நிந்தவூர் பொலிஸாரின் முன்மாதிரி
நிந்தவூர் பொலிஸாரின் முன்மாதிரி

“பொலிஸார் தமது கடமைகளுக்கப்பால் மனிதாபிமான செயற்பாடுகளையும் முன்னெடுப்பது வரவேற்கத்தக்கதாகும். இந்த வகையில் நிந்தவூர் பொலிஸாரின் வறுமைக்கோட்டில் வாழும் வறியமக்களுக்கு உதவும் செயற்திட்டம் பாராட்டத்தக்கதாகும்” இவ்வாறு, அம்பாறை பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எம்.டி.ஜே. இரத்நாயக்க கூறினார்.

பதிதாக ஸ்தாபிக்கப்பட்ட நிந்தவூர் பொலிஸ் நிலையத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட, வறுமைக்கோட்டில் வாழும் வறிய மக்களுக்கான உதவி வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

துயர் பகிர்வோம்

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம். நஜீப்பின் சிந்தனையிலான இந்த வறிய மக்களுக்கு உதவும் திட்டத்தின் முதற் கட்டமாக ஐம்பது மிக வறிய குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு தலா ஐந்தாயிரம் ரூபா உலருணவுப் பொருட்களடங்கிய பொதிகள் நிகழ்வில் வழங்கப்பட்டன.

பொலிஸ் நிலைய ஆலோசனை சபைமயினர் மற்றும் பிரதேச நலன் விரும்பிகளது ஆதரவுடன், இந்த உதவித்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்படி நிகழ்வில் நிந்தவூர் பிரதேசத்தைச் சேர்ந்த 50 தமிழ், முஸ்லிம் வறிய குடும்பத்தினர் உதவிப் பொருட்களைப் பெற்றுக்கொண்டனர்.

நிகழ்வில் கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரி.எச்.டி.எம்.எல். புத்திக கௌரவ அதிதியாகவும், நிலைய ஆலோசனை சபைத்தலைவரும், உதவிக் கல்விப் பணிப்பாளருமான ஏ.எம். றசீன், நிந்தவூர் மத்தியஸ்த சபைத் தவிசாளர் பல்கீஸ் ஆகியோரும் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

பிரதம அதிதி, கௌவ அதிதி இருவரும் நிகழ்வில் பொன்னாடை போர்த்தியும் கௌரவிக்கப்பட்டனர்.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இரத்நாயக்க தொடர்ந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.

“சட்டம், சமாதானம், அமைதி நிலை நாட்டுவதைக் கடமையாகக் கொண்ட பொலிஸார் இத்தகைய மனிதாபிமான செயற்பாடுகளிலும் ஈடுபடுவது பாராட்டத்தக்கதாகும்.

நமது சகல மதங்களும் வறுமைப்பட்ட ஏழை மக்களுக்கு உதவுவதன் முக்கியத்துவத்தை நமக்கு எடுத்து இயம்புகின்றது.

அன்று சுனாமி ஆழிப்போரலை தாக்கத்திற்குள்ளான மக்களுக்கு தென்பகுதியிலிருந்தும், வெளிநாட்டு நிறுவனங்கள் மூலமும் கிடைத்த உதவிகளினால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டெழுந்தனர்.

இதன் போது எவ்விதமாகவும் இனமத பேதங்கள் காட்டப்படவில்லை. இலங்கையர் நாமென்ற அடிப்படையிலேயே இந்த உதவிகள் வழங்க்பபட்டன.

இந்த வகையில் இன்று நாட்டிலேற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வறுமைக் கோட்டில் வாழும் மக்கள் அன்றாட வாழ்க்கையில் அனுபவிக்கும் கஷ்ட நிலைகளை உணர்ந்து நிந்தவூர் பொலிஸார் முன்னெடுத்துள்ள இந்த உதவித்திட்டம் வரவேற்புக்குரியதும், பாராட்டத்தக்கதுமாகும்.

இதேவேளை, இன்று விஸ்வ ரூபமெடுத்துள்ளதும் நமது எதிர்கால சந்தியினரை அழிவுக்குள்ளாக்குவதுமான போதைப்பொருள் பாவனையையும், விற்பனையையும் அடியோடு ஒழிக்கப்பட வேண்டும்.

இந்த ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு பொது மக்களின் ஒத்துழைப்பையே முக்கியமாக நாம் எதிர்பார்க்கின்றோம்.

வெவ்வேறு வடிவங்களில் நம் இளம் சமூகத்தினரை ஊடுருவும் இப் போதைப்பொருள் விற்பனையையும் அதன் ஆணி வேர்களாகச் செயல்படும் காரணிகளையும் ஒழித்துக் கட்டுவதற்கு இந்த ஒத்துழைப்பு மிக அவசியமாகும்.

அவ்வாறான ஒத்துழைப்பிற்கு, அதாவது, பொலிஸ் - பொது மக்கள் நல்லுறவு மேலோங்குவதற்கு இத்தகைய நிகழ்வுகள் வழிவகுக்கும்” என்றார்.

நிந்தவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம். நஜீப் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த உதவித் திட்டச் செயற்பாட்டை பிரதேச அமைப்புக்கள் பல விதந்து பாராட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நிந்தவூர் பொலிஸாரின் முன்மாதிரி

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)