
posted 9th December 2022
அம்பாறை மாவட்டத்திலுள்ள நிந்தவூர்ப் பிரதேசத்தில், கால நிலைமாற்றத்தினால் ஏற்பட்டுள்ள கடல் சீற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள உக்கிர கடலரிப்பைத் தடுப்பதற்கு தற்காலிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நேற்று (வியாழன்) நிந்தவூர் கடற்கரைப்பூங்காவை அண்மித்த பகுதியில் ஏற்பட்ட உக்கிர கடலரிப்பு கடற்கரை வீதியின் ஒரு பகுதியை மிக மோசமாகப் பாதித்துள்ளதுடன், கடற்கரையை அண்டியிருந்த சில மீனவர் வாடிகள், தென்னந்தோப்புக்களையும் காவு கொண்டுள்ளன.
திடீரென ஏற்பட்ட இந்த கடலரிப்பு அனர்த்த நிலமையை இராணுவத்தினர் சகிதம் நேரில் பார்வையிட்ட நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம். அப்துல் லதீப், உடனடியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் கரையோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளுடனும் தொடர்பு கொண்டு அனர்த்த நிலமையைத் தெளிவுபடுத்தினார்.
இதனையடுத்து தற்பொழுது மிக மோசமாக கடலரிப்பு ஏற்பட்டுள்ள பகுதியில் கருங்கற்களையிட்டு தற்காலிக தடை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த சில வருடங்களாக நிந்தவூர்ப் பகுதியில் அடிக்கடி இவ்வாறான கடலரிப்பு அனர்த்தம் ஏற்பட்டு பாதிப்புக்கள் ஏற்பட்டு வருகின்ற போதிலும் கடலரிப்பைத் தடுப்பதற்கான நிரந்தர நடவடிக்கைகள் எதுவும் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை.
உள்ளுர் மக்கள் பிரதி நிதிகள் உட்பட கடற்றொழில் அமைச்சர் கூட நிரந்தர தீர்வுக்கு ஆவன செய்யப்படுமென உறுதி அளித்து வந்த போதிலும், காத்திரமான நடவடிக்கைகை எதுவும் முன்னெடுக்கப்படவில்லை.
காலத்திற்கு காலம் கடலரிப்பு ஏற்படுத்துவதும், கடலரிப்பு ஏற்படுவததும், கடலரிப்பு அவலங்கள் தொடர்வதுமே வழக்கமாகியுள்ளன.
நிந்தவூர் பிரதேசத்தையே கடல் விழுங்கிக் காவுகொள்ளும் வரை இந்த அரசியல் வாதிகள் காத்திருக்கிறார்களா? என பிரதேச மக்கள் விசனத்துடன் அங்கலாய்க்கின்றனர்.
இதேவேளை, நிந்தவூரில் ஏற்பட்டுள்ள கடலரிப்பு அனர்த்த பாதிப்பு நிலமையைப் பார்வையிடுவதற்கு தினமும் பெருமளவில் மக்கள் திரண்ட வண்ணமிருப்பதுடன், தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ள கருங்கல்லிட்டு தடையேற்படுத்தும் நடவடிக்கை எதிர்பார்க்கும் நிவாரணமாக அமையாது எனவும் பொது மக்கள் அதிருப்தியும் தெரிவிக்கின்றனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
விருப்பமான நகரங்கள், இருப்பிட வசதிகள், வாகன வசதிகள், விமானப் பயணங்கள், இன்னும் பல.... கிளிக் செய்து உங்கள் விடுமுறையினைச் சந்தோஷமாகக் களியுங்கள்.