பட்டதுடன், அண்மைக் காலமாக கட்சி நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்காமல் செயல்படுகிறார் என்று குறிப்பிட்டு, தற்போதைய தலைவர் ப. சிறீதரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று தெரிய வருகிறது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)