
posted 4th December 2022
தமிழ் கூறும் நல்லுலகெங்கும் புகழ்பெற்ற உலக அறிவிப்பாளர் பீ.எச். அப்துல் ஹமீதுக்கு கிழக்கிலங்கையின் நிந்தவூரில் பெருவரவேற்பும் கௌரவமும் அளிக்கப்பட்டது.
நிந்தவூர் அல் - அஷ்ரக் தேசியப் பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இளைய தலைமுறையினருக்கான வழிகாட்டல் மாநாட்டில் பிரதம அதிதியாகவும், விசேட பேச்சாளராகவும் அவர் கலந்து கொண்டார்.
இந்த மாநாட்டு நிகழ்வுக்கு வருகை தந்த உலக அறிவிப்பாளர் அப்துல் ஹமீதுக்கு பாடசாலை வளாகத்தில் பெருவரவேற்பளிக்கப்பட்டதுடன்,
மாநாட்டு நிகழ்வில் பாடசாலை சமூகத்தினால் பொன்னாடை போர்த்தியும், விருது வழங்கியும் பெரும் கௌரவம் அளிக்கப்பட்டது.
இந்த மாநாட்டில் கௌரவ அதிதியாகக் கலந்து கொண்ட அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ. ஜெகதீஸன், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் பாடசாலை அதிபர் ஏ. அப்துல் கபூர், ஒழுங்கமைப்பாளர் எஸ்.எச்.எம். செய்யித் றஸ்மி மௌலானா மற்றும் பழைய மாணவர் சங்க, பாடசாலை அபிவிருத்தி சங்க முக்கியஸ்தர்களின் பங்கு பற்றுதலுடன் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
“உலக அறிவிப்பாளர் அப்துல் ஹமீத் தமிழுக்கும், தமிழ் மொழிக்கும் தம்மை அர்ப்பணித்து உலகப் புகழ்பெற்றுள்ளதுடன் அவரது குரல் வளம் மட்டுமல்ல, அவர் நடமாடும் அறிவாலயமாகவும் திகழ்கின்றார்” என மேலதிக அரசாங்க அதிபர் ஜெகதீஸன் இதன்போது புகழாரம் சூட்டினார்.
அறிவிப்பாளர் பீ.எச். அப்துல் ஹமீதின் வருகை முக்கியத்துவமிக்கதெனவும் நிகழ்வில் உரையாற்றிய பலரும் விதந்து பாராட்டினர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)