நிந்தவூரில் சாதனையாளர் கௌரவிப்பு
நிந்தவூரில் சாதனையாளர் கௌரவிப்பு

நிந்தவூர் கலை, இலக்கியப் பேரவை மூன்று தலைமுறையினரை ஒன்று சேர்க்கும் சாதனையாளர் கௌரவிப்பு விழா ஒன்றை நடத்தவிருக்கின்றது.

பேரவையின் கலை, இலக்கிய நிகழ்ச்சித் திட்டத்தின் ஓர் அங்கமாக இந்த சாதனையாளர் கௌரவிப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிந்தவூர் கலை, இலக்கியப் பேரவையின் தலைவர் கவிஞர். டாக்டர் ஏ.எம். ஜாபீர் தலைமையில் எதிர்வரும் 17 ஆம் திகதி சனிக்கிழமை கௌரவிப்பு விழா நடைபெறும்.

நிந்தவூர் பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் நடைபெறவிருக்கும் இந்த விழாவில், நிந்தவூரின் கலை, இலக்கிய ஆளுமைகளான மூவர் வாழ்நாள் சாதனையாளர் மற்றும் சாதனையாளர் விருதுகள் வழங்கி விழாவில் கௌரவிக்கப்படவுள்ளனர்.

இதன்படி, நிந்தவூர் மண்ணுக்குப் பெருமை சேர்த்து வரும், இலங்கையின் தமிழ் இலக்கியப் பரப்பின் முதுபெரும் எழுத்தாளுமை, ஆய்வாளர், கவிஞர், கதைஞர் சிரேஷ்ட சட்டத்தரணி கலாபூஷணம் எஸ். முத்துமீரான், வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியும், கல்வியலாளர், கவிஞர், பேச்சாளர் எஸ். அகமது சாதனையாளர் விருது வழங்கியும், இளைய தலை முறை எழுத்தாளரும், தேசிய விருதுகளைப் பெற்றவருமான பல்கலைக்கழக மாணவன் ஹஸன் குத்தூஸ் ஜெம்ஸித் சாதனையாளர் விருது வழங்கியும் கௌரவிக்கப்படவுள்ளனர்.

மேலும், மூன்று தலைமுறையினரை ஒன்று சேர்க்கும் இந்த விழாவில் கௌரவிக்கப்படும் சாதனையாளர்கள் பற்றி முறையே கவிஞர் பாவேந்தல் பாலமுனை பாறூக், சித்திலெவ்வை ஆய்வுப் பேரவையின் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.என். மர்சூம் மௌலானா, அம்பாறை மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் ரீ.எம். றிம்சான் ஆகியோர் சிறப்புரைகளை ஆற்றுவர்.

இதேவேளை புதிய அமைப்பான மாற்று அசைவியக்க நூலகத்திற்கென கிழக்கு மாகாண பண்டபாட்டலுவல்கள் திணைக்களம் சார்பில் திணைக்கள மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.எல்.தௌபீக், நூல்கள் தொகுதி ஒன்றினை விழாவில் வைத்து அசைவியக்க தலைவர் இலக்கியன் முர்ஷித்திடம் கையளிக்கவுமுள்ளார்.

நிந்தவூர் கலை, இலக்கியப் பேரவை தொடர்ச்சியான கலை, இலக்கிய நிகழ்வுகளை நடத்திவருவதுடன், கலை, இலக்கியவளர்ச்சிக்கான செயற்பாடுகளை முன்னெடுத்து உயிரோட்டமுள்ள அமைப்பாக செயற்பட்டு வுருவது குறிப்பிடத்தக்கது.

நிந்தவூரில் சாதனையாளர் கௌரவிப்பு

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)