
posted 18th December 2022
வடக்கில் காலநிலை சீரின்மையால் உயிரிழந்த கால்நடைகளுக்கு நட்டஈடு பெற்று கொடுப்பதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளர் தெரிவித்தார்.
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
வடக்கு மாகாணத்தில் கடந்த வாரம் நிலவிய சீற்ற காலநிலையினால் 500இற்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்திருந்தன. அந்த உயிரிழந்த கால்நடைகள் உரிமையாளர்களுக்கு உரிய நஷ்டஈட்டைப் பெற்று கொடுப்பதற்குரிய நடவடிக்கை நாங்கள் முன்னெடுத்துள்ளோம்.
கால்நடை உரிமையாளர்களுக்கு அந்த நட்டஈட்டை விரைவில் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மேலும் உயிரிழந்த கால்நடைகளில் பல கால்நடைகள் பதிவில்லாத நிலையில் காணப்படுகின்றன.
எனவே உயிரிழந்த கால்நடைகளின் பண்ணையாளர்கள், உயிரிழந்த கால்நடைகளின் பதிவிலக்கம் மற்றும் ஏனைய தரவுகளை உடனடியாக அந்தந்த மாவட்ட கால்நடைகள் திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு வழங்கும் இடத்து அவர்களுக்குரிய நட்டஈட்டைப் பெற்றுக் கொடுக்க இலகுவாக இருக்கும்.
வடக்கு ஆளுநரின் அறிவுறுத்தல் - வழிகாட்டலுக்கமைய எங்கள் பிரதேசத்தில் கட்டாக்காலிகளாக அல்லது திறந்த வெளிகளில் உள்ள கால்நடைகளை பாதுகாப்பது தொடர்பாக சில நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 80 வீதமான கால்நடைகள் திறந்தவெளி மூலமாகவே தமது உணவை பெற்றுக் கொள்ளுகின்றன. குறிப்பாக இங்கே உள்ள மாடுகள் குறைந்த உற்பத்தி திறன் கொண்ட மாடுகளாகவே காணப்படுகின்றன.
வடக்கு மாகாணத்தில் ஏறத்தாழ 4 இலட்சம் மாடுகளும், கிட்டத்தட்ட 40 ஆயிரம் எருமை மாடுகளும், 3 இலட்சத்துக்கு குறைவான ஆடுகளும் வளர்க்கப்பட்டு வருகிறன. இது ஏனைய மாகாணங்களோடு ஒப்பிடும்போது மிக அதிகமான தொகையாக்க் காணப்படுகின்றது.
ஆனால் இந்த 4 லட்சம் மாடுகளில் 3 லட்சம் மாடுகள் பால் உற்பத்திக்காக பயன்படுத்தப்படுவதில்லை. இவை பெரும்பாலும் திறந்த வெளிகளிலே மேய்ச்சலுக்கு அனுப்பப்பட்டு தாங்கள் விரும்பிய இடங்களில் நீரை குடித்து வளர்ந்து வருகின்றன. திறந்தவெளி வளர்ப்பு மாடுகளாக அதேபோல கலப்பின பெருக்கத்துக்கு பெரும்பாலும் உட்படாமல் நாட்டின மாடுகளாகவே இவை காணப்படுகின்றமைதான் பால் உற்பத்தித் தன்மை மிகக் குறைவாகவோ அல்லது இல்லை என்று சொல்லும் அளவுக்கு காணப்படுகின்றது.
இருந்தாலும் இந்த கால்நடைகளை வளர்க்கின்ற பண்ணையாளர்களுக்கு இது வருமானத்தை ஈட்டுவததற்கு காரணம், இலங்கையின் இறைச்சித் தேவையில் 30 விதமான பங்கு வடக்கு மாகாணத்தில் இருந்தும், 35 வீதமானது கிழக்கு மாவட்டத்திலிருந்தும்தான் பூர்த்தி செய்யப்படுகின்றது.
ஆகவே வருடாந்தம் மிக அதிகளவான கால்நடைகளை இறைச்சிக்காக அனுப்பி எங்கள் பண்ணையாளர்கள் மிக அதிகளவான வருமானத்தை பெற்றுக் கொண்டிருப்பதை காணக்கூடியதாக உள்ளது என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)