நிந்தவூர் பிரதேச சபை பாதீடு நிறைவேற்றம்

நிந்தவூர் பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான பாதீடு (வரவு செலவுத்திட்டம்) ஏகமானதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சபை அமர்வில் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் 2023 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை சபை உறுப்பினர்களின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆளுகைக்குட்பட்ட நிந்தவூர் பிரதேச சபையின், குறித்த பாதீடு சபையில் அங்கீகரிக்கப்பட்டது.

குறிப்பாக ஆளும் தரப்பான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் உட்பட ஏனைய கட்சிகளான சிறீலாங்கா முஸ்லிம் காங்கிரஸ், சிறீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களும் பாதீட்டை வரவேற்று உரையாற்றியதுடன், நாட்டிலும், பிரதேசத்திலும் நிலவும் பெரும் பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களின் கஷ்ட நிலமைக்களுக்கு மத்தியிலும் மக்களுக்கு சுமை ஏற்றாத வகையில் 2023 பாதீடு அமைந்திருப்பதாகவும், சிறந்த, வரவேற்கத்தக்க பாதீட்டை சமர்ப்பித்த தவிசாளர் தாஹிரை வெகுவாகப் பாராட்டுவதாகவும், பாதீட்டு அறிக்கை மீது உரையாற்றிய உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

மேலும் தவிசாளர் தாஹிர் சமர்ப்பித்த 2023 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் சபையின் மொத்த வருமானம் 187244220 ரூபாவாகவும், மொத்த செலவீனம் 187242220 ரூபாவாகவும் மிகை 2000 ரூபாவாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இதனை சபை உறுப்பினர்கள் ஏகமனதாகவும் அங்கீகரித்து, பாதீடு நிறைவேறியது.

பாதீட்டை சமர்ப்பித்து தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் உரையாற்றுகையில்,

“நாட்டின் இன்றைய நிலையில் வருமானத்தை அதிகரிப்பதற்கு மக்களிடமிருந்து மேலதிக வரி அறவீடுகளை மேற்கொள்ள வேண்டிய சவால் நிலைக்கு மத்தியில் நியாய பூர்வமாக இந்த பாதீட்டைத் தயார்படுத்தியுள்ளோம்.

இளைஞர் மற்றும் மகளிர் அபிவிருத்தி, முன்பள்ளிக்கல்வி, விசேட தேவையுடையோர் நலன், கல்விச் செயற்பாடுகள், வாழ்வாதார உதவிகள் போன்ற பணிகளை விசேடகவனத்திற் கொண்டும் பாதீட்டு ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன” என்றார்.

பிரதி தவிசாளரும், சிறீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினருமான வை.எல். சுலைமாலெவ்வை பாதீடு மீது உரையாற்றுகையில்,

“வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்ற வகையில் சிறந்த தொரு பாதீட்டை சமர்ப்பித்த தவிசாளரைப் பாராட்டுவதுடன், தவிசாளர் மக்கள் நலன் கருதி முன்னெடுத்துவரும் நற்பணிகளுக்கு என்றும் ஆதரவு நல்குவோம்” என்றார்.

உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எல். றியாஸ் ஆதம், முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான அன்ஸார் மாஸ்டர், எம்.ரி சப்றாஸ் உட்பட பலரும் பாதீட்டை வரவேற்றும், பாராட்டியும் உரையாற்றினர்.

நிந்தவூர் பிரதேச சபை பாதீடு நிறைவேற்றம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)