
posted 30th December 2022

நிந்தவூர் பிரதேச சபையின் 58 ஆவது சபை அமர்வு நிந்தவூர் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் கௌரவ தவிசாளர் எம்.ஏ.எம். அஸ்ரப் தாஹிர் தலைமையில் இடம்பெற்றது.
சபையின் வழமையான நடடிக்கைகளை தொடர்ந்து நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளராகவிருந்த பி. உமர் கத்தாவின் மறைவையொட்டி மர்ஹூம் உமர்கத்தா அவர்களுடைய அரசியல் செயற்பாடுகள், ஊரின் பொதுநல செயற்பாடுகள் மற்றும் விவசாயம் சார்ந்த அவருடைய காத்திரமான செயற்பாடுகள் குறித்தும் கௌரவ தவிசாளர் தாஹிர் அவர்களினால் சபையில் நினைவு கூரப்பட்டதுடன் கௌரவ உப தவிசாளரினாலும் அன்னாருடைய கடந்தகால செயற்பாடுகள் குறித்து உரைகள் ஆற்றப்பட்டன.
இதன் போது அன்னாருடைய ஞாபகார்த்தமாக நிந்தவூர் பிரதேச சபையின் ஆளுகைக்குற்பட்ட பொது இடமொன்றிற்கு அவருடைய பெயரினை இடுவதாக தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது.
நிந்தவூர் பிரதேசத்தில் அதிகரித்துவரும் போதை பாவனை மற்றும் விற்பனை ஒழிப்பு தொடர்பாக கடந்த சபை கூட்டங்களின் போது கலந்துரையாடப்பட்டதிற்கமைவாகவும், நிந்தவூர் அனர்த்த முகாமைத்துவ அணியினரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமைவாகவும், நிந்தவூர் பிரதேச சபையின் அதிகாரத்திற்குற்பட்ட அனைத்து மையவாடிகளிலும் போதை பாவனை மற்றும் விற்பனையுடன் சம்பந்தப்பட்டவர்கள், சமூக கலாச்சார விழுமியங்களை மீறுபவர்கள் போன்றோரை அடக்கம் செய்வதற்கான பிரத்தியோகமான இடம் அடையாளப்படுத்தப்பட்டு பதாகை அமைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிந்தவூர் பொதுச்சந்தை கட்டிடத்தில் அமைந்துள்ள கடைகளுக்கான கேள்வி மனு மூண்று முறை கோரப்பட்டும் யாரும் விண்ணப்பிக்காமையினால் நிந்தவூரில் உள்ள சகல இறைச்சிக் கடைகள் மற்றும் கோழி இறைச்சிக் கடைகள் பொதுச்சந்தை வளாகத்திற்குள் திறக்கப்பட வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் சிறி வங்கா சுதந்திர கட்சி ஆகிய மூன்று கட்சிகளினுடைய உறுப்பினர்களின் ஒப்புதலுக்கமைவாக தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது.
நிந்தவூர் பிரதேத்தில் அமைந்துள்ள இராணுவ முகாம் பொறுத்தமற்ற இடத்தில் அமைந்துள்ளமை மற்றும் பொது மக்கள் எதிர் நோக்கும் அசௌகரியங்கள் போன்றவற்றை கருத்தில் கொண்டு குறித்த இராணுவ முகாம் அமைக்கப்ட்ட 2019 ஆம் ஆண்டு தொடக்கம் தவிசாளரினால் முன்னெடுக்கப்பட்டு வந்த முயற்சிகள் குறித்து சபையினருக்கு தெளிவுபடுத்தப்பட்டதுடன், குறித்த இராணுவ முகாமை அகற்றுவது தொடர்பில் ஜனாதிபதியை நேரில் சந்திப்பதற்காக சபையின் மூண்று கட்சி உறுப்பினர்களினாலும் ஏகோபித்த தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது.
உலக வங்கியினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் உள்ளூர் அபிவிருத்தி உதவித் திட்டத்தின் வினைத்திறன் மதிப்பீட்டு செயன்முறை மூலம் தரப்படுத்தலின் அடிப்படையில் சிறந்த உள்ளூராட்சி மன்றமாக தெரிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் கிடைக்கும் நிதியில் பெரும் பகுதியை பிரதான வீதியில் அமைந்துள்ள பழைய பிரதேச சபை வளாகத்தில் நான்கு மாடிகளைக் கொண்ட வர்த்தக கட்டிடத் தொகுதியொன்றை அமைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)