
posted 11th December 2022
யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகளவில் வாழை தோட்டங்கள் நிறைந்த நீர்வேலி பகுதியில் நேற்றிரவு காணப்பட்ட கடும் காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலையினால்அதிகளவு வாழை மரங்கள், வாழை குலையுடன் முறிந்து விழுந்து உள்ளதாக வாழைத் தோட்ட உரிமையாளர்கள் தெரிவித்தனர்
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் புயலாக மாற்றமடைந்துள்ளதனால் வடக்கு கிழக்கு பகுதிகளில் கடும் காற்றுடன் கூடிய மழையுடனான சீரற்ற காலநிலை நிலவியதன் காரணமாக கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகளவில் வாழைத் தோட்டங்கள் நிறைந்த நீர்வேலி பகுதியில் உள்ள அதிகளவு பயன் தரு வாழை மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வாழைத் தோட்ட உரிமையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளார்கள்.
தான் பெருமளவில் நிதியினை செலவழித்து வாழைகளை பராமரித்திருந்தோம். நேற்று திடீரென ஏற்பட்ட சீரற்ற காலநிலையினால் பயன் தரு வாழை மரங்கள் அடியோடு முடிந்து விழுந்துள்ளன இது எமக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதோடு வாழ்வாதாரத்தில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் நாங்கள் மீண்டு வருவதற்கு இன்னும் ஆறு மாதங்களுக்கு மேல் செல்லும் என கவலை வெளியிட்டனர்.
நேற்று முன்தினம் வியாழன் இரவு திடீரென ஏற்பட்ட கடும் காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலையின் காரணமாக தமது வாழைகள் முறிந்து விழுந்துள்ளதால் தமக்கு அரச அதிகாரிகள் நட்டஈட்டை பெற்று தரவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)